Aug 28, 2016

தமிழ் சினிமாவில் பாடல்கள்...



தமிழ் சினிமாவில் பாடல்கள் #1




                                      


இந்திய சினிமாக்களில் பாடல்களின் முக்கியத்துவம் என்னவென்று நம் அனைவருக்கும் நன்கு தெரியும் என்பதால் நேரடியாக விஷயத்துக்கு போய்விடலாம்.

தமிழ் சினிமாக்களில் பாடல்கள் படமாக்கப்பட்ட விதம், கதையை சுவாரஸ்யப்படுத்த அவை உதவிய விதங்கள் குறித்து எழுத வேண்டும் என்பது பல வருடமாக நிறைவேறாத திட்டங்களுள் ஒன்று. இப்போது அதை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

கூடுமானவரை தினமும் ஒரு பாடல் குறித்து அலச வேண்டும் என்பது இப்போதைய திட்டம். பார்ப்போம்!

இந்தத் தொடரில் பாடல்கள் படமாக்கப்பட்ட இடங்கள், கேமரா கோணங்கள் & மூவ்மெண்டுகள், எடிட்டிங், சிறப்பு சப்தங்கள், நடிகர்களின் முக பாவனைகள், நடனம், கதைப் போக்கிற்கு அப்பாடல் உதவிய விதம், ஆர்ட் டைரக்‌ஷன் உள்ளிட்ட பலவற்றை நான் பார்த்து ரசித்த அனுபவங்களின் அடிப்படையில் அலசப்போகிறேன். அதற்காக, நான் இங்கு குறிப்பிடும் பாடல்களும் / விஷயங்களும் மட்டுமே சிறந்தவை அன்று பொருள் அல்ல!


இனி முதலாவது பாடலைப் பார்ப்போம்!

இது போன்ற தொடர் எழுத வேண்டும் என்று தோன்றியதுமே சட்டென நினைவில் வந்தப் பாடல் அலைபாயுதே படத்தின் “ பச்சை நிறமே ” பாடல் தான்!
                                                                   


நிறங்களை மையமாக வைத்து ஒவ்வொரு நிறத்துக்கும், தான் காதல் கொண்டிருக்கும் பெண்ணிற்குமான தொடர்பை விவரித்திருக்கும் இந்தப் பாடல். பாடலுக்கு பெரிதும் உதவியவை இசையும், ஒளிப்பதிவும் தான்!

ஒவ்வொரு வர்ணத்தைப் பற்றிய வரிகள் வரும்போதும் அதன் பின்னணி முழுக்கவே அந்த வண்ணம் மட்டுமே பிரதானமாக தெரியும். பச்சை நிறம் பற்றி பாடும் போது ஆற்றங்கரைக்கு அப்பால் புல் கட்டைத் தூக்கிச் செல்லும் கிராமவாசிகள் கூட பச்சை நிறத்திலேயே உடையணிந்து நடந்து போவார்கள்!
முதல் ஃப்ரேம் ஆரம்பமாகும் போதே பச்சை இலைகளினூடே கேமரா ஊர்ந்து செல்லும். இசைக்கு ஏற்ப நளினமாக பச்சை வண்ண உடையில் உடலையும் உடையையும் வளைத்துக்கொண்டிருப்பார் கதாநாயகி.
ஸ்லோமோஷனில் படமாக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சிகள் மெல்ல மெல்ல நம் மனதிலும் ஊடுருவும்.

சூரிய ஒளியானது ஒரு பொருளின் மீது படும் போது அப்பொருள் கூடுதல் அழகு பெறும். இதை கேமராவில் கொண்டு வருவது சிறப்பானதொரு கலையாகும். இந்தப் பாடலில் 1.05 நொடியிலிருந்து 2.14 வரை சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தைப் பற்றி பாடும் போது சூரிய ஒளியைக் கையாண்டு ஃப்ரேம் பண்ண விதங்கள் அட்டகாசமாக இருக்கும்.

