Aug 30, 2016

தமிழ் சினிமாவில் பாடல்கள் #2


                      


 

                   


         


தமிழ் சினிமாவில் பாடல்களைப் படமாக்குவதில் கிரியேட்டிவிட்டி, மெனக்கெடல், கலைநயம், அழகியல் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றில் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் கேமரா நிகர் இல்லாதது. இது எனது தனிப்பட்ட கருத்து. இந்தியன் படத்தில் வரும் இந்த மாண்டேஜ் பாடலில் பல விஷயங்கள் நுணுக்கமாக அழகியல் தன்மையுடன் ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கும். பாடல்களைப் படமாக்க ( குறிப்பாக மாண்டேஜ் பாடல்களை ) அதற்கென்று ஸ்க்ரிப்ட் ஒன்றும் செய்ய வேண்டும். அது கதையுடன் பயணிக்க வேண்டும். பாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சிகள் இருக்க வேண்டும். பார்வையாளர்கள் காலத்துக்கும் அதை ரசித்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்தப் பாடல் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும். பாடலை ஒரு முறை பாருங்கள். பின்னர் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் இங்கே கீழே ஒரு முறை வாசியுங்கள். எவ்வளவு விஷயங்கள்...! இவை அனைத்தும் ஐந்து நிமிட பாடலுக்குள் அடங்கிவிடும். ஒளிப்பதிவு - எடிட்டிங் இரண்டும் சரிவிகிதமாக இங்கே விளையாடியிருக்கும்! கூடவே பாடல் வரிகளும், இசையும், ஜேசுதாஸின் குரலும்!
இனி காட்சிகள்...
* அதிகாலையில் எழுந்திருப்பாள்.
* ஆட்டுக்குட்டியைக் கொஞ்சுவாள்.
* நீருடன் விளையாடுவாள்.
* பரதநாட்டிய வகுப்பு.
* பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும்போது குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன் மூவரின் ரியாக்‌ஷன்கள்.
* பரதநாட்டிய பாடலில் கடுப்பான அண்ணன் களமிறங்கி ஆடும் நடனம். அப்போது மாறும் இசை.
* பொய்க்கால் குதிரையுடன் அந்த சின்னஞ்சிறு குடும்பமே சந்தோஷமாக விளையாடுவது! ( இவை அனைத்தும் ஸ்லோ மோஷனில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் )
* அப்பா - அம்மா இருவர்களது கைகளையும் ஒன்றாக இணைத்து விரல்களுக்கு மருதாணி வைத்து கிச்சு கிச்சு மூட்டுவது!
* காகிதக் கப்பல் செய்து ஆற்றில் விட்டு விளையாடுவது. காகிதம் காலியானதும் அழுது அடம் பிடிக்கும் மகளுக்கு நூறு ரூபாய் தாள்களை கொடுத்து கப்பல் செய்து ஆற்றில் விட வைக்கும் காட்சி! அப்போது பின்னணியில் ஒலிக்கும் “ அட, பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு” எனும் வரிகள். ( ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராத கொள்கைவாதி நமது இந்தியன் தாத்தா என்பது கவனிக்க வேண்டிய விஷயம் )
* அம்மா, தங்கை இருவரது ஜடையையும் ஒன்றாக பின்னி விளையாடும் மகன். சிரித்தபடியே வேடிக்கைப் பார்க்கும் அப்பா!
* பல்லவி முடிந்து இசை ஆரம்பமாகும்போது அந்த இசைக்கு ஏற்றபடி ரிதமிக்காக சிங்க் ஆகும் காட்சிகள்.
1.47 -இல் இருந்து பார்த்தால் அது புரியும்!
* இந்தியன் தாத்தா சேற்றில் நடனமாட, அவருக்கு பின்னால் அவரது மனைவியும் அவரைப் போல நடனமாடும் காட்சியும், அவர் திரும்பியதும் சட்டென சுதாரிக்கும் பாட்டியின் ரியாக்‌ஷன். நக்கலாக மனைவி நடக்க, ஒற்றைக் காலால் நடனமாடியபடி மனைவியை ரசிக்கும் இந்தியன் தாத்தா! இவை ஸ்லோ மோஷனில் படமாக்கப்பட்டிருக்கும்.
* பட்டம் பறக்க விடுவது. அப்பா ஏர் உழும்போது அதில் அமர்ந்து பயணிக்கும் மகள். இது டாப் ஆங்கிள் ஷாட்டில் காட்டப்படும். கரிசல் மண்ணில், வெண்ணிற உடையில் நான்கு பேரும் குடை பிடித்து செல்லும் காட்சி. ஆளுக்கொரு சின்னஞ்சிறு குடையை தலையில் கட்டிக்கொண்டு மழைபெய்யும்போது ஆற்றில் விளையாடுவது. அந்தச் சின்ன குடைக்குள் இந்தியன் தாத்தாவும், அவரது மனைவியும் அடைக்கலமாவது. ஆற்றின் நடுவில் டைனிங் டேபிள் அமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்துவது. அப்போது நிலைத்தடுமாறி மகன் பின்னோக்கி விழுவது. இரண்டு கமல் என்பதால் கீழே விழும் ( டூப் ) கமல் குடை பிடித்து தனது முகத்தை மறைத்துக்கொண்டிருப்பார். அதற்கு முந்தைய காட்சிகளில் அனைவரும் அந்தக் குடையை தலையில் கட்டியிருப்பதால் இந்த ( டூப் ) கமல் முகம் தெரியாவிட்டாலும் பார்வையாளர்கள் அது கமல் என்றே நம்புவார்கள். ( இதெல்லாம் எடிட்டிங் & ஷாட் டிவிஷனில் படிக்க வேண்டிய பாடங்கள்! ) அப்பாவின் நரைமுடிகளை பிடுங்கி, அப்பா போலவே ஓர் ஓவியத்தை உண்டாக்குவது....
முதலாவது சரணத்தின்போது காட்சிப்படுத்திய காட்சிகள் இவை!
* இளநீரில் பீர் கலந்து அம்மாவுக்கு குடிக்க கொடுப்பது. அதைக் குடித்துவிட்டு அம்மா செய்யும் ரகளை... அவர் முத்தம் கொடுக்கும் போது இந்தியன் தாத்தா வெட்கப்படும் தருணம்.
* வேப்பங்குச்சியில் பேஸ்ட்டை வைத்து பல் துலக்கும் யுக்தி.
* தானே தச்சுப்பணி செய்து மகளுக்கு செய்து தரும் மர பொம்மை. எப்போதும் அதனுடன் வலம் வரும் மகள்.
* பெண் பார்க்க வரும் காட்சி. மாப்பிள்ளை வேண்டாம் என்று கார் முழுக்க சாணி தட்டி வைப்பது. இந்த மாப்பிள்ளைக்கு என்னம்மா குறை என்று கேட்கும் அப்பாவிடம் நான் எப்பவும் உங்க கூடவே இருக்கேன் என்று செய்கைகளின் மூலமாகவே உணர்த்தும் காட்சிகள்.
* இந்தியன் தாத்தாவுக்கு போட்ட மேக்-அப் கலையாமல் பயபக்தியுடன் அவருக்கு ஷேவிங் செய்துவிடும் காட்சி.
* மாலை வேளையில் வயதான கணவனும் மனைவியும் வீட்டு வாசலில் அமர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டும் காட்சி.
* காது வரைக்கும் கம்பளி போர்த்தும் காட்சி.
* உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம் என்று காட்சிப்படுத்திய விதம்!
* எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு கமல்களும் ஒன்றாக நடனமாடும் காட்சி. அப்போது பின்னணியில் உள்ள பீரோவில் உள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கும் இருவரது பிம்பமும்... 1996 -இல் இதன் கிராபிக்ஸ்...
என இந்தப் பாடல் மாண்டேஜ் பாடல்களுக்கு ஓர் பாடம்!

Aug 28, 2016

தமிழ் சினிமாவில் பாடல்கள்...



தமிழ் சினிமாவில் பாடல்கள் #1




                                      


இந்திய சினிமாக்களில் பாடல்களின் முக்கியத்துவம் என்னவென்று நம் அனைவருக்கும் நன்கு தெரியும் என்பதால் நேரடியாக விஷயத்துக்கு போய்விடலாம்.

தமிழ் சினிமாக்களில் பாடல்கள் படமாக்கப்பட்ட விதம், கதையை சுவாரஸ்யப்படுத்த அவை உதவிய விதங்கள் குறித்து எழுத வேண்டும் என்பது பல வருடமாக நிறைவேறாத திட்டங்களுள் ஒன்று. இப்போது அதை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்.

கூடுமானவரை தினமும் ஒரு பாடல் குறித்து அலச வேண்டும் என்பது இப்போதைய திட்டம். பார்ப்போம்!

இந்தத் தொடரில் பாடல்கள் படமாக்கப்பட்ட இடங்கள், கேமரா கோணங்கள் & மூவ்மெண்டுகள், எடிட்டிங், சிறப்பு சப்தங்கள், நடிகர்களின் முக பாவனைகள், நடனம், கதைப் போக்கிற்கு அப்பாடல் உதவிய விதம், ஆர்ட் டைரக்‌ஷன் உள்ளிட்ட பலவற்றை நான் பார்த்து ரசித்த அனுபவங்களின் அடிப்படையில் அலசப்போகிறேன். அதற்காக, நான் இங்கு குறிப்பிடும் பாடல்களும் / விஷயங்களும் மட்டுமே சிறந்தவை அன்று பொருள் அல்ல!


இனி முதலாவது பாடலைப் பார்ப்போம்!

