Dec 2, 2013

சிந்தனையைத் தூண்டிய எழுத்து!

இமயமலைப் பயணத்தின் அனுபவங்களை ஓரளவிற்கேனும் நம்பகத்தன்மையுடனும் சுவாரஸ்யமாகவும் நண்பர்களுக்கு பகிர வேண்டும் எனும் நோக்கில் தான் “ப்ளாக்”-ல் விளையாட்டாக எழுத ஆரம்பித்தேன். ஆனால் சற்றும் எதிர்பாரா வண்ணம் சாரு ஆன்லைனில் லிங்க் கொடுத்து எனது பொறுப்புகளை இன்னும் கூடுதலாக்கிவிட்டார் சாரு.


பயணத்தின் அனுபவங்களை எழுதுமாறு என்னைத்தூண்டியதும் சாருவின் எழுத்துதான். சமீபத்திய சந்திப்பின்போது,

“ சாருவின் எழுத்து வாசகனை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்கின்றது. வாசகனுக்கு முன்பாக பல வாசல்களைத் திறந்துவிடுகின்றது... ”

- என்று சிலாகித்து கூறினார் அராத்து. தனது தற்கொலைக் குறுங்கதைகளைப் பற்றின பேச்சினூடே , அதன்  ஆரம்பப்புள்ளி சாருவின் எழுத்திலிருந்து துவங்கியதைப் பற்றியும் விவரித்தார். அதுமட்டுமின்றி எழுத்தானது, வாசிப்பவனின் சிந்தனைகளை ஒரு கட்டுக்குள் அடக்கிவிடாமல் சுதந்திரமாக சிந்திக்க தூண்டுவதாகவும், தனக்கான பாதையினை நோக்கி இயங்க வைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டுமென சாருவும் அராத்துவும் ஒருசேர குறிப்பிட்டனர்!

கொஞ்சம் யோசித்துப் பார்த்த பின்புதான், இந்தப் பயணத்தைப் பற்றி என்னை எழுதத்தூண்டிய/ பயணத்தைக் குறித்த சிந்தனைகளைத் தூண்டியதும் எப்பொழுதோ படித்த  ( கடந்த வருடம் )  சாருவின்  எழுத்தும் விவரிப்பும் தான் என்பதை புரிந்துகொண்டேன்!

இதோ... அந்த சிந்தனையைத் தூண்டிய எழுத்து உங்கள் பார்வைக்கும்...






(  “ ராஸ லீலா ”- கண்ணாயிரம் பெருமாளின் கதை 11-ல் )



மேட்டூரில் காலை ஏழரை மணிக்கு இருக்க வேண்டும் என்பது திட்டம்; ஆனால், கூட வந்த ஒரு நண்பனின் ‘ ஆசனவாய்த் தொந்தரவினால் ’ சேலத்திலிருந்து கிளம்பும்போதே ஒரு மணி நேரம் தாமதம். மேட்டூர் போய்ச் சேர்ந்தபோது மணி பத்து. ஏழரையை உத்தேசித்து, மேட்டூர் பொதுப்பணித் துறையினர் தயாரித்து வைத்திருந்த இட்லி, தோசை, மீன் குழம்பு, மீன் வருவல் , கோழிக் குழம்பு எல்லாம் ஆறி ஜில்லிட்டுப்போயிருந்தன. ஆறின கஞ்சி பழங்கஞ்சி. தோசையெல்லாம் வறட்டு வறட்டென்று காய்ந்துபோயிருந்தது. ஆனால் மீன் வறுவல் ஆறிப்போயும் ருசியாக இருந்தது. காவிரியிலிருந்து பிடித்து அப்படியே சமைத்தது. ஐஸில் வைக்கப்பட்ட சென்னை மீனுக்கும் இதற்கும்தான் எத்தனை வித்தியாசம். இதைச் சுடச்சுட சாப்பிட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ‘ ஆசனவாய்ப் பிரச்சனை ’ நண்பரைச் சபித்துக்கொண்டே சாப்பிட்டான் பெருமாள்.

மீனின் பெயர் கேட்டான்… ‘Rogue’ என்றார்கள். வெறும் பெயரல்ல, காரணப் பெயர். ரவுடித்தனமாக மற்ற சிறிய மீன்களைப் பிடித்து சாப்பிட்டுவிடும் என்பதால் இந்தப் பெயர்.

பாவம் சங்கரா மீன். எவ்வளவு பெரிய மீனாக இருந்தாலும் சங்கரா மீன் அது பாட்டுக்கு சிவனே என்று கடலில் கிடக்கும். எந்த சக மீன்களுக்கும் எந்த இடைஞ்சலையும் தராது. அப்படிப்பட்ட அப்பாவி மீனுக்கா சங்கரா மீன் என்று பெயர் வைக்க வேண்டும்?  இந்த ‘ரோக்’ மீனுக்கல்லவா அந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும்? ஆனால் ரோக் மீன் ருசியில் கிட்டத்தட்ட trout மீனைப் போல் இருந்தது. Trout மீனுக்குத் தமிழ் வார்த்தை இல்லை. நன்னீர் மீன் என்று சொல்லலாம். ஸ்படிகம் போன்ற தூய்மையான தண்ணீரில் வளர்க்கப்படும் மீன். காஷ்மீரில் சாப்பிட்டிருக்கின்றான் பெருமாள். அதற்குப் பிறகு அதை உண்ணும் சந்தர்ப்பம் வரவில்லை.

மேட்டூரிலிருந்து ஹொகனேக்கலுக்கு 1942-ல் தயாரிக்கப்பட்ட ஒரு விசைப்படகில் கிளம்பினார்கள். டீசலில் இயங்கும் படகு அது. மணி 10.30.  ஐந்து மணி நேரப் பயணம். அதுவும், நதியின் போக்குக்கு எதிர்த்திசையில். படகுக்குள் சென்றதுமே காலணிகளைக் கழற்றிவிட்டான் பெருமாள். காலணிகளோடு நீச்சல் அடிப்பது கடினம். சுற்றிவரப் பார்த்தான். சமுத்திரத்தைப் போல் கண்காணாதவரை நிறைந்திருந்தது காவிரி. கரையே தெரியவில்லை. அவனுக்கு நீச்சல் தெரியும்தான். ஆனால் இவ்வளவு தூரத்தையும் கடக்க அவன் இன்றும் நீச்சல் காளி இல்லையே?

