Feb 21, 2015

உலகக்கோப்பை கனவு அணியும் அதன் எதிரணியும்...


ஆர்வமுடன் கிரிக்கெட் பார்க்கும் எல்லாருமே தங்கள் நாட்டு வீரர்களின் சிறப்பம்சங்களைப் போலவே எதிரணி வீரர்களின் பலம் பலவீனங்களையும் நன்கு அறிவர். நினைவு தெரிந்து கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய பேட்ஸ்மேன்களாக சனத் ஜெயசூர்யாவையும் ( இலங்கை ), சயீத் அன்வரையும் ( பாகிஸ்தான் ) குறிப்பிடுவேன். மற்ற அணிகளுக்கு எதிராக சுமாராக கூட விளையாடாவிட்டாலும், இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது இருவரும் விஸ்வரூபம் எடுத்துவிடுவர். இவர்களைத் தவிர, கேரி கிர்ஸ்டன், ஹட்ஸன், கல்லினன், லாரா, சந்தர்பால், மார்க் வாஹ், மைக்கேல் பெவன், க்றிஸ் கெய்ன்ஸ், நாதன் அஸ்லே, மெக்மில்லன், இஜாஸ் அஹமது, ஷோயம் மாலிக், அரவிந்த டி சில்வா, ரணதுங்கா… இவர்களெல்லாம் நாஸ்டால்ஜியாவில் அடிக்கடி வந்து போகும் பேட்ஸ்மேன்கள். பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை டேமியன் ஃப்ளெமிங், மெக்ராத், சமிந்தா வாஸ் , வசீம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஷக்லைன் முஷ்தாக், அக்யுப் ஜாவேத், பொல்லாக், டொனால்ட், அம்ப்ரோஸ், வால்ஷ், டொமினிக் கார்க், ட்யோன் நாஷ், ஹீத் ஸ்ட்ரீக், இவர்களெல்லாம் நான் ஸ்கூல் படிக்கும்போது கெட்ட வார்த்தைகளால் என்னிடம் திட்டு வாங்கியவர்கள். 


பத்தாம் வகுப்பு படிக்கும்போது,  ஒருநாள் சற்றும் எதிர்பாராவண்ணம் காட்சி கிரிக்கெட் போட்டி ஒன்றை     ESPN

 சானலில் காணநேட்டது. சச்சின், ஜெயசூர்யா, அன்வர், டி சில்வா, க்றிஸ் கெய்ர்ன்ஸ், வசீம் அக்ரம் எல்லாரும் ஒரே அணியில்! எதிர் அணியில் அமீர் சோஹைல், அசாருதீன், கங்கூலி, ஸ்ரீநாத், கும்ளே!!! சச்சின் வழக்கம் போலவே அந்தப் போட்டியிலும் சதம் அடித்து வெற்றிக்கு உதவினார். கனவு அணிக்கான விதை தோன்றியது அன்றுதான். அதன் பிறகு, மீண்டும் அதுபோன்றதொரு காட்சிப் போட்டிக்காக ஏங்கிக் கிடந்தோம். எதுவும் நடந்தபாடில்லை! காலப்போக்கில் ஐபிஎல் தலையெடுத்து காட்சிப் போட்டிகளின் மவுசை தவிடு பொடியாக்கி விட்டது.
2015 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை துவங்கியதும், எனக்குப் பிடித்த கனவு அணி ஒன்றைத் தேர்வு செய்ய உள்ளுக்குள் ஆர்வம் தூண்டியதன் விளைவே இந்தக் கனவு அணி. இது முழுக்க முழுக்க எனது நாஸ்டால்ஜியாவுடன் தொடர்புடைய, எனக்குப் பிடித்த வீரர்களெல்லாம் அந்தந்த வரிசையில் அணிவகுக்கும் கனவு அணி!


1. சச்சின் தெண்டுல்கர்
2. ஆதம் கில்கிறிஸ்ட்


ஒரு நாள் போட்டி… துவக்க ஆட்டக்காரர் என்றால் அது சச்சின் தான். மாற்றுக்கருத்தே இல்லை. ( ஆனாலும் ஆக்ரோஷமான ஆட்டக்காரர் என்ற வகையில் இந்திய துவக்க ஆட்டகாரராக சச்சினைக் காட்டிலும் ஷேவாக் தான் எனக்கு மிகவும் பிடித்தவர். )

 
வலது – இடது துவக்க ஆட்டக்காரரகள் எனும் கூட்டணியின்படி இடது கை ஆட்டக்காரரான கில்கிறிஸ்ட் எனது அடுத்த சாய்ஸ். அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்லாது மிகச்சிறந்த விக்கெட் கீப்பரும் கூட என்பது அனைவரும் அறிந்ததே. ஒருநாள் போட்டிகளில் இவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 97.