இது போன்ற தொடர் எழுத வேண்டும் என்று தோன்றியதுமே சட்டென நினைவில் வந்தப் பாடல் அலைபாயுதே படத்தின் “ பச்சை நிறமே ” பாடல் தான்!
                                                                   


நிறங்களை மையமாக வைத்து ஒவ்வொரு நிறத்துக்கும், தான் காதல் கொண்டிருக்கும் பெண்ணிற்குமான தொடர்பை விவரித்திருக்கும் இந்தப் பாடல். பாடலுக்கு பெரிதும் உதவியவை இசையும், ஒளிப்பதிவும் தான்!

ஒவ்வொரு வர்ணத்தைப் பற்றிய வரிகள் வரும்போதும் அதன் பின்னணி முழுக்கவே அந்த வண்ணம் மட்டுமே பிரதானமாக தெரியும். பச்சை நிறம் பற்றி பாடும் போது ஆற்றங்கரைக்கு அப்பால் புல் கட்டைத் தூக்கிச் செல்லும் கிராமவாசிகள் கூட பச்சை நிறத்திலேயே உடையணிந்து நடந்து போவார்கள்!
முதல் ஃப்ரேம் ஆரம்பமாகும் போதே பச்சை இலைகளினூடே கேமரா ஊர்ந்து செல்லும். இசைக்கு ஏற்ப நளினமாக பச்சை வண்ண உடையில் உடலையும் உடையையும் வளைத்துக்கொண்டிருப்பார் கதாநாயகி.
ஸ்லோமோஷனில் படமாக்கப்பட்டிருக்கும் அந்தக் காட்சிகள் மெல்ல மெல்ல நம் மனதிலும் ஊடுருவும்.

சூரிய ஒளியானது ஒரு பொருளின் மீது படும் போது அப்பொருள் கூடுதல் அழகு பெறும். இதை கேமராவில் கொண்டு வருவது சிறப்பானதொரு கலையாகும். இந்தப் பாடலில் 1.05 நொடியிலிருந்து 2.14 வரை சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தைப் பற்றி பாடும் போது சூரிய ஒளியைக் கையாண்டு ஃப்ரேம் பண்ண விதங்கள் அட்டகாசமாக இருக்கும்.

அலைபாயுதேவிற்கு முந்தையப் படங்களில் பெரும்பாலும் நெற்றிப்பொட்டு இல்லாமல் நடித்திருப்பார் ஷாலினி. சிவப்பு நிறத்தப் பற்றி வர்ணிக்கும் போது அவர் வைத்திருக்கும் பெரிய சைஸ் சிவப்பு நெற்றி பொட்டு அவருக்கு கூடுதல் அழகை கொடுத்திருக்கும். சிவப்பு மிளகாயைக் கடிக்கும் காட்சியில் நமது நாக்கில் காரம் படர்ந்துவிடும்... படமாக்கப்பட்ட விதம் அந்த மாதிரி!

அடுத்தடுத்து சொல்லப்போகும் நிறத்தை, பாடல் வரிகள் ஆரம்பிக்கும் முன்னதாகவே விஷுவலாக நமக்கு காட்டி விடுவார்கள்

நீல நிறத்தைப் பற்றி பாடும் போது அழகான நீல நிறத்தின் பல்வேறு பரிமாணங்கள் வெளிப்பட்டிருக்கும்.

3.21 -லிருந்து நாயகி ஓடிக்கொண்டிருக்க நாயகன் துரத்திக்கொண்டிருப்பார். கேமராவும் பல கோணங்களில் கூடவே துரத்தும்.  ஃபிலிமில் படமாக்கப்பட்ட காலங்களில் சினிமாஸ்கோப் லென்ஸ்களை பயன்படுத்தியபோது ஒருவர் ஓடுவதை / துரத்துவதை ( மூவ்மெண்டுகளுடன் ) படமாக்கும்போது அவரது தலை, கால் எதுவும் ‘கட்’ ஆகாமல் படமாக்குவதும் ஒரு கலைதான். இதிலும் அது சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். 3.41 -இல் ஓடிக் களைத்து தனது வேகத்தைக் குறைப்பார் நாயகன். அப்போது இசையும் தனது வேகத்தைக் குறைத்துக் கொள்ளும். ஒளியும் ஒலியும் ஒருசேர கையாள்வதின் ரிதம் இதுபோன்ற காட்சிகளில்தான் இருக்கிறது!

க்ருமை நிறத்தின் கார்காலம் குறித்து பாடல் வரிகள் வரும்போது மழைக்கால மேக மூட்டத்துடன் ஒரு ஷாட் வந்து போகும். இது போன்ற கால நிலைக்காகவும் காத்திருக்க வேண்டும். அதை கச்சிதமாக பாடல்களினிடையே இணைக்கவும் வேண்டும். இதெல்லாம் சேர்த்துத்தான் ஒரு பாடலுக்கு அழகியல் தன்மையை மேலும் மெருகேற்ற செய்யும்.

வெண்மை நிறம் பற்றி பாடும் போது,  ஃப்ரேம் முழுக்க வெண்ணிற milky shade ஒன்று படர்ந்துவிடும். பழுப்பு நிற மண், பச்சை வண்ண மரங்கள் மீது கூட மெல்லிய வெண்மை படர்ந்திருக்கும்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால்,  சொல்ல வந்த கான்செப்டை முன்னிறுத்தி படமாக்கப்பட்டதில் இந்தப் பாடல் சிறப்பிலும் சிறப்பான ஒன்றாகும்.

கேமரா மூவ்மெண்டுகள், தேவையான இடங்களில் இசைக்கேற்ப ஸ்லோ மோஷன் ஷாட்டுகள், அதற்கேற்ப நடன அசைவுகள், அவர்களின் உடை தேர்வு, படமாக்கப்பட்ட இடங்கள், இளம் நாயகன் - நாயகியின் ஃப்ரெஷ்ணஸ் என எல்லாமே சிறப்பாக இருக்கும்.

Dissolve, Fade In - Fade Out  போன்ற டிபிகலான ஸ்பெஷல் ஃஎபெக்டுகள் எதுவும் இப்பாடலில் பயன்படுத்தப்பட்டிருக்காது என்பது கூடுதல் ஆச்சர்ய செய்தி. பாடலின் கடைசி ஷாட்டில் மட்டும் தாஜ்மாஹாலின் பின்னணியில் நாயகன் எகிறி குதிக்கும் போது fade out பயன்படுத்தப்பட்டுருக்கும்!

அடுத்தப் பாடலில் பார்ப்போம் நண்பர்களே...

Aug 20, 2016

அஜித்குமாரும் அவரது ரசிகர்களும் - நிகழ்ந்த அற்புதம்!


அஜித்குமார் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் (நல்ல) சினிமா விரும்பிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான விளக்க பதிவு. எங்களைப் பிடிக்காதோர் இதைப் படித்து உங்கள் நிம்மதியைக் கெடுத்து கொள்ளாதீர்கள்.
முழுசா படிக்க பொறுமை இல்லாதவர்களுக்காக... பதிவின் சாராம்சம் இதுதான் :
மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லிவிட்டே ரசிகர்களுக்காக மட்டுமே படம் நடிக்கிறார் அஜித்குமார். அவருக்காக மட்டுமே அவர் படங்களைப் பார்க்கிறோம் நாங்கள். எங்கள் இருவருக்குமான உணர்வுப்பூர்வமான புரிதல் இது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நாள் முழுக்கவும் ஆட்டமிழக்காமல் ஷேவாக் நின்னு விளையாடினால் எவ்வளவு பரவசமாக பார்ப்போமோ அதை விட கூடுதலான பரவசம்தான் அஜித்குமாரை திரையில் பார்க்கும்போது!
( இருந்தாலும், முழுசா படிச்சாதான் பல குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கும்  )

                                                                                                               