நீச்சல் காளியை அவன் தனிஷ்கோடியில் சந்தித்தான். தனுஷ்கோடியிலிருந்து ஸ்ரீலங்காவின் தலைமன்னார் வரை – 40 கி.மீ தூரம் – வெகு அனாயாசமாக நீந்திக்கடந்துக்கொண்டிருந்தவர் அவர்.   தனுஷ்கோடியில் குதித்து, 12 இலிருந்து 14 மணி நேரம் இடைவிடாமல் நீந்தி தலைமன்னார் சேர்ந்து, அங்கு இரண்டு மூன்று நாட்கள் இருந்துவிட்டு, மறுபடியும் நீந்தி தனுஷ்கோடி வந்து சேருவாராம். இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. சமீபத்தில் கூட ப்யூலா செளத்ரி என்ற நீச்சல் வீராங்கனை தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தியிருக்கின்றார். ஜிப்ரால்டர்  ஜலசந்தியைக் கூட நீந்திக் கடந்தவர் இந்த ப்யூலா. ஆனால் இதுபோன்ற நீச்சல் வீரர்களுக்கும், நீச்சல் காளிக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் உள்ளது. நீச்சல் வீரர்களோடு கூடவே பாதுகாப்புக்காக விசைப்படகுகளில் ஆட்கள் செல்வார்கள். மின்விளக்கு வசதி, வழிகாட்டுவதற்கு ‘கைட்’ போன்ற எல்லா வசதியும் உண்டும். அதோடு, தண்ணீரிலேயே நீண்டநேரம் இருப்பதால் உடம்பில் சுளுக்கு, பிடிப்பு எதுவும் ஏற்பட்டுவிடாமல் இருக்க உடம்பு பூராவும் ‘க்ரீம்’ தடவிக்கொள்வார்கள் நீச்சல் வீரர்கள். இது எல்லாவற்றையும்விட அவர்களுக்குள்ள அதிமுக்கிய வசதி என்னவென்றால், நீந்தமுடியவில்லையென்றால் நீச்சலை ரத்து செய்துவிட்டு படகில் ஏறி அமரலாம். ஆனால் நீச்சல் களிக்கு இதுபோன்ற வசதிகள் ஏதும் கிடையாது. களைப்பு ஏற்பட்டாலும் நீச்சலை நிறுத்த முடியாது, நிறுத்தினால் மரணம். மூச்சைப் பிடித்துக்கொண்டு தலைமன்னார் வரை நீந்தியே ஆக வேண்டும்; ஒற்றை ஆளாக… 40 கி.மீ… 14 மணி நேரம்…

“ வழியில் திமிங்கலம் போன்ற கடல் மிருகங்களால் ஆபத்து ஏற்படாதா? ” என்று அவரைச் சந்தித்தபோது கேட்டான் பெருமாள்.

“ அதெல்லாம் நிலத்தில் உள்ளவர்களின் கேள்வி தம்பி… அதுங்க பாட்டுக்கு அதுங்க வேலயப் பாத்துக்கிட்டு போவும். நம்மள அண்டாது…” என்றார் சிரித்துக்கொண்டே. பெரும் கானகங்களில் மூர்க்க விலங்குகளோடு வாழும் துறவிகளின் பதிலைப் போலிருந்தது நீச்சல் காளியின் பதில். இதில் ‘ மூர்க்க விலங்குகள் ’ என்ற பதமே பெருமாளைப் போன்ற சராசரிகளினுடையது.

மிஞ்சிப் போனால் அந்தக் காவிரியில் ஒரு மணிநேரம் நீந்தலாம் என்று நினைத்துக்கொண்டான். ம்ஹூம்… அதற்கும் வாய்ப்பில்லை. கூட வந்தவர்களுக்கு நீச்சல் தெரியாதாம்.

” பெருமாள், என்னை நீ காப்பாற்றாவிட்டால் உன்னைக் கொன்று விடுவேன் ” என்றான் நரேன். அந்த வாக்கியத்தில் இருந்த இலக்கணப் பிழையை எண்ணி ரசித்தான் பெருமாள்.

ஆனால் பாலு down to earth மனிதன். நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

“ தோ பார். கரய வுட்டுக் கெளம்பி வர அர அவ்ர்தான் ஆவுது. பேசாம படகத் திருப்பிடுவோம். பை ரோட் போய்க்கலாம்… எனக்கு நீச்சல் தெரியும். ஆனா ஒன் அவர்தான் நீஞ்ச முடியும். அதுக்கே வாய்ல நுரை தள்ளும்…”

ஆனல இதெல்லாம் வெற்று பயம் என்று தெரிந்தது. காரணம் படகின் மேலேயே ஒரு பரிசல் இருந்தது.

இருந்தாலும் அந்த ஐந்து மணி நேரப் பயணத்தில் பெருமாள் மது அருந்தவில்லை. போதையுடன் நீச்சல் அடிக்க முடியாதே!

நதியின் நீரோட்டம் வாலைக்குமரி ஒருத்தியின் திமிறும் உடற்கட்டை ஞாபகப்படுத்தியது. காமவுணர்வை வெகுவாகத் தூண்டும் காட்சியாக இருந்தது.

மரண பயம்… காம உணர்வு… திரும்பவும் Georges Bataille இன் தத்துவார்த்தப் பிரச்சனைக்கு வந்து சேர்ந்துவிட்டோம். மரணம் – காமம் – மரணம் – ஜனனம்… இது ஒரி வட்டச் சுழற்சி எனத் தோன்றியது.

எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்தான் பாலு. அவன் பேச்சை யாரும் கேட்கவில்லை. ஆசாமி தூங்கிவிட்டான். தூக்கமும் ஒருவகையில் மரணம்தானே? ஆனால் ஒரு நிச்சயம் இருக்கிறது, ‘ எழுந்துவிடுவோம் ’ என்று. மரணத்தில் அப்படியில்லை, மறுபிறவி பற்றி அவ்வளவு நிச்சயமில்லை. ‘ பிறவாதிருத்தல் வேண்டும்…’ எல்லா ஞானிகளும் இதையேதான் சொல்கிறார்கள். பிறவாமை வேண்டும்… பிறவித் துன்பம்… மனித வாழ்க்கை அவ்வளவு துயரகரமானதா என்ன?