3. அரவிந்த டி சில்வா


                              ட்ராவிட்டுக்கு முன்பாகவே எனக்குத் தெரிந்த க்ளாசிக் ப்ளேயர் இவர்தான். அதிரடி வேண்டும் போது அதிரடியும், பொறுமை தேவைப்படும் போது நிதானமாகவும் விளையாடுவது இவரது சிறப்பு. இந்த இடத்திற்காக ரிக்கி பாண்டிங்கும் மனதில் வந்து போனார்.


4. விவியன் ரிச்சர்ட்ஸ்

இவர் விளையாடி நான் பார்த்ததில்லை. எனது மாமா இவரது தீவிர விசிறி. இன்றைய அதிரடி ஆட்டக்காரர்கள் அனைவருக்கும் இவர்தான் பிதாமகர்!
இவரது பேட்டிங் ஆவ்ரேஜ் 47. ஸ்ட்ரைக் ரேட் 90. ஒரு நாள் போட்டிகளில் 118 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


5. ப்ரயன் லாரா
இந்த இடது கை பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்ளும் அழகிற்காகவே இவரை கனவு அணியில் சேர்த்துக்கொள்ளலாம்!


6. கால்லிஸ்
ஒரு நாள் போட்டிகளில் 11,000 –க்கும் அதிகமான ரன்கள், பேட்டிங் ஆவ்ரேஜ் 45. எடுத்த விக்கெட்டுகள் 273. சமகாலத்தில் தலைச்சிறந்த ஆல்ரவுண்டர் இவர் மட்டும் தான்!
 

7. மைக்கேல் பெவன்

முடிந்தால் என்னை அவுட் பன்ணுங்கடா பார்ப்போம் என்று பேட்டின் மூலம் சவால் விடக் கூடிய வெற்றிகரமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், சிறந்த ஃபினிஷ்ஷர். இவர் இல்லாமல் ஒரு கனவு அணியா? கிரிக்கெட் என்றால் என்னவென்று ஓரளவுக்கு புரிய ஆரம்பித்த காலகட்டத்தில் 50-க்கும் மேலாக பேட்டிங் ஆவ்ரேக் வைத்திருந்த கடோர்கஜன்!


8. இம்ரான் கான்

இவர் விளையாடியும் நான் பார்த்ததில்லை. ஆனால் எனது மாமா சொல்லி கேட்டிருக்கிறேன். வசீகரமான முகம், ஹேர் ஸ்டைல் இவை இரண்டுமே இவர் மீது ஒரு ஈடுபாட்டை உண்டாக்கியது. பாகிஸ்தான்  அணிக்கு பல இளைஞர்களை ஊக்கம் கொடுத்து கொண்டு வந்தவர். சிறந்த ஆல் ரவுண்டரும் கூட. தான் விளையாடிய 175 ஒருநாள் போட்டிகளில் 130-க்கும் அதிகமான போட்டிகளுக்கு  பாகிஸ்தானின் வெற்றிகரமான கேப்டனாக வழிநடத்திய  இவரே எனது கனவு அணிக்கான கேப்டனும் கூட!


9. ஜோயல் கார்னர்
மேற்கிந்தியத் தீவுகளின் ஓங்கி உயர்ந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர். கால் நூற்றாண்டுகளைக் கடந்த பின்னரும் கூட இவரது பெளலிங் ஆவ்ரேஜ், எகானமி ரேட் போன்றவற்றை நெருங்கி வர ஆள் இல்லை! ஆவ்ரேஜ் 18.83. எகானமி ரேட் 3 !!!


10. மெக்ராத்

                  
ஆறு பால் போடணும். ஆறு பாலும் ஒரே நீளத்தில் போடணும். ஒரே வேகத்தில் போடணும். ஒரே உயரத்தில் போடணும்!  இதைச் செய்யக்கூடியவர் இவர் ஒருவர் மட்டும் தான். அளவுகோலால் அளந்துப் போடுவதைப் போல கனகச்சிதமாக பந்து வீசுவார். என்னிடம் அதிகப்படியான சாபத்திற்கு ஆளானவரும் இவர்தான். 250 போட்டிகளில் 381 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆவ்ரேஜ் 22 . எகானமி ரேட் 3.88. ஏழு முறை ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனைக்கு சொந்தக்காரர்.