இனி மேட்டர்...
* 2001 -ஆம் ஆண்டு சிட்டிசன் படம் வெளிவரும்போது அஜித்குமார் தனது கேரியரின் உச்சத்தில் இருந்தார். படத்தின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமர்க்களம் படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அறியப்பட்டாலும், தீனா மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து வந்தப் படம் என்பதால் சிட்டிசனுக்கு எதிர்பார்ப்பு எகிறியது.
அவருக்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கிறது என்று இன்றளவும் சொல்ல காரணமாக அமைந்தப் படம் சிட்டிசன். அப்போது அவரது வயது 30. யோசித்துப் பார்த்தால் அதற்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் 30 வயதைக் கடந்த எவருக்கும் அப்போதைய அஜித் கொண்டிருந்த ரசிகர்கள் பலமும், மாஸ் ஓப்பனிங்கும் இன்னும் அமையவில்லை என்பதே உண்மை. இதில் விஜய்யும் அஜித்தும் சமமானவர்களே!
* 2002 -இல் ரெட், ராஜா என அடுத்தடுத்த தோல்விகள். வில்லன் வெற்றிபெற்றது. ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு அடுத்த 2003 தீபாவளிக்கு வெளியான ஆஞ்சினேயாவும் தோல்வி. இடையில் கார் ரேஸில் ஈடுபாடு கொண்டு வெறித்தனமாக அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து செய்ய வேண்டிய மிரட்டல் கைவிடப்படுகிறது. 2004 -இல் வந்த ஜனா படுதோல்வி. லிங்குசாமியுடன் கைகோர்த்த ஜி படம் தள்ளி போகிறது...
இதே காலகட்டத்தில் பகவதி, புதிய கீதை என ஃப்ளாப்கள் கொடுத்தாலும் யூத், வசீகரா, திருமலை படங்களின் மூலம் தன்னைத் தக்க வைத்துக்கொள்கிறார் விஜய். கில்லி மூலம் பட்டி தொட்டியெங்கும் சொல்லி அடிக்கிறார். கூடவே தில், ஜெமினி, தூள், சாமி, அந்நியன் படங்களின் மூலம் விக்ரமும் போட்டிக்கு வந்து அஜித் இடத்தை பகிர்ந்துகொண்டார். அடுத்தடுத்த ஆண்டுகளில் சூர்யாவும்!
* கமர்ஷியல் வெற்றி தேவை எனும் கட்டாயத்தில் இருக்கும்போது 2004 தீபாவளிக்கு அட்டகாசம் வந்து ஆறுதல் அளிக்கிறது ரசிகர்களுக்கு. நீண்ட நாள் கிடப்பிலிருந்து வெளியான ஜி ரசிகர்களையே சோதித்து அனுப்பியது. காட்ஃபாதர் படம் ஆரம்பித்து நிறுத்தப்படுகிறது. நான் கடவுள் படப் பிரச்சினை. மீண்டும் கார் ரேஸ்... கிட்டத்தட்ட 2005 -ஆம் ஆண்டு முழுக்க அஜித் எனும் நடிகர் கோடம்பாக்கத்தில் இல்லவே இல்லை! மீடியாக்கள், பாடல்களை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சானல்கள் கூட அஜித்குமாரை புறக்கணித்தன. அதே காலகட்டத்தில் திருப்பாச்சி, சிவகாசி என மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார் விஜய்!
* வீறுகொண்டு வந்து இரண்டு படங்களை விரைவாக நடித்து முடித்தார் அஜித். 2006 -ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியான பரமசிவன், பி.வாசு இயக்கம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்றியிருந்தது. தோல்வி அடையாமல் ஆவ்ரேஜாக தப்பித்தது. அடுத்து வந்த திருப்பதி விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்டாலும் வசூல் ரீதியில் கொஞ்சம் தப்பித்தது.
* வருமா? வராதா? என ஊசலாடிக்கொண்டிருந்த வரலாறு அதே ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி சரவெடியாக வெடித்தது. அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பாக எவ்வளவு கலாய்க்கப்பட்டது என்பதை ஒவ்வொரு அஜித் ரசிகனும் நன்கு அறிவான். அந்தக் காலகட்டம் அஜித் ரசிகர்கள் மறக்க நினைக்கும் கருப்பு நாட்கள்! தொலைக்காட்சிகளில் மட்டுமே 100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பான ட்ரைலர் என ஃபார்வர்ட் மெசெஜ்களாக வரும். தவிர, அந்தப் படத்தில் டான்ஸர் கதாபாத்திரத்தை முன்வைத்து அவரது ஆண்மை அதிகம் கேலி பேசப்பட்டது. இன்றைய தினத்தில் ஆன்லைனில் அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக இயங்க முக்கிய காரணம் பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கேலி பேச்சுகள்தான். வரலாறு இடைவேளைக் காட்சியில் சிகரெட்டைப் புகைத்தவாறு மூன்றாவது அஜித் வந்து நின்றபோதும்... தன்னைக் கொலை செய்ய வரும்போது வீல் சேரில் இருந்து எழுந்து நின்ற காட்சியின் போதும் ஆர்பரித்து நிமிர்ந்த ரசிகர்கள் இன்று வரை நிமிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்! 2002 தீபாவளிக்கு வெளியான வில்லன் படத்துக்குப் பிறகு 2006 தீபாவளி அன்றுதான் மிகப்பெரிய வெற்றி கிடைக்கிறது எங்களுக்கு. பசியோடு காத்திருந்த எங்களுக்கு கிடா வெட்டு விருந்தே கிடைத்தது. ஆசை தீர கொண்டாடி தீர்த்தோம்.
* வரலாறு வெற்றிகரமாக பல அரங்குகளில் ஓடிக்கொண்டிருந்தபோதே 2007 பொங்கலுக்கு ஆழ்வார் வெளியாகி எங்களுக்கு அல்வா கொடுத்தது. அதே தினத்தில் போக்கிரி பட்டையைக் கிளப்பியது. மீண்டும் சோர்ந்து போனோம். ஆனால் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் கிரீடம், பில்லா என அடுத்தடுத்த படங்களின் எதிர்பார்ப்பு கூடியது. பாக்ஸ் ஆஃபிஸில் சொதப்பவில்லை கிரீடம். பெரிய அளவில் வெற்றியும் இல்லை.
* 2007 - இன் இறுதி... பில்லா வெளியாகும் சமயம். சன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, விஜய் டிவி என எல்லாருக்கும் விஷேச பேட்டி தந்தார் அஜித். தனது வாழ்வில் மிக முக்கியமான படமாக கருதினார் பில்லாவை! பேட்டி மூலம் அவர் வெளிப்படுத்த விரும்பிய விஷயம் ஒன்றே ஒன்றுதான். கிட்டத்தட்ட ஆறேழு ஆண்டுகளாக தனது தோல்விகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு பொறுமைகாத்த ரசிகர்களின் அன்புக்கு நன்றி!
ஆளே காலி எனும் நிலையில் இருந்து இன்றைய தினம் அவர் அடைந்திருக்கும் உச்ச நிலைக்கு மிக முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மட்டுமே! கூட இருந்த பலரும் லாவகமாக விலகியபோதும், துரோகம் இழைத்தபோதும் ரசிகர் பலத்தால் மட்டுமே மீண்டு வந்தார்.
ஒன்றை யோசித்துப் பார்ப்போம். தோல்விகளை மட்டுமே கொடுத்த நடிகன் ஒருவனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து அவனை வெற்றியாளனாக மீட்டெடுத்த ஓர் நற்காரியத்தைச் செய்துள்ளனர் அஜித் ரசிகர்கள்! ரசிகர்களால் அஜித் வாழ்கிறார். அவரது ஒரு படத்தினால் பல ஆயிரம் குடும்பங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. மட்டுமின்றி தன்னாலான தானமும் செய்கிறார்.
* பில்லா வெளியானது. ஸ்டைலிஷான மூவி மேக்கிங் என்றால் என்னவென்று இந்திய சினிமாக்களுக்கு ஒரு பாடமானது! அதற்கு முந்தைய ஆண்டு வெளியான ஷாருக்கானின் டான் படத்தின் மேக்கிங் கூட படு சாதாரணமாகவே இருக்கும். ரஜினி படத்தை ரீமேக் செய்தபோதிலும், அவரது ஸ்டைல் எதுவும் வந்து விடக்கூடாது என்று கவனமுடன் செயல்பட்டு, தனக்கான ஒரு ஸ்டைலை கண்டறிந்தார் தல. ( சமகால நடிகர்களில் பலர் அப்பட்டமாக ரஜினிகாந்தை இமிடேட் செய்வது கண்கூடு )
* பில்லா மூலம் மீண்டும் ஒருமுறை தலை நிமிர்ந்த அஜித் ரசிகர்களுக்கு ஏகன் ஒரு முட்டுக்கட்டையாய் வந்தது. இடையில் மீண்டும் கார் ரேஸ் ஆர்வம் துளிர்விட மறுபடியும் ஒரு கேரியர் விரிசல். 2008 தீபாவளிக்குப் பிறகு, 2010 ஃபிப்ரவரியில் அசல் வெளியானது. சிவாஜி ப்ரொடக்‌ஷன்ஸ், சரண் இயக்கம், இரட்டை வேடத்தில் அஜித் என மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடனும், மிகப்பெரிய ஓப்பனிங்குடன் வெளியானது அசல். எதிர்பார்ப்பு பொய்த்ததால் பாக்ஸ் ஆஃபிஸில் தோற்றது.
* கெளதம் வாசுதேவுடன் 50 -வது படம் என அறிவிப்பு வெளியாகி படம் ட்ராப் ஆனது. அசலுக்குப் பிறகும் இடைவெளி... என்ன பண்ண போகிறார் என காத்திருந்த ரசிகர்களுக்கு வெங்கட் பிரபுவுடன் மங்காத்தா என அறிவிப்பு வந்தது.
* தன்னைத் தக்க வைக்க மீண்டும் ஒரு வெற்றி அவசியம் எனும் சூழ்நிலையில், தனது கேரியரின் மிக முக்கியமான 50 -வது படம் வெளியாகும் முன்பு தனது ரசிகர் மன்றங்களை அதிகாரப்பூர்வமாக கலைத்து விட்டார். மன்றங்கள் மூலம் சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகின்றனர் என்பதே முக்கிய காரணம். தனது ரசிகர்கள் எவரும், தனது பெயரை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடாது ( அல்லது ) அரசியலில் ஏமாறக்கூடாது என்பதே அவர் விருப்பம்.