பாலு விழித்துக்கொண்டுவிட்டான். மேட்டூரிலிருந்து கிளம்பி மூன்று மணிநேரம் ஆகியிருக்கும். இப்போது பெருமாளுக்கு பயம் நீங்கிவிட்டது. காரணம், காவிரி அங்கே குறுகியிருந்தது. கரையில் ஓரிரு குடிசைகள் தெரிந்தன. ஒரு குடிசையிலிருந்து மற்றொரு குடிசைக்கு இரண்டு கி.மீ தூரமாவது இருக்கும். குடிசைக்குப் பக்கத்தில் ஒன்றிரண்டு ஆடுமாடுகள். வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார்கள். படகின் முன்பக்கம் நரேன் இருந்தான். பெருமாளும், பாலுவும் வால் பகுதியில். அப்போது… கரையில் ஒரு குடிசை… குடிசையின் வாசலில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். அக்கம்பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமில்லை. மின்சாரம் இல்லை, தொலைக்காட்சி இல்லை, புத்தகங்கள் இல்லை. அந்தப் பெண்ணுக்கு எழுதப் படிக்கத் தெரியுமா என்பது சந்தேகமே.

அவள் அமர்ந்திருந்தது ஒரு ஓவியத்தைப் போல் இருந்தது. ஒரு சிறிய பாறையில் அமர்ந்து கன்னத்தில் கைவத்தபடி எதையோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் எதையும் பார்க்கவில்லை. சூன்யத்தில் நிலைத்திருந்தது அவள் பார்வை. அவள் மனதில் இப்போது எதைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பாள்?

திடீரென்று பாலி அந்தப் பெண்ணைப் பார்த்து கையசைத்தான்., அந்தப் பெண்ணும் அதைக் கவனித்துவிட்டாள். அவள் கண்களில் ஒரு மின்னல் பொறி. இவர்கள் சற்றும் எதிர்பாராத வண்ணம் சட்டென்று அவளும் பாலுவைப் பார்த்து கையசைத்தாள். ( இதைப் பற்றி பாலு பின்னர் விவரிக்கும்போது, “அவள் ஒன்றும் உடனே கையசைத்துவிடவில்லை. கொஞ்ச நேரம் பொறுத்து aim பண்ணி, நல்ல பர்ஸனான்னு பார்த்துத்தான் கையசைத்தாள் ” என்றான். ) ஆனால், என்ன ஒரு கொடுமை… அவளுக்கும் படகுக்கும் நடுவே ஒரு குன்று வந்து குறுக்கிட்டது. அவளை மீண்டும் பார்க்க முடியுமா என இவர்கள் மனம் பதற்றம் கொண்டது.

நல்லவேளை… படகு ஓரிரு நிமிடங்களில் அந்தக் குன்றைச் சுற்றி வந்தபோது மீண்டும் அவள் தெரிந்தாள். அதற்குள் அவள் வேறு ஓர் இடத்திற்கு ஓடி வந்திருந்தாள். இப்போது பாலு தாமதிக்கவில்லை, உடனே கொடுத்தான் ஒரு பறக்கும் முத்தம்.

என்னடா இது வாழ்க்கை. அதை என்னவென்று சொல்வது? அவளும் கொடுத்துவிட்டாள் ஒரு பறக்கும் முத்தம்.

கிட்டத்தட்ட ஒரு பரவச நிலையில் இருப்பவளைப் போலிருந்தாள் அவள். காலங்காலமாக மனித முகத்தையே பார்த்திராதவளைப் போலிருந்தது அவளது பரவசம். ஒருவேளை இப்படி ஒரு விசைப்படகை இப்போதுதான் பார்க்கிறாள் போலும்.

அவளுடைய அடுத்த கட்ட நடவடிக்கைதான் இன்னும் ஆச்சர்யமானது. தான் இருந்த இடத்தை விட்டு படகு தன் பார்வையை விட்டு மறையாதவாறு ஓடி வந்தபடியே கையினால் ’ வா, வா ’என்று பாலுவை நோக்கி சைகை காண்பித்தாள். அவளது உடல் அசைவுகள் அவளது பதற்றத்தையும், ஆர்வத்தையும், தனிமையின் துயரத்தையும், அத்தனிமையிலிருந்து விடுபட்டு மனித முகங்களைக் கண்ட வெறி கொண்ட சந்தோஷத்தையும் கலந்த அந்த அபூர்வம் – அந்தக் கொந்தளிப்பு இன்னும் ஓரிரு கணங்களில் தன்னை விட்டுப் போய்விடுமோ என்ற அடிவயிற்றுக் கதறலையும் வெளிப்படுத்திக்கொண்டிருந்தன.

பாலு, படகை விட்டு வெளியே வந்து நின்று, ‘ இங்கே படகில் ஆட்கள் இருக்கிறார்கள், என்னால் வர முடியாது ’ என்பது போல் சைகை காட்டினான்.

பெருமாள் விக்கித்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆனால், அந்தப் பெண் விடவில்லை. இவர்கள் பார்வையிலிருந்து மறையும் வரை அவள் படகின் திசையில் ஓடி வந்துக்கொண்டிருந்தது தெரிந்தது.

இவ்வளவு சுருக்கமான – இவ்வளவு தீவிரமான – ஒரு காதல் கதையை பெருமாள் அதுவரை கண்டதுமில்லை, கேட்டதுமில்லை.

**********************************************************************************************************************

கதையின் ஆரம்பத்தில் காவிரியை வர்ணிக்க இவ்வாறு குறிப்பிடும் சாரு,

// சுற்றிவரப் பார்த்தான். சமுத்திரத்தைப் போல் கண்காணாதவரை நிறைந்திருந்தது காவிரி. கரையே தெரியவில்லை //

“ கண்காணாதவரை “ மற்றும் ” கண்ணுக்கெட்டிய தூரம் “ எனும் இருவேறு வார்த்தை பிரயோகங்களை தேவைக்கேற்ப எவ்வாறு பயன்படுத்துகின்றார் என்பதை கதையின் இறுதியில் வரும் வாசகங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம்!