11. ஷேன் வார்ன்
நூற்றாண்டின் சிறந்தப் பந்தை வீசிய மாயாஜால பந்து வீச்சாளர். ஆடும் பதினோரு பேரில் ஒரு ஸ்பின்னர் தான் தேவை எனும் பட்சத்தில் முரளிதரனைக் காட்டிலும் இவரே எனது தேர்வு. ஆசிய ஆடுகளங்களில் ஸ்பின்னர் உருவாவது சுலபம். ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் இதுபோன்றதொரு ஸ்பின்னர் உருவாவது ஆச்சர்யம்தான்!

விளையாடுவது பதினோரு பேர்தான் என்றாலும் அணியில் 14 பேர் வேண்டும் அல்லவா?

12. விராத் கோஹ்லி
13. ஸ்டீவ் வாஹ்
14. இயன் போத்தம்


கனவு அணிக்காக நான் ரொம்ப யோசிக்கவே இல்லை. டி சில்வா / பாண்டிங்,
இம்ரான் கான் / கபில் தேவ் , ஷேன் வார்ன் / முரளிதரன்


ஒரு பேட்ஸ்மேன், ஒரு ஆல்ரவுண்டர், ஒரு ஸ்பின்னர் இதில் மட்டுமே கொஞ்சம் யோசிக்க வேண்டியிருந்தது.


இந்தக் கனவு அணியை உருவாக்கிய பின்னர் திடீரென ஒரு எண்ணம் உதித்தது. கனவு அணிக்கான எதிர் (கனவு) அணி ஒன்றையும் உருவாக்கினால் என்ன? ஜாலியா இருக்குமே… சச்சின், கில்கிறிஸ்ட், ரிச்சர்ட்ஸ், லாரா, பெவன் போன்றவர்களைக் கட்டுப்படுத்தி ஆட்டமிழக்கச் செய்யக்கூடிய பந்து வீச்சாளர்கள் வேண்டும். மெக்ரா, கார்னர், இம்ரான் கான், வார்ன் போன்ற பந்து வீச்சாளர்களையும் பதம் பார்க்கும் பேட்ஸ்மேன்களும் வேண்டும். கொஞ்சமா மூளையையும், அனுபவத்தையும், வரலாற்றையும் ஆராய்ந்து இந்த எதிரணியையும் உருவாக்கியுள்ளேன். இதுவும் முழுக்க முழுக்க எனக்குப் பிடித்தமான எனது கனவு அணியே! Sorry, கனவு  அணிக்கான எதிர்  (கனவு) அணியே!!!


1. சயீத் அன்வர்
2. கார்டன் க்ரீனிட்ஜ்

194 ரன்கள் எடுத்து உலகப் பந்து வீச்சாளர்களுக்கு மிரட்சியை உண்டு பண்ணியவர் அன்வர். ஒரு முறை இந்தியாவுடன் டெஸ்ட் போட்டியில் இவரை மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்கச்செய்யவே முடியவில்லை.

“ அன்வருக்கு அணை போட முடியவில்லை ” என்று நாளிதழில் தலைப்புச் செய்தி வந்தது.  ( தினமலர் என்று நினைக்கிறேன் ) சம காலத்தில் சதம் அடிப்பதில் சச்சினுடன் போட்டி போட்டவர். இடது கை ஆட்டக்காரர் என்பதால் பவர் ஃபுல் ஷாட் அடிப்பதில் கூடுதல் பலம் வேறு!                                
     


சச்சினும் – கங்கூலியும் துவக்க ஆட்டக்காரர்களாக கலக்கிக்கொண்டிருந்தபோது அதற்கு முந்தைய இருவரது எல்லா சாதனைகளையும் கடந்து சென்றுக்கொண்டிருந்தார்கள். எல்லா போட்டிகளிலும் அந்த இருவரது பெயரும், சச்சின் – சவ்ரவின் ஒப்பீடும் தவறாமல் வந்து விடும். அந்த இருவரில் ஒருவர்தான் மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் க்ரீனிட்ஜ். மற்றவர் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ்.

ஆக, கனவு அணிக்கான எதிர் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சயீத் அன்வரும், கார்டன் க்ரீனிட்ஜ்ஜும்!