” நான் ஒரு நடிகன். எனது தொழில் சினிமாவில் நடிப்பது. அதை நான் செய்கிறேன். எனது படம் வெளியாகும் போது திரையரங்கிற்கு வந்து படத்தைப் பாருங்கள். பிடித்தால் ரசியுங்கள். கொண்டாடுங்கள். உங்களுக்குப் பிடிக்காவிட்டால் அடுத்தப் படத்தை உங்களுக்கு பிடிக்கும் படி பார்த்துக்கொள்கிறேன். இதுதான் நம் இருவருக்குமான தொடர்பு. மற்ற முழு நேரமும், உங்கள் குடும்பத்துக்காகவும், உங்கள் தொழிலுக்காவும் செலவிடுங்கள். நீங்களும் வாழுங்கள். மற்றவர்களையும் வாழ விடுங்கள்!”
2011 -ஆம் ஆண்டு அஜித்குமார் தனது ரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள் இது.
அஜித்தையும், அவரது ரசிகர்களையும் ஏளனப்படுத்துவோரிடம் எனது வினா ஒன்றுதான்... மேற்சொன்ன ஸ்டேட்மெண்டில் என்ன குறை கண்டீர்கள்? ஒரு நடிகனாக எவ்வளவு மெச்சூர்டான ஸ்டேட்மெண்ட் அது?
அவர் நடிக்கிறார். அவரை எங்களுக்குப் பிடிக்கும். நாங்கள் அதைக் கொண்டாடுகிறோம். அவ்ளோதான். சிம்பிள்.
மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லிவிட்டே ரசிகர்களுக்காக மட்டுமே படம் நடிக்கிறார் அஜித்குமார். அவருக்காக மட்டுமே அவர் படங்களைப் பார்க்கிறோம் நாங்கள். எங்கள் இருவருக்குமான உணர்வுப்பூர்வமான புரிதல் இது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு நாள் முழுக்கவும் ஆட்டமிழக்காமல் ஷேவாக் நின்னு விளையாடினால் எவ்வளவு பரவசமாக பார்ப்போமோ அதை விட கூடுதலான பரவசம்தான் அஜித்குமாரை திரையில் பார்க்கும்போது!
ஆக...
ஆம். எங்களைத் திருப்தி படுத்த, எங்களுக்காக மட்டுமேதான் படம் நடிக்கிறார் அஜித். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவர் படங்கள் வெளிவரும் போது கொண்டாடித்தீர்ப்போம் நாங்கள்! கொண்டாட்டம் அதிகரிக்குமே தவிர இனி குறையாது! அந்த வகையில் அஜித்குமார் செய்திருப்பது மிகப்பெரிய புரட்சி. தனக்கென்று இருக்கும், தன்னை உச்சாணியில் வைத்த ரசிகர்களுக்காக மட்டுமே படம் எடுக்கும் ஒரு நடிகன்... அவனைக் கொண்டாட ஒரு ரசிகர் கூட்டம். உலகில் எந்த நடிகனுக்கு இது வாய்க்கும்? இது வரமல்லவா? வேறெந்த தனி மனிதனையும் எந்த வகையிலும் பாதிப்புக்குள்ளாக்காத வரமல்லவா...?
இந்தச் சமுதாயத்திற்காக எந்தவொரு சீரழிவையும் செய்யவில்லை நாங்கள். மாறாக, தாங்களாகவே முன்வந்து குழு குழுவாக பல்வேறு நலப்பணிகளை செய்துவருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அஜித்தையும், அஜித் ரசிகர்களையும் ஏதோ சமுதாய சீரழிவாளர்கள் போல பார்க்கும் அன்பர்களிடம் சில கேள்வி... கத்தி படத்தில் பத்திரிகையாளர் ஒருவரிடம் விஜய் கேட்கும் கேள்வியைப் போலத்தான்!
வாழ்வில் எப்போதாவது மரக்கன்று நட்டுள்ளீர்களா?
தானாகவே முன்வந்து இரத்த தானம் செய்துள்ளீர்களா?
உங்கள் நண்பர்களுடன் இணைத்து எப்போதாவது ஒரு முறை அனாதை இல்லங்களுக்கோ, கண் பார்வையற்றவர்களுக்கோ உணவு வழங்கியிருக்கிறீர்களா?
மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து உங்கள் வீட்டிலும், சுற்றத்தாரிடமும் பேசியிருக்கிறீர்களா?
சாலையில் செல்லும்போது ஏதேனும் விபத்து நேர்ந்து அடிபட்ட ஒருவருக்கு சுற்றி இருப்போர் தயங்கியபடி வேடிக்கைப் பார்க்க முதல் ஆளாக ஓடி போய் உதவியிருக்கிறீர்களா?
எங்கு போனாலும் வரிசையில் நிற்பதை கடைப் பிடிக்க வேண்டும் என்பதை எப்போதுமே நினைவில் வைத்துள்ளீர்களா? அதை பலருக்கும் அறிவுறுத்தியிருக்கிறீர்களா?
பிரியாணி சமைத்து தனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தனது கையால் பரிமாற வேண்டும் என்று தோன்றியிருக்கிறதா?
எந்த ஒரு அஜித் ரசிகனை கேட்டாலும் மேற்குறிப்பிட்டதில் மூன்று விஷயங்களையாவது கடைப்பிடிப்பான். வாழ்நாள் முழுக்க!
ஆர்பாட்டமின்றி தமிழக இளைஞர்களிடம் ஒரு கலாச்சார மாற்றத்தை செய்துகொண்டிருக்கிறார் அஜித்.
ஆண்களும் சமைக்க வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய அன்பையும், நேரத்தையும் செலவிட வேண்டும். சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். யாரையும் தரக்குறைவாக நடத்தக்கூடாது. வரிசையில் நிற்க வேண்டும். தவறாமல் வாக்களிக்க வேண்டும். ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் வாழ்க்கையை அணுக வேண்டும். தோல்வியில் துவண்டு விட கூடாது. மனதில் சரி என தோன்றுவதை வெளிப்படையாக பேச வேண்டும். பெண்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மூத்தோர்களை மதிக்க வேண்டும். எதிரிக்கும் உண்டான மதிப்பு அளிக்க வேண்டும்.
மிக மிக முக்கியமாக...
நன்றாக படிக்க வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும். நாம் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ விட வேண்டும்!
ஒவ்வொரு அஜித் ரசிகனுக்குள்ளும் இவை ஆழமாக பதிந்துள்ளன. அடுத்த தலைமுறையில் இக்கலாச்சார மாற்றத்தின் விதையை நிச்சயம் அறுவடை செய்வோம் நாம்!
இவை மட்டுமின்றி, தனது படங்களில் தவறான முன்னுதாரணங்கள் எவற்றையும் சொல்வதில்லை அஜித். வேதாளம் படத்தில் பெண்களுக்கான முன்னுரிமை, ஒரு ஆண் அவளுக்கு கொடுக்க வேண்டிய சுதந்திரம், என்னை அறிந்தால் படத்திலும் ஒரு ஆண்மகன் பெண்ணை அணுக வேண்டிய விதம், வீரம் படத்தில் தன்னைச் சுற்றி இருப்போரிடத்தில் நாம் செலுத்த வேண்டிய அன்பு, தான் நேசிக்கும் பெண்ணிடம் காண்பிக்க வேண்டிய கண்ணியம் என சில மெளனமான போதனைகளும் உண்டு.
பெண்களின் புட்டத்தை அமுக்குவது, அதன் மீது பந்து எறிவது, மார்புடன் மார்பு முட்டி கிளு கிளுப்பு உண்டாக்குவது, தெரியாத்தனமாக மார்பை அமுக்குவது, கேலிக்கும் கிண்டலுக்கும் பெண்ணை ஆளாக்கி தன் பின்னால் அலைய விடுவது... இதுபோல் சமகால ஹீரோக்கள் செய்யும் எதையும் செய்வதில்லை அஜித். மங்காத்தாவில் மட்டும் அவர் ஏற்று நடித்த நெகடிவ் பாத்திரம் காரணமாக விலைமாது கேரக்டரில் நடித்த பெண்ணை தகாத வார்த்தையால் திட்டுவார். சுய லாபத்துக்காக ஒரு பெண்ணை காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவார்.
இவற்றைத் தவிர, கடந்த பல ஆண்டுகளாகவே வேறெந்தப் படத்திலும் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் அறவே கிடையாது. பாலியல் உணர்வுகளைத் தூண்டும் காட்சிகள் கிடையாது.
இதைவிட ஒரு நடிகன் தனது ரசிகர்களுக்காக என்னத்த செய்ய முடியும்? தனது படத்தில் எதைக் காண்பிக்க வேண்டும்?
இறுதியாக...
சொந்தம், பந்தம், நண்பர்கள் எல்லார்கிட்டயும் நல்லா பழகி அவங்களுக்கு உண்டான மரியாதையும் கொடுத்து, நாங்க வேலைக்கு போயி சம்பாதிச்சி குடும்பத்த காப்பாத்தி, எப்ப எங்க தல அஜித் படம் வருதோ அப்போ தியேட்டர் போயி அத கொண்டாடினால்... அது அஜித் ஹேட்டர்ஸ்க்கும் பிடிக்கல... நடுநிலைவாதிகளுக்கும் பிடிக்கல... ஃபேஸ்புக்குல எப்பவாவது எட்டிப் பார்க்கும் அரை குறைகளுக்கும் பிடிக்கல... அஜித்துன்னா யாருன்னே தெரியாத அல்லக்கைகளுக்கும் பிடிக்கல...
ஏண்டா... அஜித்குமார் சினிமாவுல நடிக்க கூடாதாடா?
அப்படி படம் நடிச்சிட்டா...
அந்தப் படத்த அஜித் ரசிகர்கள் கொண்டாடிட்டா...
அந்தப் படம் ஓரளவுக்கு பாக்ஸ் ஆஃபிஸ்ல கலெக்‌ஷன் பண்ணி எல்லாரையும் வாழ வச்சிட்டா...
உங்களால பொறுத்துக்க முடியாதாடா?
அஜித் நடிக்கற படங்கள் நீங்க எதிர்பாக்குற மாதிரி நல்ல படம் இல்லைதான்... ஆனால் கெட்ட படம் கிடையாது. அதுல விஷமத்தனமான கருத்துக்கள் கிடையாது...
சமுதாயத்த சீரழிக்கிற மாதிரி காட்சிகள் கிடையாது...
இப்படியெல்லாம் இருந்தாலும் உங்களால அத புரிஞ்சிக்க முடியாது இல்ல...?
அஜித் படத்தை நாங்க கொண்டாடுடுறதுதான் உங்க பிரச்சினைன்னா நாங்க அத கொண்டாடுவம்டா!
அந்தப் படம் வசூல் பண்றது உங்க பிரச்சினைன்னா போன படத்தை விட அடுத்த படம் அதிகம் வசூல் பண்ண வைப்போம்டா!
நீங்க எவ்வளவுக்கு எவ்ளோ அவர் மேல வெறுப்ப கொட்றீங்களோ அத விட ஆயிரம் மடங்கு அவர் மேல அன்பை நாங்க கொட்டுவோம்டா!
அவர் கோட் சூட் போட்டுன்னு நடந்து வர்ரது உங்க பிரச்சினைன்னா படம் முழுக்க அதையே பண்ணுவோம்டா... ஸ்டைலா... கெத்தா....
இதையெல்லாம் உங்களால பார்க்க முடியலைன்னா போய் ஆஃப்ரிக்க நாட்டு படங்களைப் பாருங்கடா!