// குடிசையின் வாசலில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண். அக்கம்பக்கம் கண்ணுக்கெட்டிய தூரம் யாருமில்லை //

இதுதான் வார்த்தை விளையாட்டு. மேம்போக்காக வாசித்தால் இந்த ஜாலங்களை உணராமலேயே கடந்து போகக் கூடும்.


சங்கரா மீனுக்கும் ரோக் மீனுக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்குகின்றார். ட்ராட் மீன் காஷ்மீரில் தான் கிடைக்குமென தகவல் தெரிவிக்கின்றார்.
வாசிப்பினூடே ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்து செல்கின்றார்...// மரண பயம்… காம உணர்வு… திரும்பவும் Georges Bataille இன் தத்துவார்த்தப் பிரச்சனைக்கு வந்து சேர்ந்துவிட்டோம். மரணம் – காமம் – மரணம் – ஜனனம்… இது ஒரி வட்டச் சுழற்சி எனத் தோன்றியது. // என உலக இலக்கியவாதியையும், தத்துவத்தையும் அறிமுகப்படுத்துகின்றார்.

இவை தவிர, ராஸ லீலாவில் வாசகனின் சிந்தனைகளைத் தூண்டக்கூடியவை ஏராளம்...ஏராளம்!


சரி... கொஞ்சம் இமயமலைக்கு வருவோம்.



இமயமலைப் பயணத்தின் போது பெரும்பாலான புகைப்படங்கள் வேனுக்குள் அமர்ந்தவாறு போகிறப்போக்கில் எடுத்தவை!

சாரு, காவிரி நதியோர குன்றில் குறிப்பிட்ட இளம்பெண்ணைப் போல இமயமலையிலும் சில பெண்களைக் காண நேரிட்டது. ( ஆனால் தீவிரம் மிக்க காதல் கதை கிடையாது )

ரொதாங் பாஸ் -ஐ கடக்க மலையேறும்போது சாலையோரத்தில் நின்றபடி மலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் ஒரு இளம்பெண். சுற்றும் முற்றும் ஒருவருமில்லை. ஆடு மேய்ப்பவளாக இருக்கக்கூடும் என தோன்றுமளவிற்கு கண்ணுக்கு புலப்பட்ட தூரம் வரை மந்தைகளும் இல்லை!

அங்கு நின்று எதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்திருப்பாள் என்பதற்கு ஆயுள் முழுவதும் பதில் கிடைக்கப்போவதில்லை எனக்கு.


                          



அடுத்து,
ஜிஸ்பாவைக் கடந்து சார்ச்சு பயணித்த அதிகாலைப் பொழுதொன்றில்
சிறுமி ஒருத்தி தன்னந்தனியாக  “ஐந்தாங்கல் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளது ஒவ்வொரு அசைவும், தனக்குத்தானே சிரித்து/ பேசிக்கொண்ட அந்த கொள்ளை அழகும் இதுவரையிலான உலகசினிமாக்களில் பதிவு செய்யப்படாதது! அது ஒரு கவிதை! வார்த்தைகளை யோசிக்கத்தூண்டாத கவிதை!

                          


                                 
                           

பரத்பூர் எனும் தற்காலிக கிராமத்தில், தற்காலிக கூடாரமொன்றில் பயணிகளுக்காக காத்துக்கொண்டிருக்கும் கூடார பணிப்பெண் ஒருவரை மேலேயுள்ள படத்தில் காணலாம்!

                             
மலையுச்சி ஒன்றில் தன்னந்தனியாக அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு பெண்மணி ஒருவர்... இவர் உடன் வந்தவர்கள் ஒருவரும் கண்களுக்கு புலப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!


Oct 31, 2013

ஆரம்பம் : ஓர் திரையரங்க அலசல்

                                                                  

 

 






எனது சொந்த ஊர் திருப்பத்தூராக (வேலூர் மாவட்டம்) இருந்தாலும் சிறு வயதிலிருந்தே சென்னைக்கும் எனக்கு மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
எனது உறவினர்கள் பலரும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் குடியமர்ந்துவிட்டபடியால் ஒவ்வோர் கோடைவிடுமுறையும் சென்னையில்தான் கழியுமெனக்கு. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு விடுமுறை நாட்கள் குறைவு என்பதால் அம்மா சென்னைக்கு அழைத்து வரமாட்டார்கள்.

ஒரு மாத விடுமுறையில் பத்து முறைக்கும் மேலாக மெரினா கடற்கரைக்கு செல்வோம். அதற்கு அடுத்தபடியாக செல்வது சினிமாவுக்குதான். தவிர டிடி மெட்ரோ- 2 சானலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும், பட்டம் விடுவதும், கிரிக்கெட் விளையாடுவதும் சென்னையில் மேலும் ஈர்த்த விஷயங்களாகும்.


சென்னையைப் பொறுத்தவரை புதுப்படங்கள் நான்கு பகுதிகளில் நான்கு திரையரங்குகளில் ரிலீஸாகும்.

அதாவது, வடசென்னையில் பாரத், மகாராணி, அகஸ்தியா, எம்.எம்.தியேட்டர், பாண்டியன் போன்ற அரங்குகள்தான் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவற்றுள் பாரத் தியேட்டரில்தான் சூப்பர் ஸ்டாரின் படங்கள் ரிலீஸாகும்.


                                                                    




மத்திய சென்னையில் ( புரசைவாக்கம் , கீழ்பாக்கம் ,அயனாவரம் ) அபிராமி காம்ப்ளக்ஸ் மற்றும் சங்கம் காம்ப்ளக்ஸ் முக்கிய அரங்குகளாகும். ரஜினி காந்தின் படங்கள் அபிராமியில் ரிலீஸாகும்.

ஈகா மற்றும் மோட்சம் காம்ப்ளக்ஸிலும்
சமயங்களில் புதுப்படங்கள் ரிலீஸாகும். ”கரகாட்டக்காரன்”  மோட்சத்திலும், “பூவே உனக்காக” அனு ஈகாவிலும் ரிலீஸானது.

ஈகா , அனு ஈகா காம்ப்ளஸில் ஒரு செண்டிமெண்ட் உண்டு. ஈகா அரங்கில் ரிலீஸாகும் தமிழ்ப் படங்கள் ஓடாது. ஹிந்திப்படங்கள் ஹிட்டடிக்கும். இதற்கு மாறாக அனுஈகா அரங்கில் ரிலீஸாகும் ஹிந்திப்படங்கள் தோல்வியைத்தழுவும். தமிழ்ப்படங்கள் வெற்றிப்பெறும்!