அலைபாயுதேவிற்கு முந்தையப் படங்களில் பெரும்பாலும் நெற்றிப்பொட்டு இல்லாமல் நடித்திருப்பார் ஷாலினி. சிவப்பு நிறத்தப் பற்றி வர்ணிக்கும் போது அவர் வைத்திருக்கும் பெரிய சைஸ் சிவப்பு நெற்றி பொட்டு அவருக்கு கூடுதல் அழகை கொடுத்திருக்கும். சிவப்பு மிளகாயைக் கடிக்கும் காட்சியில் நமது நாக்கில் காரம் படர்ந்துவிடும்... படமாக்கப்பட்ட விதம் அந்த மாதிரி!

அடுத்தடுத்து சொல்லப்போகும் நிறத்தை, பாடல் வரிகள் ஆரம்பிக்கும் முன்னதாகவே விஷுவலாக நமக்கு காட்டி விடுவார்கள்

நீல நிறத்தைப் பற்றி பாடும் போது அழகான நீல நிறத்தின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்பட்டிருக்கும்.

3.21 -லிருந்து நாயகி ஓடிக்கொண்டிருக்க நாயகன் துரத்திக்கொண்டிருப்பார். கேமராவும் பல கோணங்களில் கூடவே துரத்தும்.  ஃபிலிமில் படமாக்கப்பட்ட காலங்களில் சினிமாஸ்கோப் லென்ஸ்களை பயன்படுத்தியபோது ஒருவர் ஓடுவதை / துரத்துவதை ( மூவ்மெண்டுகளுடன் ) படமாக்கும்போது அவரது தலை, கால் எதுவும் ‘கட்’ ஆகாமல் படமாக்குவதும் ஒரு கலைதான். இதிலும் அது சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். 3.41 -இல் ஓடிக் களைத்து தனது வேகத்தைக் குறைப்பார் நாயகன். அப்போது இசையும் தனது வேகத்தைக் குறைத்துக் கொள்ளும். ஒளியும் ஒலியும் ஒருசேர கையாள்வதின் ரிதம் இதுபோன்ற காட்சிகளில்தான் இருக்கிறது!

க்ருமை நிறத்தின் கார்காலம் குறித்து பாடல் வரிகள் வரும்போது மழைக்கால மேக மூட்டத்துடன் ஒரு ஷாட் வந்து போகும். இது போன்ற கால நிலைக்காகவும் காத்திருக்க வேண்டும். அதை கச்சிதமாக பாடல்களினிடையே இணைக்கவும் வேண்டும். இதெல்லாம் சேர்த்துத்தான் ஒரு பாடலுக்கு அழகியல் தன்மையை மேலும் மெருகேற்ற செய்யும்.

வெண்மை நிறம் பற்றி பாடும் போது,  ஃப்ரேம் முழுக்க வெண்ணிற milky shade ஒன்று படர்ந்துவிடும். பழுப்பு நிற மண், பச்சை வண்ண மரங்கள் மீது கூட மெல்லிய வெண்மை படர்ந்திருக்கும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால்,  சொல்ல வந்த கான்செப்டை முன்னிறுத்தி படமாக்கப்பட்டதில் இந்தப் பாடல் சிறப்பிலும் சிறப்பான ஒன்றாகும்.

கேமரா மூவ்மெண்டுகள், தேவையான இடங்களில் இசைக்கேற்ப ஸ்லோ மோஷன் ஷாட்டுகள், அதற்கேற்ப நடன அசைவுகள், அவர்களின் உடை தேர்வு, படமாக்கப்பட்ட இடங்கள், இளம் நாயகன் - நாயகியின் ஃப்ரெஷ்ணஸ் என எல்லாமே சிறப்பாக இருக்கும்.

Dissolve, Fade In - Fade Out  போன்ற டிபிகலான ஸ்பெஷல் ஃஎபெக்டுகள் எதுவும் இப்பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்காது என்பது கூடுதல் ஆச்சர்ய செய்தி. பாடலின் கடைசி ஷாட்டில் மட்டும் தாஜ்மாஹாலின் பின்னணியில் நாயகன் எகிறி குதிக்கும் போது fade out பயன்படுத்தப்பட்டுருக்கும்!

அடுத்தப் பாடலில் பார்ப்போம் நண்பர்களே...

No comments:

Post a Comment