                                                                                    

Feb 21, 2015

உலகக்கோப்பை கனவு அணியும் அதன் எதிரணியும்...






ஆர்வமுடன் கிரிக்கெட் பார்க்கும் எல்லாருமே தங்கள் நாட்டு வீரர்களின் சிறப்பம்சங்களைப் போலவே எதிரணி வீரர்களின் பலம் பலவீனங்களையும் நன்கு அறிவர். நினைவு தெரிந்து கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பேட்ஸ்மேன்களாக சனத் ஜெயசூர்யாவையும் ( இலங்கை ), சயீத் அன்வரையும் ( பாகிஸ்தான் ) குறிப்பிடுவேன். மற்ற அணிகளுக்கு எதிராக சுமாராக கூட விளையாடாவிட்டாலும், இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது இருவரும் விஸ்வரூபம் எடுத்துவிடுவர். இவர்களைத் தவிர, கேரி கிர்ஸ்டன், ஹட்ஸன், கல்லினன், லாரா, சந்தர்பால், மார்க் வாஹ், மைக்கேல் பெவன், க்றிஸ் கெய்ன்ஸ், நாதன் அஸ்லே, மெக்மில்லன், இஜாஸ் அஹமது, ஷோயம் மாலிக், அரவிந்த டி சில்வா, ரணதுங்கா… இவர்களெல்லாம் நாஸ்டால்ஜியாவில் அடிக்கடி வந்து போகும் பேட்ஸ்மேன்கள். பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை டேமியன் ஃப்ளெமிங், மெக்ராத், சமிந்தா வாஸ் , வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷக்லைன் முஷ்தாக், அக்யுப் ஜாவேத், பொல்லாக், டொனால்ட், அம்ப்ரோஸ், வால்ஷ், டொமினிக் கார்க், ட்யோன் நாஷ், ஹீத் ஸ்ட்ரீக், இவர்களெல்லாம் நான் ஸ்கூல் படிக்கும்போது கெட்ட வார்த்தைகளால் என்னிடம் திட்டு வாங்கியவர்கள். 


பத்தாம் வகுப்பு படிக்கும்போது,  ஒருநாள் சற்றும் எதிர்பாராவண்ணம் காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்றை     ESPN

 சானலில் காணநேட்டது. சச்சின், ஜெயசூர்யா, அன்வர், டி சில்வா, க்றிஸ் கெய்ர்ன்ஸ், வசீம் அக்ரம் எல்லாரும் ஒரே அணியில்! எதிர் அணியில் அமீர் சோஹைல், அசாருதீன், கங்கூலி, ஸ்ரீநாத், கும்ளே!!! சச்சின் வழக்கம் போலவே அந்தப் போட்டியிலும் சதம் அடித்து வெற்றிக்கு உதவினார். கனவு அணிக்கான விதை தோன்றியது அன்றுதான். அதன் பிறகு, மீண்டும் அதுபோன்றதொரு காட்சிப் போட்டிக்காக ஏங்கிக் கிடந்தோம். எதுவும் நடந்தபாடில்லை! காலப்போக்கில் ஐபிஎல் தலையெடுத்து காட்சிப் போட்டிகளின் மவுசை தவிடு பொடியாக்கி விட்டது.




2015 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை துவங்கியதும், எனக்குப் பிடித்த கனவு அணி ஒன்றைத் தேர்வு செய்ய உள்ளுக்குள் ஆர்வம் தூண்டியதன் விளைவே இந்தக் கனவு அணி. இது முழுக்க முழுக்க எனது நாஸ்டால்ஜியாவுடன் தொடர்புடைய, எனக்குப் பிடித்த வீரர்களெல்லாம் அந்தந்த வரிசையில் அணிவகுக்கும் கனவு அணி!






1. சச்சின் தெண்டுல்கர்
2. ஆதம் கில்கிறிஸ்ட்


ஒரு நாள் போட்டி… துவக்க ஆட்டக்காரர் என்றால் அது சச்சின் தான். மாற்றுக்கருத்தே இல்லை. ( ஆனாலும் ஆக்ரோஷமான ஆட்டக்காரர் என்ற வகையில் இந்திய துவக்க ஆட்டகாரராக சச்சினைக் காட்டிலும் ஷேவாக் தான் எனக்கு மிகவும் பிடித்தவர். )

 




வலது – இடது துவக்க ஆட்டக்காரரகள் எனும் கூட்டணியின்படி இடது கை ஆட்டக்காரரான கில்கிறிஸ்ட் எனது அடுத்த சாய்ஸ். அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்லாது மிகச்சிறந்த விக்கெட் கீப்பரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. ஒருநாள் போட்டிகளில் இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 97.


3. அரவிந்த டி சில்வா


                              



ட்ராவிட்டுக்கு முன்பாகவே எனக்குத் தெரிந்த க்ளாசிக் ப்ளேயர் இவர்தான். அதிரடி வேண்டும் போது அதிரடியும், பொறுமை தேவைப்படும் போது நிதானமாகவும் விளையாடுவது இவரது சிறப்பு. இந்த இடத்திற்காக ரிக்கி பாண்டிங்கும் மனதில் வந்து போனார்.


4. விவியன் ரிச்சர்ட்ஸ்





இவர் விளையாடி நான் பார்த்ததில்லை. எனது மாமா இவரது தீவிர விசிறி. இன்றைய அதிரடி ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் இவர்தான் பிதாமகர்!
இவரது பேட்டிங் ஆவ்ரேஜ் 47. ஸ்ட்ரைக் ரேட் 90. ஒரு நாள் போட்டிகளில் 118 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


5. ப்ரயன் லாரா




இந்த இடது கை பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் அழகிற்காகவே இவரை கனவு அணியில் சேர்த்துக்கொள்ளலாம்!


6. கால்லிஸ்




ஒரு நாள் போட்டிகளில் 11,000 –க்கும் அதிகமான ரன்கள், பேட்டிங் ஆவ்ரேஜ் 45. எடுத்த விக்கெட்டுகள் 273. சமகாலத்தில் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர் இவர் மட்டும் தான்!
 

7. மைக்கேல் பெவன்





முடிந்தால் என்னை அவுட் பன்ணுங்கடா பார்ப்போம் என்று பேட்டின் மூலம் சவால் விடக் கூடிய வெற்றிகரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், சிறந்த ஃபினிஷ்ஷர். இவர் இல்லாமல் ஒரு கனவு அணியா? கிரிக்கெட் என்றால் என்னவென்று ஓரளவுக்கு புரிய ஆரம்பித்த காலகட்டத்தில் 50-க்கும் மேலாக பேட்டிங் ஆவ்ரேக் வைத்திருந்த கடோர்கஜன்!


8. இம்ரான் கான்





இவர் விளையாடியும் நான் பார்த்ததில்லை. ஆனால் எனது மாமா சொல்லி கேட்டிருக்கிறேன். வசீகரமான முகம், ஹேர் ஸ்டைல் இவை இரண்டுமே இவர் மீது ஒரு ஈடுபாட்டை உண்டாக்கியது. பாகிஸ்தான்  அணிக்கு பல இளைஞர்களை ஊக்கம் கொடுத்து கொண்டு வந்தவர். சிறந்த ஆல் ரவுண்டரும் கூட. தான் விளையாடிய 175 ஒருநாள் போட்டிகளில் 130-க்கும் அதிகமான போட்டிகளுக்கு  பாகிஸ்தானின் வெற்றிகரமான கேப்டனாக வழிநடத்திய  இவரே எனது கனவு அணிக்கான கேப்டனும் கூட!


9. ஜோயல் கார்னர்




மேற்கிந்தியத் தீவுகளின் ஓங்கி உயர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். கால் நூற்றாண்டுகளைக் கடந்த பின்னரும் கூட இவரது பெளலிங் ஆவ்ரேஜ், எகானமி ரேட் போன்றவற்றை நெருங்கி வர ஆள் இல்லை! ஆவ்ரேஜ் 18.83. எகானமி ரேட் 3 !!!


10. மெக்ராத்

                  




ஆறு பால் போடணும். ஆறு பாலும் ஒரே நீளத்தில் போடணும். ஒரே வேகத்தில் போடணும். ஒரே உயரத்தில் போடணும்!  இதைச் செய்யக்கூடியவர் இவர் ஒருவர் மட்டும் தான். அளவுகோலால் அளந்துப் போடுவதைப் போல கனகச்சிதமாக பந்து வீசுவார். என்னிடம் அதிகப்படியான சாபத்திற்கு ஆளானவரும் இவர்தான். 250 போட்டிகளில் 381 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆவ்ரேஜ் 22 . எகானமி ரேட் 3.88. ஏழு முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர்.