                                                         


                                                                             





மவுண்ட் ரோட் பகுதிகளுக்கு வந்தோமேயானால் தேவி காம்ப்ளக்ஸ் தான் மிக முக்கியமானதாகும். அடுத்தபடியாக ஆல்பட் (காம்ப்ளக்ஸ்) , சாந்தி, அலங்கார், ஆனந்த், லிட்டில் ஆனந்த், அண்ணா, உட்லண்ட்ஸ் மற்றும் உட்லண்ட்ஸ் சிம்பொனி போன்றவை  அன்றைய கால கட்டங்களில் முக்கிய அரங்குகளாக இருந்தன. அலங்கார், ஆனந்த் போன்றவை தற்போது இல்லை. சத்யம் காம்ப்ளக்ஸ் 90 -களுக்குப் பிறகே புகழ் பெற ஆரம்பித்தது. அதிலும் 2000-ற்குப் பிறகுதான் அபரிவிதமான வளர்ச்சி ஏற்பட்டது. இந்தப் பகுதியில் ரஜினிகாந்தின் படங்கள் ஆல்பட் அரங்கில் தான் ரிலீஸாகும்.

இவற்றைத்தவிர மெலோடி, ஜெயப்பிரதா போன்ற அரங்குகள் தமிழ் சினிமாக்களைப் புறக்கணித்து விட்டதால் , ஹம் ஆப்கே ஹைய்ன் க்ஹோன் , ரங்கீலா போன்ற ஹிந்திப் படங்கள் வருடங்களைக் கடந்து ஓடின. கெயிட்டி, கேஸினோ போன்ற அரங்குகளில் தெலுங்கு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க ஆங்கில (மொழி அவசியமில்லாத) திரைப்படங்களும் ரிலீஸாகும்.

                                                                    








திரைத்துறையினர் வசிக்கும் வடபழனி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உதயம் காம்ப்ளக்ஸ் ( உதயம், சந்திரன், சூரியன் மற்றும் தற்போது மினி உதயம் ) முக்கிய அரங்காகும். தவிர, காசி, கமலா, ஏவிஎம் ராஜேஸ்வரி, எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் போன்றவைகளும் குறிப்படத்தகுந்த அரங்குகளாகும். மேலும் விருகம்பாக்கம் நேஷ்னல், தேவிகருமாரி காம்ப்ளக்ஸ் ( மூன்று அரங்குகள் ) , வடபழனி ராம் ( தற்போது திருமண மண்டபமாக பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டது ) போன்றவற்றிலும் படங்கள் ரிலீஸாகும். ராம் தியேட்டரில்தான் விஜயகாந்தின் ”ஆன்ஸ்ட் ராஜ்” பார்த்தேன்.

இந்த நான்கு ஏரியாக்கள்தான் நகரின் மிக முக்கிய திரைப்பட அரங்குகள் நிறைந்த பகுதிகளாகும். ரஜினிகாந்தின் படங்கள் ஆல்பட், அபிராமி, பாரத், கமலா ( அல்லது சமயங்களில் உதயம் ) இவற்றில்தான் ரிலீஸாகும். தவிர, பெரம்பூரில் உள்ள ஸ்ரீபிருந்தா அரங்கிலும் ரஜினிகாந்தின் படங்கள் தவறாமல் ரிலீஸாகும். ஆகமொத்தம் சிட்டி ஏரியாவில் ஐந்து அரங்குகள்.



                                                                 



எனது அண்ணன்கள் ( பெரியம்மாவின் பிள்ளைகள்) சென்னை நகருக்குள் டிக்கெட் கிடைக்காவிட்டால், அம்பத்தூர் ராக்கி அல்லது முருகன் அரங்கிற்கு சென்று முழுப்படத்தையும் நின்றுக்கொண்டேப் பார்த்ததை பெருமையுடன் சொல்லிக் கேட்டிருக்கின்றேன்.

எனது உறவினர்கள் வண்ணாரப்பேட்டை, சிந்தாதரிப்பேட்டை, ஓட்டேரி, வடபழனி பகுதிகளில் வசித்து வந்ததால் அந்தந்தப் பகுதிகளின் அரங்குகள் நன்கு பரிச்சயம் எனக்கு.

சிட்டியில் திரையரங்குகளின் ஆதிக்கம் ஒரு எல்லையோடு முற்றுப்பெறுகின்றன. மவுண்ட் ரோட், அசோக் நகர் இந்த நேர்க்கோட்டிற்கு அப்பால் தெற்கில் குறிப்பிடும்படி எந்த அரங்கும் பிரபலமாகவில்லை. மக்கள் அதிகம் வசிக்கும் திருவான்மியூர், அடையாறு, பெசண்ட் நகர் பகுதிகளில் தியாகராஜா, ஜெயந்தி, கணபதிராம் போன்ற மொக்கையான அரங்குகளே இருந்தன. ஈசிஆர் சாலையில் ப்ரார்த்தனா ( ட்ரைவ் இன் ) ஆராதனா போன்றவை ஓரளவிற்கு பிரபலம். தற்சமயம் மாயாஜால் மிகவும் பிரபலம்.

கிண்டி, பல்லாவரம், சோழிங்கநல்லூர், குரோம்பேட்டை , தாம்பரம் போன்ற மக்கள் தொகை மிகுந்த பகுதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் கூட பிரபலமான அரங்குகள் இல்லாதது சற்று ஆச்சர்யமான விஷயம்தான்
( பரங்கிமலை ஜோதி விதிவிலக்கு ) .

ஆக, சென்னை நகரைப் பொறுத்தவரை  ஒரு திரைப்படம் அதிகபட்சமாக 4 அரங்குகளில்  ரிலீஸாகும். ரஜினி காந்தின் படங்கள்  எனில் 5 அல்லது 6 அரங்குகளில் ரிலீஸாகும். இதே காலகட்டங்களில் தெலுங்கு படங்கள்
ஐதராபாத் நகரில் மட்டுமே 35 அரங்குகளில் ரிலீஸாகும் என சிலாகித்து கூறுவான் எனது தெலுங்கு நண்பன் ஒருவன்.