3. ரிக்கி பாண்டிங்


                                    


விவியன் ரிச்சர்ட்ஸ்க்கு பிறகு One Down –ல் சிறப்பாகவும், அதிரடியாகவும், கன்ஸிஸ்டன்ஸியாகவும் விளையாடக்கூடிய ஒரே நபராக இருந்தவர் பாண்டிங் தான். ( ரிச்சர்ட்ஸுடன் பாண்டிங் –ஐ ஒப்பிடவில்லை )


4. ஜாஹீர் அப்பாஸ்


                                       


70 மற்றும் 80 களில் கொடிகட்டிப் பறந்த பாகிஸ்தானின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன். தான் விளையாடிய 62 ஒருநாள் போட்டிகளில் 7 சதம் அடித்துள்ளார். பேட்டிங் ஆவ்ரேஜ் 47.62! நீண்ட காலம் யாரும் அதை நெருங்க முடியவில்லை. முதல் தரப் போட்டிகளில் 108 சதம் அடித்துள்ளார்.


5. மார்டின் க்ரோவ்


                                  


சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவர். நியூஸிலாந்தைச் சேர்ந்தவர். மேட்ச் வின்னர். ஃபினிஷ்ஷர்.


6. ஏ பி டிவில்லியர்ஸ்


                              


ஹிஹிஹி. உள்ளூர், வெளியூர், டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி, வேகப்பந்து, சுழல் பந்து, ஃபாஸ்ட் பிட்ச், பவுன்ஸ் பிட்ச், ஃப்லாட் பிட்ச் என்ன எழவா இருந்தாலும் நின்னு அடிக்கற ஒரே ஆள் இவர் மட்டும் தான். ( நான் பார்த்த வரையில் ) விக்கெட் கீப்பரும் இவர்தான். மிடில் ஆர்டரில் ஃபினிஷ்ஷரும் இவர்தான். மெக்ராத்தாவது… இம்ரான் கானாவது…


7. கபில் தேவ்


                                    


இந்தியாவின் ஒரே ஆல்ரவுண்டர்! உலகக்கோப்பையை வென்ற இந்தக் கேப்டனே கனவு எதிரணிக்கான கேப்டன். ( வேற யாரு இருக்கா? சொல்லுங்க…? )


8. வசீம் அக்ரம்


                                     


கனவு அணி பேட்ஸ்மேன்களைச் சிதைக்கும் முதல் அஸ்திவாரம் இந்த அக்ரம். இவர் எடுத்த 502 ஒரு நாள் போட்டி விக்கெட்டுகளில் 176 விக்கெட்டுகள் ஸ்டெம்புகளைப் பதம் பார்த்தவை! இவர் விளையாட வந்த பிறகுதான் ரிவர்ஸ் ஸ்விங் என்றால் என்னவென்று கிரிக்கெட் வர்னணையாளர்களுக்கே தெரிந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! எகானமி 3.89. ஆவ்ரேஜ் 23.52.
முதல் தரப்போட்டிகளில் 1042 விக்கெட்டுகள்.


9. ஆலன் டொனால்ட்


                                     


164 போட்டிகளில் 272 விக்கெட்டுகள். பெளலிங் ஆவ்ரேஜ் 21.78. முதல் தர போட்டிகளில் 1216 விக்கெட்டுகள்! சமகாலத்தில் இவரது பந்துவீச்சுக்கு நடுங்காத பேட்ஸ்மேன்களே கிடையாது என்று ஆணித்தரமாக சொல்வேன்.


10. ஆண்டி ராபர்ட்ஸ்


                             


ஜோயல் கார்னர் போலவே மேற்கிந்திய தீவுகளின் அவரது சமகால சகா இவர். அச்சுறுத்தும் பந்து வீச்சாளர். ஆவ்ரேஜ் 20.35. எகானமி 3.40.


11. முரளிதரன்


                                 


பந்து வீசும்போது பார்வையிலேயே பயமுறுத்தி பாசாங்கு செய்பவர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி இரண்டிலுமே அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய சாதனைக்கு சொந்தக்காரர். ஒரு நாள் போட்டிகளில் 10 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.  முதல் தர போட்டிகளில் 1374 விக்கெட்டுகள். இவற்றுள் 119 முறை ஐந்து விக்கெட்டுகள்!
கனவு அணி பேட்ஸ்மேன்களை சமாளிக்கும் சுழல் சூறாவளி இவர் மட்டும் தான்!


அடுத்தபடியாக,

12. ஜெயசூர்யா
13. க்றிஸ் கெய்ர்ன்ஸ்
14. வக்கார் யூனிஸ்  

  

No comments:

Post a Comment