11. ஷேன் வார்ன்




நூற்றாண்டின் சிறந்தப் பந்தை வீசிய மாயாஜால பந்து வீச்சாளர். ஆடும் பதினோரு பேரில் ஒரு ஸ்பின்னர் தான் தேவை எனும் பட்சத்தில் முரளிதரனைக் காட்டிலும் இவரே எனது தேர்வு. ஆசிய ஆடுகளங்களில் ஸ்பின்னர் உருவாவது சுலபம். ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இதுபோன்றதொரு ஸ்பின்னர் உருவாவது ஆச்சர்யம்தான்!

விளையாடுவது பதினோரு பேர்தான் என்றாலும் அணியில் 14 பேர் வேண்டும் அல்லவா?

12. விராத் கோஹ்லி
13. ஸ்டீவ் வாஹ்
14. இயன் போத்தம்


கனவு அணிக்காக நான் ரொம்ப யோசிக்கவே இல்லை. டி சில்வா / பாண்டிங்,
இம்ரான் கான் / கபில் தேவ் , ஷேன் வார்ன் / முரளிதரன்


ஒரு பேட்ஸ்மேன், ஒரு ஆல்ரவுண்டர், ஒரு ஸ்பின்னர் இதில் மட்டுமே கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது.


இந்தக் கனவு அணியை உருவாக்கிய பின்னர் திடீரென ஒரு எண்ணம் உதித்தது. கனவு அணிக்கான எதிர் (கனவு) அணி ஒன்றையும் உருவாக்கினால் என்ன? ஜாலியா இருக்குமே… சச்சின், கில்கிறிஸ்ட், ரிச்சர்ட்ஸ், லாரா, பெவன் போன்றவர்களைக் கட்டுப்படுத்தி ஆட்டமிழக்கச் செய்யக்கூடிய பந்து வீச்சாளர்கள் வேண்டும். மெக்ரா, கார்னர், இம்ரான் கான், வார்ன் போன்ற பந்து வீச்சாளர்களையும் பதம் பார்க்கும் பேட்ஸ்மேன்களும் வேண்டும். கொஞ்சமா மூளையையும், அனுபவத்தையும், வரலாற்றையும் ஆராய்ந்து இந்த எதிரணியையும் உருவாக்கியுள்ளேன். இதுவும் முழுக்க முழுக்க எனக்குப் பிடித்தமான எனது கனவு அணியே! Sorry, கனவு  அணிக்கான எதிர்  (கனவு) அணியே!!!


1. சயீத் அன்வர்
2. கார்டன் க்ரீனிட்ஜ்





194 ரன்கள் எடுத்து உலகப் பந்து வீச்சாளர்களுக்கு மிரட்சியை உண்டு பண்ணியவர் அன்வர். ஒரு முறை இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் இவரை மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்கச்செய்யவே முடியவில்லை.

“ அன்வருக்கு அணை போட முடியவில்லை ” என்று நாளிதழில் தலைப்புச் செய்தி வந்தது.  ( தினமலர் என்று நினைக்கிறேன் ) சம காலத்தில் சதம் அடிப்பதில் சச்சினுடன் போட்டி போட்டவர். இடது கை ஆட்டக்காரர் என்பதால் பவர் ஃபுல் ஷாட் அடிப்பதில் கூடுதல் பலம் வேறு!



                                
     


சச்சினும் – கங்கூலியும் துவக்க ஆட்டக்காரர்களாக கலக்கிக்கொண்டிருந்தபோது அதற்கு முந்தைய இருவரது எல்லா சாதனைகளையும் கடந்து சென்றுக்கொண்டிருந்தார்கள். எல்லா போட்டிகளிலும் அந்த இருவரது பெயரும், சச்சின் – சவ்ரவின் ஒப்பீடும் தவறாமல் வந்து விடும். அந்த இருவரில் ஒருவர்தான் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் க்ரீனிட்ஜ். மற்றவர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்.

ஆக, கனவு அணிக்கான எதிர் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சயீத் அன்வரும், கார்டன் க்ரீனிட்ஜ்ஜும்!


3. ரிக்கி பாண்டிங்


                                    


விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிறகு One Down –ல் சிறப்பாகவும், அதிரடியாகவும், கன்ஸிஸ்டன்ஸியாகவும் விளையாடக்கூடிய ஒரே நபராக இருந்தவர் பாண்டிங் தான். ( ரிச்சர்ட்ஸுடன் பாண்டிங் –ஐ ஒப்பிடவில்லை )


4. ஜாஹீர் அப்பாஸ்


                                       


70 மற்றும் 80 களில் கொடிகட்டிப் பறந்த பாகிஸ்தானின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். தான் விளையாடிய 62 ஒருநாள் போட்டிகளில் 7 சதம் அடித்துள்ளார். பேட்டிங் ஆவ்ரேஜ் 47.62! நீண்ட காலம் யாரும் அதை நெருங்க முடியவில்லை. முதல் தரப் போட்டிகளில் 108 சதம் அடித்துள்ளார்.


5. மார்டின் க்ரோவ்


                                  


சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர். நியூஸிலாந்தைச் சேர்ந்தவர். மேட்ச் வின்னர். ஃபினிஷ்ஷர்.


6. ஏ பி டிவில்லியர்ஸ்


                              


ஹிஹிஹி. உள்ளூர், வெளியூர், டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, வேகப்பந்து, சுழல் பந்து, ஃபாஸ்ட் பிட்ச், பவுன்ஸ் பிட்ச், ஃப்லாட் பிட்ச் என்ன எழவா இருந்தாலும் நின்னு அடிக்கற ஒரே ஆள் இவர் மட்டும் தான். ( நான் பார்த்த வரையில் ) விக்கெட் கீப்பரும் இவர்தான். மிடில் ஆர்டரில் ஃபினிஷ்ஷரும் இவர்தான். மெக்ராத்தாவது… இம்ரான் கானாவது…


7. கபில் தேவ்


                                    


இந்தியாவின் ஒரே ஆல்ரவுண்டர்! உலகக்கோப்பையை வென்ற இந்தக் கேப்டனே கனவு எதிரணிக்கான கேப்டன். ( வேற யாரு இருக்கா? சொல்லுங்க…? )


8. வசீம் அக்ரம்


                                     


கனவு அணி பேட்ஸ்மேன்களைச் சிதைக்கும் முதல் அஸ்திவாரம் இந்த அக்ரம். இவர் எடுத்த 502 ஒரு நாள் போட்டி விக்கெட்டுகளில் 176 விக்கெட்டுகள் ஸ்டெம்புகளைப் பதம் பார்த்தவை! இவர் விளையாட வந்த பிறகுதான் ரிவர்ஸ் ஸ்விங் என்றால் என்னவென்று கிரிக்கெட் வர்னணையாளர்களுக்கே தெரிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! எகானமி 3.89. ஆவ்ரேஜ் 23.52.
முதல் தரப்போட்டிகளில் 1042 விக்கெட்டுகள்.


9. ஆலன் டொனால்ட்


                                     


164 போட்டிகளில் 272 விக்கெட்டுகள். பெளலிங் ஆவ்ரேஜ் 21.78. முதல் தர போட்டிகளில் 1216 விக்கெட்டுகள்! சமகாலத்தில் இவரது பந்துவீச்சுக்கு நடுங்காத பேட்ஸ்மேன்களே கிடையாது என்று ஆணித்தரமாக சொல்வேன்.


10. ஆண்டி ராபர்ட்ஸ்


                             


ஜோயல் கார்னர் போலவே மேற்கிந்திய தீவுகளின் அவரது சமகால சகா இவர். அச்சுறுத்தும் பந்து வீச்சாளர். ஆவ்ரேஜ் 20.35. எகானமி 3.40.


11. முரளிதரன்


                                 


பந்து வீசும்போது பார்வையிலேயே பயமுறுத்தி பாசாங்கு செய்பவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலுமே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனைக்கு சொந்தக்காரர். ஒரு நாள் போட்டிகளில் 10 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  முதல் தர போட்டிகளில் 1374 விக்கெட்டுகள். இவற்றுள் 119 முறை ஐந்து விக்கெட்டுகள்!
கனவு அணி பேட்ஸ்மேன்களை சமாளிக்கும் சுழல் சூறாவளி இவர் மட்டும் தான்!


அடுத்தபடியாக,

12. ஜெயசூர்யா
13. க்றிஸ் கெய்ர்ன்ஸ்
14. வக்கார் யூனிஸ்  

  

Mar 17, 2014

ஏழு திரைப்படங்கள்



இது கதிர்வேலன் காதல் :


                                



’ஒரு கல் ஒரு கண்ணாடி’  திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் அதீத நம்பிக்கையால் எடுக்கப்பட்ட படம் கதிர்வேலன் காதல். ஹீரோ அறிமுகத்தின்போது கோவிலில் சாமி கும்பிடுகிறார். அவரை இரண்டு பெண்கள் சைட் அடிக்கிறார்கள்…   “ ஆளு சூப்பரா இருக்காண்டி ” என இருவரும் சண்டைபோட்டு சைட் அடிக்கிறார்கள். அப்பவே தியேட்டர்காரன்கிட்ட சண்டைபோட்டு எகிறி குதிச்சி ஓடிடணும்னு நினைச்சேன்.

ஏன் சார் இப்படி? தமிழக மக்கள் பாவம் இல்லையா?