பெரிய பட்ஜெட் படங்கள் முதலீட்டினை குறுகிய காலத்தில் எடுக்க கூடுதல் அரங்குகளில் ரிலீஸாகும் சூழல் காலப்போக்கில் உருவானது.  ரிலீஸான இரண்டாவது நாளே  வெளிவரும் திருட்டு விசிடி-யும், ஆன்லைன் பைரஸியும்

இதற்கு முக்கிய காரணமாக அமைந்தன. அந்த வகையில் 2007-ஆம் ஆண்டு வெளியான ”சிவாஜி”  திரைப்படம் சென்னை நகரில் மட்டும் 17 அரங்குகளில் ரிலீஸானது.  பின்னர் ஐநாக்ஸ், பி.வி.ஆர், எஸ்கேப், ஏ.ஜி.எஸ் , ஃபேம் நேஷ்னல் போன்ற மல்டிப்ளக்ஸ்களின் அணிவகுப்பால் அனைத்து அரங்குகளிலும் திரைப்படம் வெளியாக வேண்டியது காலத்தின் கட்டாயமானது!

சரி... ஆரம்பத்திற்கு வருவோம்!

அஜித்திற்கு அட்டகாசமான பாக்ஸ் ஆஃபிஸ் ஓப்பனிங் இருப்பதாக பரவலான கருத்து உள்ளது. மங்காத்தாவிலும் அது நிரூபணமானது.  தீபாவளிக்கு ரிலீஸாகும் திரைப்படங்களுள்  “ஆல் இன் ஆல் அழகுராஜா”-விற்காக பெரும்பான்மையான முக்கிய அரங்குகளை கைப்பற்றியதாக சில வாரங்களுக்கு முன்பாகவே ஸ்டுடியோ கிரீனின்  விளம்பரம் மூலம் அறிய முடிந்தது.  ஆனானப்பட்ட சத்யம் காம்ப்ளக்ஸிலேயே சத்யத்தில் 2 காட்சிகள்,  சாந்தம் அரங்கில் 2 காட்சிகள் எனவும் ரிலீஸிற்கு  மூன்று வாரங்களுக்கு முன்பாகவே விளம்பரப்படுத்தினர் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்தினர்.  அபிராமி காம்ப்ளக்ஸில் முக்கிய அரங்கு அபிராமி 7 ஸ்டார் தான். அதனையும் கூட ஆழகுராஜா பிடித்துவிட்டார்.

தக்க பதிலடி கொடுக்க நினைத்ததாலோ என்னவோ அக்டோபர் 31-ஆம் தேதியே ஆரம்பம் ரிலீஸாகும் என  அறிவிப்பு வெளியானது. கொஞ்சம் கொஞ்சமாக அரங்குகளை பிடிக்கத் தொடங்கியது ஆரம்பம். ரீலீஸ் நாளன்று பார்த்தால்... அம்மாடி...

மாயாஜால் காம்ப்ளக்ஸில் மொத்தமுள்ள 16  அரங்குகளிலும் சேர்த்து 91 காட்சிகள்.

சத்யம் காம்ப்ளக்ஸில் 4 அரங்குகளில் 16 காட்சிகள். ( ஆனால் அனைத்து அரங்குகளிலுமே ஆரம்பம் தான் என நண்பர் ஒருவர் தெரிவித்தார் )

எஸ்கேப்
- 4 அரங்குகள் 16 காட்சிகள்.
S2 பெரம்பூர் -
4 அரங்குகள் 16 காட்சிகள்.
S2 திருவான்மியூர் - 2 அரங்குகள் 8 காட்சிகள்.

தேவி காம்ப்ளக்ஸ் - 4 அரங்குகள் 16 காட்சிகள்.
அபிராமி -
4 அரங்குகள் 16 காட்சிகள். உதயம்   - 4 அரங்குகள் 16 காட்சிகள்.
சங்கம்   - 3 அரங்குகள் 12 காட்சிகள்.
PVR மல்டிப்ளக்ஸ் 5 அரங்குகள் 25 காட்சிகள்.
ஐநாக்ஸ் -
4 அரங்குகள் 16 காட்சிகள்.
ஃபேம் நேஷ்னல் -
4 அரங்குகள் 16 காட்சிகள்.
AGS வில்லிவாக்கம் 5 அரங்குகள் 25 காட்சிகள்.
AGS ஓ.எம்.ஆர் 4 அரங்குகள் 20 காட்சிகள்.
விருகம்பாக்கம் தேவிகருமாரி 3 அரங்குகள் 12 காட்சிகள்.

வடபழனி, அசோக் நகர் பகுதிகளில் உதயம் காம்ப்ளக்ஸ், காசி, கமலா, AVM ராஜேஸ்வரி, SSR பங்கஜம், தேவி கருமாரி காம்ப்ளக்ஸ், ஃபேம் நேஷ்னல் என மொத்த ஏரியாவும் ஆரம்பம் தான். இவற்றுள் கமலா அரங்கில் கடைசி நேர பரபரப்பில்தான் ஆரம்பத்தை இரண்டு அரங்குகளிலும் திரையிட முடிவெடுத்தனர். ( வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது )

தவிர, ஆல்பட் - பேபி ஆல்பட், உட்லண்ட்ஸ் - உட்லண்ட்ஸ் சிம்பொனி, ஸ்ரீபிருந்தா , பாரத், மகாராணி, பரங்கிமலை ஜோதி , குரோம்பேட்டை வெற்றி போன்றவற்றிலும் ஆரம்பம் ஆட்டமாட தவறவில்லை.

கோயம்பேடு ரோகினி காம்ப்ளக்ஸ், கொளத்தூர் கங்கா காம்ப்ளக்ஸ், அம்பத்தூர் ராக்கி மற்றும் முருகன் காம்ப்ளக்ஸ், பூந்தமல்லி சுந்தர் அனைத்திலுமே நான்கு அரங்குகளும் ஆரம்பம்தான்.

தமிழ்சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக இதுபோன்றதொரு நிகழ்வினைக் காண்கின்றேன் நான். மங்காத்தாவைக் காட்டிலும் நேற்றைய தினம் வசூலில் பேயாட்டம் ஆடியதாக நம்பமுடிகின்றது.