ஹீரோ நல்லவன். அவன் ரொம்ப ரொம்ப நல்லவனாகனும்னா, ஹீரோயின் கூட பழகனவன் ரொம்ப ரொம்ப கெட்டவனா இருக்கணும் எனும் பாக்கியராஜ் காலத்து கதை.
வழக்கம்போல சந்தானம் மட்டுமே ஒரே ஆறுதல். சந்தானத்தின் Continuity பயங்கரமாக மிஸ் ஆகிறது. வீரம் படத்திலும் இதே நிலைதான். கொஞ்சம் கவனியுங்கள் சந்தானம் சார்.

படத்தில் ஏகப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள். அத்தனையும் அறுவை. ஒரு கட்டத்தில் படத்தின் கதை என்ன? இப்போ நாம எங்க இருக்கிறோம்? என மயக்கம் தெளியாத அப்பாவிகளாக பார்வையாளர்கள் அலறுகிறார்கள். உதயநிதியின் அக்கா கணவராக வருபவர் ஆரம்பத்தில் தனது யதார்த்தமான பேச்சினால் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார். குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், நடனத்திலும் நடிப்பிலும் (!) முகப்பொலிவிலும் உதயநிதி ஸ்டாலினிடன் நல்லதொரு முன்னேற்றம் தெரிகிறது. ஆனாலும் அடுத்தப் படத்தின் கதையைக் கொஞ்சம் கவனமாக தேர்ந்தெடுங்க பாஸ்…

குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரவழைத்ததில் இயக்குனரும், உதயநிதியும் வெற்றிபெறுகிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் பெட்டர் லக் (அட்லீஸ்ட்) நெக்ஸ்ட் டைம்.
நயன்தாரா வழக்கம்போல செம்ம!



ஆஹா கல்யாணம் :



                                


இரண்டு பேர் சேர்ந்து ஒரு தொழில் தொடங்குகிறார்கள். வெற்றிபெறுகிறார்கள். பின்னர் ஈகோ காரணமாக இருவரும் பிரிகிறார்கள். தனித்தனியே தொழில் செய்து பெரும் நஷ்டமடைகிறார்கள்.  இருவரும் மீண்டும் இணைந்தே தீர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் வெற்றிபெறுகிறார்கள். ரொம்பப் பழைய கதை. ஆனால் பனிக்கால செர்ரி பழம் போல அவ்வளவு ஃப்ரஷ், யூத் ஃபுல், ரொமாண்டிக், கலர் ஃபுல்.

படத்தில் எல்லாமே பாஸிட்டாவாக நடக்கிறது. விக்ரமன் படம் போல. நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது. நானி பேசும் தெலுங்குத்தமிழை அவரது நண்பர் கலாய்க்கும்போது தியேட்டர் கலகலக்கிறது. நானியின் டயலாக் டெலிவரியும், பாடி லாங்க்வேஜ்-ம் ரசிக்க வைக்கிறது. “ நான் ஈ ” படத்திலும் இதே லாங்குவேஜ் தான். அதில் கொஞ்ச நேரமே வந்ததால் அந்தப் படத்தில் அலுப்புத் தட்டவில்லை. ஆனால் அடுத்தப் படத்தில் ஓரங்கட்டிவிடுவார்கள் ரசிகர்கள். உஷார் நானி. க்ளைமாக்ஸ் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களும், பர்ஃபாமன்ஸும் அப்ளாஸ் அள்ளுகிறது.

அடுத்து கதாநாயகி வாணிகபூர். சமந்தாவும், அனுஷ்கா சர்மாவும், காத்ரினா கைஃப்-பும்  சேர்ந்து செய்த கலவையாக ஜொலிக்கிறார். இவரை புதுமுகம் என்றே யாரும் சொல்லமாட்டர்கள். இவர் போட்ட குத்தாட்டத்தைப் போல சமீப கால நடிகை எவருமே போட்டதில்லை. எனர்ஜிட்டிக்காக இருக்கிறார். ஸ்க்ரீனில் இவரை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கலாம் என ஏங்க வைக்கிறார். முக அசைவுகளும், டயலாக் டெலிவரியும், கண்களின் குறுகுறுப்பும்… அடடா… கொள்ளை அழகு!

அம்மணி நடிப்பில் காட்டிய திறமையும் கூட சமீப கால நடிகை எவருமே காட்டாதது. குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகள். ஒரு நாயகி, நாயகனுடன் ஈடுபடும் ரொமான்ஸ் காட்சிகளில் ஒரு ஃபீல் இருக்க வேண்டும். கண்களில் காதல் கொப்பளிக்க வேண்டும். முகத்தில் பூரிப்பு தெறிக்க வேண்டும். உதட்டில் புன்னகை மலர வேண்டும். இதை நம்ம ஆளுங்க கெமிஸ்ட்ரி என்பார்கள். ஜஸ்ட் லைக் தட் வாணிகபூர் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார். ஐ’யெம் இம்ப்ரஸ்ட்…


                                 


அடுத்து, வாணிகபூருக்கு டப்பிங் பேசிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட்-ஐயும் குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். பெரும்பாலான நடிகைகள் பேசும்போது வாய் ஒரு கோணலாகவும், டயலாக் இன்னொரு கோணலாகவும் இருக்கும். வாணிக்கு டப்பிங் கொடுத்த பெண்மணியும் கலக்கியிருக்கிறார்.

ஃபீல் குட் மூவி பார்க்கவிரும்புகிறவர்கள் ஒருமுறைப் பார்க்கலாம்… வாணிக்கபூருக்காக மட்டுமே! ஒளிப்பதிவு ஜில்ஜில். மழையின் சாரலில் எனும் ஒரு பாடல் போதும் இந்தப் படத்தின் இசையை ரசிப்பதற்கு.
சிம்ரன் சிறிய கதாபாத்திரமொன்றில் வருகிறார். பரிதாபமாக காட்சியளிக்கிறது அவரது தோற்றம். “ சேலையில வீடு கட்டவா? ” என சிலாகிக்க வைத்த சிம்ரன், கரை ஒதுங்கிய கட்டுமரம் போல நிலைகுலைந்து போயிருக்கிறார். ஏன் இத்தனை முதிர்ச்சி? மேரேஜ் ப்ளானிங்கில் சிம்ரன் சூப்பர் ஸ்டாரைப் போன்றவர் என்கிறார்கள். ஆனால் சிம்ரன் பண்ணுவதெல்லாம் ஃப்ராடு வேலை. தொழில் தர்மம் இல்லாதவராக காண்பிக்கப்படுகிறது. இரண்டுக்கும் என்ன லாஜிக் என்று புரியவில்லை :-)





த்ரிஷ்யம் : ( மலையாளம் )



                          



இது காமன்மேன்களின் வெற்றி. கேரளாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. வசூலில் ரெக்கார்டுகள் தேய்ந்துக்கொண்டிருக்கின்றன, சென்னையிலும் 10 வாரங்களைக் கடந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் இதுவரை பார்த்த யதார்த்த சினிமாக்களில் திருவாளர் பொதுஜனங்களில் ஒருவனான நாயகனுக்கோ அல்லது அவனது குடும்பத்தில் எவரேனும் ஒருவருக்கோ அநீதி இழைக்கப்பட்டிருக்கும். அதை எதிர்த்துப் போராடுவான் நாயகன். அரசாங்கத்தையும், ஆளும் வர்க்கத்தையும் அவனால் கடைசிவரை எதிர்த்து நிற்க முடியாது. இறுதியில் சட்டத்தை தன் கையில் எடுப்பான். யதார்த்தமாக சண்டையிட்டு எதிரியைக் கொல்வான். இல்லையெனில்  நீதி கிடைக்காமலேயே சோகத்துடன் படம் நிறைவுபெறும்.

ஆனால், த்ரிஷ்யத்தில் இது எதுவுமே இல்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட திரைக்கதை சாதாரணக் கதையைக் கொண்டாட வைத்திருக்கிறது. அரசாங்கத்தையும், அடக்குமுறைகளையும் சாதாரண குடிமகன் எதிர்கொண்டு, தனது மதி கூர்மையால் எவ்வாறு வெற்றிபெறுகிறான் என்பதே திரைக்கதை. இந்த பாஸிட்டிவ் அப்ரோச் காரணமாகவே படம் பிச்சிட்டு போகுது! அதிலும் அவனது மதிகூர்மைக்கு முக்கிய காரணமாக அவன் பார்த்த திரைப்படங்கள் தான் காரணம் என காண்பிக்கப்படுகிறது. இதை படம் பார்க்கும் காமன் மேனும் தன்னுடன் ஒன்றிப் பார்க்கிறான்.

இதுவரை இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள். இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இந்திய மொழித் திரைப்படம் இது. நேட்டிவிட்டியுடன் கூடிய யதார்த்த நாயகனாக மோகன்லாலுக்கு இணையாக தமிழில் ஒருவரைக் கூட கற்பனைச் செய்ய முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமளிக்கிறது!



வல்லினம் :



                              


கிரிக்கெட்டு… கிரிக்கெட்டு… கிரிக்கெட்டுன்னு எல்லாரும் கெட்டு போறீங்களே… அதைத்தாண்டி இந்தியாவில் நிறைய விளையாட்டுகள் இருக்கு. அதையும்கொஞ்சம் கண்டுகொள்ளுங்கள். கண்டுகொள்ளாவிட்டாலும் கவலையில்லை, ஆனால் ஏளனம் செய்யாதீர்கள் என வலியுறுத்தும் கதைக்களனுக்காகவே இயக்குனரை முதலில் பாராட்டிவிடலாம்.

சில கேள்விகள் இருக்கு. இது எனது தனிப்பட்ட கேள்விகள் மட்டுமே.
முதல் விஷயம், இந்தப் படத்துக்கு காதல் அவசியமா? ஈரம் போன்ற சமரசமில்லாத படத்தைக் கொடுத்த இயக்குனர், ஏன் இந்தப் படத்தில் இவ்வளவு சமரசங்கள் செய்துகொண்டார். என்னைப் பொறுத்தவரையில் ஈரத்தில் ஏறிய கிராஃப், அதே வேகத்தில் இந்த படம் மூலம் இறங்கிவிட்டது. இதே genre –இல் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த லகானில் காதல் இருக்கும். ஆனால் நாயகனும் நாயகியும் புதியதாக சந்தித்து உயிரற்ற காதல் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டு காதல் வளர்ப்பதைப்போன்ற காட்சிகள் இல்லை. லகானில், காணும் காதலானது   நாயகனை மோட்டிவேட் செய்யும்.

                                  


இன்னொரு படத்தைப் பார்ப்போம். “ரொமாண்டிக்” புகழ் ஷாருக்கானின்      ‘சக்தே இண்டியா’. இதில் நாயகியே கிடையாது. ஷாருக்கானுக்கு ஒரு பாடல் கூட கிடையாது. பட்டி தொட்டியெங்கும் படம் ஹிட்.

                            


அடுத்து,  ‘ பாஹ் மில்க்கா பாஹ் ’ .

                               


                                 
ஃபரான் அக்தருக்கும் சோனம் கபூருக்கும் இடையில் மிக மெல்லிய காதல் படத்தின் இடையில் வந்து செல்லும். கவிதையைப்போல காட்சிப்பட்டிருக்கும். ஒரே ஒரு பாடல்… உள்ளம் கொள்ளைப் போகும் அதன் இசையில்! அந்தப் பத்து நிமிடங்களைத் தவிர படத்தில் காதல் காட்சிகளே கிடையாது. இதெல்லாம் காதல் இன்றி பட்டையைக் கிளப்பிய விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள். ஆனால் வல்லினத்தில் ஏன் சாத்தியப்படவில்லை? காதல் காட்சிகளையும், பாடல்களுக்கான lead காட்சிகளையும் கண்டு ரசிகர்கள் கதறி அழுகிறார்கள்.


                   

அடுத்து கதாநாயகி. உடன் இருக்கும் தோழியே லட்சணமாக இருக்கிறாரே… நாயகி தேர்வில் ஏன் இத்தனை அலட்சியம்? ஒரு தோழிக்கு, வயிற்று வலி மாத்திரை வாங்கிக்கொடுத்தால், அதனைப் பார்க்கும் மற்றொரு தோழிக்கு நாயகன் மீது காதல் வருகிறது. உங்களிடம் இருந்து இதுபோன்றதொரு காட்சியை எதிர்பார்க்கவில்லை அறிவழகன் சார்.

                              



                                                                         

தவிர, விளையாட்டுப்போட்டிகளில் அவர்களில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் முனைப்பை தெளிவாக காண்பிக்கவேயில்லை. வெறும் வசனங்களும், பார்வை மோதல்களும் மட்டுமே! நான் குறிப்பிட்ட மூன்று ஹிந்தி திரைப்படங்களிலும் வெற்றிக்காக காண்பிக்கப்பட்ட முனைப்பு இதில் இல்லை. ரசிகர்களால் வெற்றியை  குதுகளிக்கமுடியவில்லை.

கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய திரைப்படம் . கதாநாயகியாலும், காதல் மற்றும் டூயட் காட்சிகளாலும் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது.
ஈரம் படத்தில் ரசிக்க வைத்த, சோர்வைடைச் செய்யாத திரைக்கதை மேஜிக் இதில் இல்லை. இயக்குனரின் தடுமாற்றமும், சமரசமும் நன்கு தெரிகிறது.  
நகுல் மட்டும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.



300 Rise of an empire ( 3D ) :


                            


                                                                                                                                                                                                                                                                                                             

300  படத்தின் அடுத்த பாகம். கதைப்படி, முந்தைய பாகத்திற்கு முன்னர் நடக்கும் சில சம்பவங்களும், ஸ்பார்ட்டன்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்த அதே சமயத்தில் பெர்சிய கடற்படையுடன் ஏதென்ஸ் நாட்டினர் போரிட்ட சம்பங்களும் தான் இந்தப் படத்தின் கதை. மேக்கிங் மற்றும் 3D அனுபவத்திற்காக ஒருமுறைப் பார்க்கலாம். முழுப்படமும் ரத்தமும், போர்க்களமும் தான்! க்ரேக்கர்கள் மிகச்சிறந்தப் போர் வீர்ர்கள் என்பதை மீண்டும் ஒரு உணரலாம். அடுத்தபாகம் இன்னும் கொடூரமான போர்க்களமாக இருக்குமென நினைக்கிறேன்.
ட்ரீமர்ஸ் படத்தில் ரொமான்ஸில் கலக்கிய ஈவா க்ரீன், இந்தப் படத்தில் ஆக்‌ஷனில் பின்னி பெடல் எடுக்கிறார். பார்வையாலேயே மிரட்டுகிறார். அவரது கண்கள்..... அடடா...!

                              


க்ரேக்க வரலாற்றை அறிய விரும்புகிறவர்கள் கருந்தேளின் இந்த விமர்சனத்தையும் வாசித்து விடுங்கள்.






ஆதியும் அந்தமும் :


                                


நான் கலர் கரெக்‌ஷன் செய்த படம். அதனால் எந்த மாதிரியான டிட் பிட்ஸ் கொடுப்பதென தெரியவில்லை. முதல் பாதி அட்டகாசமான த்ரில்லர். இரண்டாம் பாதி வழக்கமான ஃப்ளாஷ்பேக் காதல், செண்டிமெண்ட். பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமையும், அதன் மூலம் தனிப்பட்ட ஒரு குடும்பம் அடையும் பாதிப்பையும், கருணைக் கொலையையும் வலியுறுத்துகிறது. வல்லினம் போலவே, இந்தப் படத்திலும் இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகளும், கதாநாயகியும் ரசிகர்களின் பொறுமையைப் பெரிதும் சோதிக்கின்றன. த்ரில்லர் படங்களுக்கு ஒளிப்பதிவும் இசையும் சேர்ந்து கைகொடுக்க வேண்டும். ஒளிப்பதிவு க்ளாஸ். இசை இந்தப் படத்திற்கு பர்ஃபெக்ட். ஆனால் பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். ரெண்டு ஸ்டேட் தள்ளியிருக்கும் மும்பையில் எடுக்கப்படும் எண்ணற்ற இந்திப் படங்களும், மராத்தி படங்களும் பாடல்களே இல்லாமல் பெரும் கவனம் பெறுகின்றன. இந்த நிலை தமிழுக்கும் வர வேண்டும். தமிழ் ரசிகர்கள் நிச்சம் ஆதரவு கொடுப்பார்கள்.




ஆயிரத்தில் ஒருவன் :


                              


புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவியும் முதன்முதலாக இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன்

சாந்தம் அரங்கம் நிரம்பி வழிந்தது. எம்.ஜி.ஆர் பக்தர்கள் அறக்கட்டளையை சேர்ந்த பலர் நின்றுக்கொண்டே படம் பார்த்தனர். ஐம்பதைக் கடந்த நிறைய பேர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்.
படம் துவங்கிய சிறிது நேரத்தில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து அனைவருக்கும் ‘5 ஸ்டார்சாக்லேட் கொடுத்தனர். ஏனெனெ விசாரித்தால்,

இது சந்தோஷமான மூமெண்ட் சார்... நீங்க எல்லாரும் தலைவர் படம் பார்க்க வந்திருக்கீங்க... சந்தோஷத்தைக் கொண்டாடத்தான் இந்த ஸ்வீட்என சந்தோஷமாக கொடுத்துச் சென்றனர்.

படத்தின் வசனங்களும், பாடல்களும் தாறுமாறு...
ஒவ்வொரு பாடலையும் ஒன்ஸ்மோர் கேட்டு அரங்கை அதிரச்செய்தனர் 50+ ரசிகர்கள்.  புரட்சித்தலைவியின் காதல் சொட்டும் பார்வைக்கும், வசனங்களுக்கும் கூடுதல் பூரிப்பில் ஆரவாரப்படுத்தினர்.

எம்.ஜி.ஆர் படமொன்றை திரையில் பார்ப்பது இதுதான் முதல்முறை. அவர் ஏன் கடவுளாக இன்றளவும் கொண்டாடப்படுகிறார் என்பதை உணர முடிந்தது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒளி/ஒலி இரண்டும் புதுப்பிக்கப்பட்டு மிளிர்ந்து வீறுநடை போடுகிறார் ஆயிரத்தில் ஒருவன்.

டிஜிட்டல் என்பதை சுருங்கக்கூறின், பழைய நெகட்டிவை ஸ்கேன் செய்து அதிலுள்ள scratch, dust , pinholes போன்றவற்றை ஒவ்வொரு ஃப்ரேமாக துல்லியமாக நீக்குவதாகும். பின்னர் நவீன தொழில்நுட்பத்துடன் அதற்குண்டான வண்ணங்களைக் கொடுக்கவேண்டும்.
இது ஒரு நல்ல முயற்சி. படத்தை வெளியீடு செய்த நிறுவனமும், டெக்னிக்கல் பங்களிப்பை அளித்த பிரசாத் நிறுவனமும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்!

சினிமாப் பிரியர்கள் அனைவரும் அவசியம் காணவேண்டிய சித்திரம் இந்த லேட்ட்ஸ்ட்ஆயிரத்தில் ஒருவன்