அன்றைய காலகட்டங்களில் ஒரு திரைப்படம் எப்படி இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓடும். அதன் தரத்திற்கேற்ப 50 , 100 , 150 , 175, 200, 250 , 300 நாட்களைக் கடந்தும் ஓடும். பொழுதுபோக்கு அம்சம் வேறொன்றும் இல்லாததால் திரைப்படங்கள் சர்வ சாதாரணமாக 50 அல்லது 100 நாட்களைக் கடக்கும். இனி வெள்ளிவிழாக் காணும் படங்களை கனவிலும் காண முடியாது என்றே நினைக்கின்றேன். ஊரில் உள்ள எல்லா தியேட்டரிலும் படத்தைக் காட்டி, பணத்தை அள்ளும் ட்ரெண்ட் உருவாகிவிட்டதை இனி யாராலும் தடுக்கமுடியாது போல...

ஆரம்பம் - ஒரு தோராயக் கணக்கு பார்ப்போம்.

சென்னை நகரில் மட்டும் முதல் நாள் 500 காட்சிகள் எனவும் ஓர் அரங்கிற்கு சராசரியாக 500 இருக்கைகள் எனவும் கணக்கில் கொண்டால்,

500 X 500 X 120 = 3,00,00,000 ( மூன்று கோடி ) இது தோராயக் கணக்குதான். உண்மையான கணக்கு இன்னும் கூடுதலாகத்தான் இருக்கும். தவிர, தமிழகம் மற்றும் உலகெங்கிலும் கணக்கெடுத்தால் முதல் நாள் வசூல் இந்திப்படங்களுக்கு நிகராக இருக்குமென்பதில் துளியும் ஐயமில்லை!


எது எப்படியோ... பல ஆண்டுகள் ஒதுங்கியிருந்த தயாரிப்பாளர்  ஏ.எம்.ரத்னம் சந்தோஷமடைந்தால் சரி...

Jan 26, 2013

விஸ்வரூபமும் திருட்டு டிவிடி-யும்!



வெளிநாடுகளிலிருந்தே தமிழ்த் திரைப்படங்களின் திருட்டு டிவிடிகள் இறக்குமதியாகின்றன என்பது பரவலான தகவல். இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படம் திருட்டு டிவிடியாகவோ, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவோ வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

சிறு முன்குறிப்பு:

2001 ஆம் ஆண்டு திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தபிறகுதான் முதன்முதலாக ஃபிலிம் சிட்டியில் சினிமா ஷூட்டிங் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இரண்டரை மணி நேரம் நாம் பார்க்கும் சினிமாவை எத்தனை நாள், எத்தனைப் பேர் கஷ்டப்பட்டு உருவாக்குகின்றனர் என்பதை புரிந்துக்கொண்டேன். ஒரு நாள் முழுவதும் உழைத்து அதிகபட்சமாக 20 முதல் 30 ஷாட்களே எடுப்பார்கள். அதிலும் எத்தனை ரிஹல்ஸல்கள்... எத்தனை டேக்குகள்... பார்க்க நமக்கே கடுப்பாக இருக்கும். ஆனால் நடிப்பவர்கள், இயக்குனர், உதவி இயக்குனர், ஒளிப்பதிவாளர்கள் ( குறிப்பாக உதவி ஒளிப்பதிவாளர்கள் ), லைட்மேன்கள், கார்பெண்டர்கள், சமையல் காரர்கள், மேக்- அப் மேன்கள்... என ஒவ்வொருவரும் பம்பரமாக சுழன்றுக்கொண்டிருப்பார்கள்... மிகக்கடுமையான உடல் உழைப்பும், பொறுமையும் வேண்டும்.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம், ரோஜா திரைப்படத்தின் ஆரம்ப காட்சி சூரியன் உதிப்பதற்கு முன்னதாக உள்ள அதிகாலை காட்சியாகும். பனி அடர்ந்த காட்டிற்குள் எடுத்திருப்பார்கள். அந்த காட்சியை எடுக்க, நள்ளிரவிற்கு பின் எழுந்திருந்து, கேமிரா, லைட், ஒளிப்பதிவு கருவிகள், உணவுப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள்... என அனைத்தையும் சுமந்துக்கொண்டு தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து காட்டிற்குள் செல்லவேண்டும்... அன்றைய அதிகாலை காட்சிகள் முடிந்ததும், மீதமுள்ள காட்சிகளை எடுக்க அடுத்த நாளும் இதே போல கிளம்பி வரவேண்டும். இடைப்பட்ட பகல் பொழுதுகளிலும் மற்ற காட்சிகளை எடுத்திருப்பார்கள்.
முதலாம் ஆண்டு டைரக்‌ஷன் வகுப்பில் விரிவுரையாளர் திரு. ரவிராஜ் கொடுத்த உதாரணம் இது!

சமீபத்தில் நண்பர்கள் சிலர் கோவா சென்றிருந்தோம். அங்குள்ள சப்போரா, அகுடா கோட்டைகளில் சில படங்களின் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். ஆனால் அனைத்து கருவிகளையும் சுமந்துக் கொண்டு கோட்டை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் கிடையாது....

எனது நண்பர் ஒருவர் தற்சமயம் பெங்காலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்துக்கொண்டிருகின்றார். தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு நான்கு மணிநேரம் பயணம். ஷூட்டிங் முடிந்து அறைக்கு வந்ததும், அடுத்த நாள் எடுக்கவிருக்கும் காட்சிகளைக் குறித்து இயக்குனரிடம் ஆலோசனை செய்துவிட்டு நள்ளிரவு தூங்கி, மீண்டும் அதிகாலையில் நான்கு மணிநேரம் பயணிக்க வேண்டும்!

இவைகள் சிறு சிறு உதாரணங்கள் மட்டும்தான்... உழைப்பு என்பது எல்லாத்துறைகளிலும் தான் உள்ளது. சினிமாக்காரர்கள் மட்டும்தான் உழைக்கின்றார்களா என்ன? என்று நீங்கள் கேட்கலாம். மற்றத் துறைகளைக் காட்டிலும் கடுமையான உழைப்பிற்குப் பிறகு, அது உதாசீனப்படுத்துவதும், விமர்சிக்கப்படுவதும், லாபம் கிடைக்காமல் போவதும் சினிமாத்துறையில் மட்டுமே நிகழக்கூடிய கசப்பான உண்மை!

இதுபோன்ற சூழ்நிலைகளில் திருட்டு வீடியோ எனும் கலாச்சாரம் சினிமாவிற்கு எதிரான மிகப்பெரிய அரக்கனாக உருவாகிவிட்டது. நம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒரியா, வங்காளம் போன்றவற்றில் இந்த அளவிற்கு திருட்டு டிவிடிகள் கலாச்சாரம் வளரவில்லை! ஆந்திரதேசத்தில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகத்தான் திருட்டு டிவிடிகளின் ஆதிக்கம் பெருகியுள்ளது. இருப்பினும் ஆந்திர சினிமா ரசிகர்கள் தியேட்டர் சென்று படம் பார்ப்பதையே பெரிதும் விரும்புகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. நடிகர் கார்த்தி ஒருமுறை இதனைக் குறிப்பிட்டு “ எனக்கு ஆந்திர ரசிகர்களைத்தான் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அவர்கள்தான் தியேட்டருக்கு சென்று படம் பார்க்கின்றனர் “ என்றார். ஆனால் தமிழின ஆதரவாளர்களாகவும், தமிழ்க் கலாச்சாரத்தின் காவலர்களாகவும் தங்களைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் இணையதளப் போராளிகள் சிலர், கார்த்தியை தமிழினத்தின் துரோகியாக சித்தரித்து பிராச்சாரங்களில் ஈடுபட்டனர்... உண்மை நிலையை அறியாமல்!

அழிந்துக்கொண்டிருந்த சினிமா ஓரளவிற்கு தாக்குப்பிடித்து நிற்பது ஒலி, மற்றும் ஓரளவிற்க்கேனும் மேற்கத்திய நாட்டு படங்களுக்கு இணையான தரம் ஆகியவற்றால்தான்... அந்த வகையில் கமலஹாசன் அறிமுகப்படுத்திவை இந்திய சினிமாவில் ஏராளம் என்பது அனைவரும் அறிந்த உண்மை!

திருட்டு டிவிடியை முற்றிலும் ஒழிக்கமுடியாது எனினும், குறைந்தபட்சம் “விஸ்வரூபம்” படத்தினை மட்டுமாவது தியேட்டர்களில் ( தடை நீங்கி தமிழகத்தில் ரிலீஸாகும் பட்சத்தில் ) சென்று காண்போம்... அது ஏன் விஸ்வரூபம் படத்திற்கு படத்திற்கு மட்டும் இந்த ஆதரவு? காரணம் இந்த படத்தின் பட்ஜெட் ஏறத்தாழ 100 கோடிகள்! ஒரு கலைஞன் 100 கோடிகள் முதலீட்டில் தயாரித்த ஒரு படத்திற்கு ( படத்தினைப் பார்க்காமலேயே ) மிகப்பெரிய எதிர்ப்பு உருவாகியிருக்கும் அதே சூழலில், 30 ரூபாய் செலவில் டிவிடியாகவோ, ஆன்லைனில் பார்ப்பதோ ஒரு சிசு வளரும்போதே கொலை செய்வதற்கு சமமாகும்! விஸ்வரூபம் படத்திற்கு இன்னொரு நடைமுறைச்சிக்கலும் உள்ளது... இந்த வார இறுதியில் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் “கடல்” மற்றும் விக்ரம், ஜீவா இணைந்து நடிக்கும் “டேவிட்” ஆகிய படங்களும் ரிலீஸிற்கு தயாராகிவருகின்றன... தியேட்டர்கள் கிடைப்பதிலும் சிக்கல்கள் உள்ளன...

என்னுடைய திரைப்படத் துறை நண்பர்கள் சிலரிடம் புதியதாக வெளியான ஏதாவது படத்தினைக் குறிப்பிட்டு பார்த்தீர்களா என கேட்பேன். அவர்கள் ஆம் என்று பதிலளித்தால், தரத்தைப் பற்றி அறிய எந்த தியேட்டரில் என அடுத்த கேள்வியைக் கேட்பேன்... “ தியேட்டர்ல இல்ல.. டிவிடி யில “ என இளிப்பார்கள்... செருப்பால் அடிவாங்கியதைப்போல இருக்கும் எனக்கு! தியேட்டரில் சென்றுதான் பார்க்க வேண்டும் என்ற முடிவினால்தான் ஆரண்ய காண்டம், மதுபானக் கடை, அழகர்சாமியின் குதிரை, தென்மேற்கு பருவக்காற்று, கும்கி போன்ற படங்களை தவறவிட்டுவிட்டேன்... ( வேறு வழியின்றி ஆரண்ய காண்டம் மட்டும் டிவிடி வாங்கிப் பார்த்தேன் )

ஆகவே நண்பர்களே, விஸ்வரூபம் படத்தினை பார்ப்பதும் பார்க்காமல் இருப்பதும், டிடிஎச்-ல் வெளியாவதும், வெளியானால் பார்ப்பதும் அவரவர் விருப்பம். பார்க்கவேண்டுமென முடிவெடுத்தால் திருட்டு டிவிடி-யை ஆதரிக்காமல் தியேட்டரில் சென்று பார்ப்பதை வலியுறுத்துவதே இந்த பதிவின் நோக்கம்!

ஒரு படத்தினைப் பார்க்கும் முன்னரே, ஒரு சில எதிர்ப்பாளர்களால் வெளிவரச்செய்யாமல் தடை வாங்க முடிகிறதெனில், பார்க்கவேண்டுமென முடிவெடுத்த கோடிக்கணக்கான தமிழக மக்களால் திருட்டு வீடியோவை நிராகரித்து தியேட்டர்களில் சென்று பார்க்கும் முடிவில் ஒன்றிணைவது சாத்தியமாகக்கூடிய ஒன்றுதான் என்பதே என் கருத்து! சாத்தியப்படுத்துவோம்...

திருட்டு டிவிடி நிராகரிப்பு எனும் பாஸிட்டிவான விஷயத்திற்காகவாவது இந்த விஷயத்தில் தமிழர்களாகிய நாம் ஒன்றுபடுவோம் என்பதே என்னுடைய ஆவல்!