Aug 30, 2016

தமிழ் சினிமாவில் பாடல்கள் #2


                      


 

                   


         


தமிழ் சினிமாவில் பாடல்களைப் படமாக்குவதில் கிரியேட்டிவிட்டி, மெனக்கெடல், கலைநயம், அழகியல் சார்ந்த விஷயங்கள் போன்றவற்றில் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் கேமரா நிகர் இல்லாதது. இது எனது தனிப்பட்ட கருத்து. இந்தியன் படத்தில் வரும் இந்த மாண்டேஜ் பாடலில் பல விஷயங்கள் நுணுக்கமாக அழகியல் தன்மையுடன் ரசிக்கும்படி படமாக்கப்பட்டிருக்கும். பாடல்களைப் படமாக்க ( குறிப்பாக மாண்டேஜ் பாடல்களை ) அதற்கென்று ஸ்க்ரிப்ட் ஒன்றும் செய்ய வேண்டும். அது கதையுடன் பயணிக்க வேண்டும். பாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சிகள் இருக்க வேண்டும். பார்வையாளர்கள் காலத்துக்கும் அதை ரசித்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்தப் பாடல் மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும். பாடலை ஒரு முறை பாருங்கள். பின்னர் கதாபாத்திரங்களின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் இங்கே கீழே ஒரு முறை வாசியுங்கள். எவ்வளவு விஷயங்கள்...! இவை அனைத்தும் ஐந்து நிமிட பாடலுக்குள் அடங்கிவிடும். ஒளிப்பதிவு - எடிட்டிங் இரண்டும் சரிவிகிதமாக இங்கே விளையாடியிருக்கும்! கூடவே பாடல் வரிகளும், இசையும், ஜேசுதாஸின் குரலும்!
இனி காட்சிகள்...
* அதிகாலையில் எழுந்திருப்பாள்.
* ஆட்டுக்குட்டியைக் கொஞ்சுவாள்.
* நீருடன் விளையாடுவாள்.
* பரதநாட்டிய வகுப்பு.
* பரதநாட்டியம் கற்றுக்கொள்ளும்போது குடும்பத்தில் உள்ள அம்மா, அப்பா, அண்ணன் மூவரின் ரியாக்‌ஷன்கள்.
* பரதநாட்டிய பாடலில் கடுப்பான அண்ணன் களமிறங்கி ஆடும் நடனம். அப்போது மாறும் இசை.
* பொய்க்கால் குதிரையுடன் அந்த சின்னஞ்சிறு குடும்பமே சந்தோஷமாக விளையாடுவது! ( இவை அனைத்தும் ஸ்லோ மோஷனில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் )
* அப்பா - அம்மா இருவர்களது கைகளையும் ஒன்றாக இணைத்து விரல்களுக்கு மருதாணி வைத்து கிச்சு கிச்சு மூட்டுவது!
* காகிதக் கப்பல் செய்து ஆற்றில் விட்டு விளையாடுவது. காகிதம் காலியானதும் அழுது அடம் பிடிக்கும் மகளுக்கு நூறு ரூபாய் தாள்களை கொடுத்து கப்பல் செய்து ஆற்றில் விட வைக்கும் காட்சி! அப்போது பின்னணியில் ஒலிக்கும் “ அட, பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு” எனும் வரிகள். ( ஒரு ரூபாய் கூட லஞ்சம் தராத கொள்கைவாதி நமது இந்தியன் தாத்தா என்பது கவனிக்க வேண்டிய விஷயம் )
* அம்மா, தங்கை இருவரது ஜடையையும் ஒன்றாக பின்னி விளையாடும் மகன். சிரித்தபடியே வேடிக்கைப் பார்க்கும் அப்பா!
* பல்லவி முடிந்து இசை ஆரம்பமாகும்போது அந்த இசைக்கு ஏற்றபடி ரிதமிக்காக சிங்க் ஆகும் காட்சிகள்.
1.47 -இல் இருந்து பார்த்தால் அது புரியும்!
* இந்தியன் தாத்தா சேற்றில் நடனமாட, அவருக்கு பின்னால் அவரது மனைவியும் அவரைப் போல நடனமாடும் காட்சியும், அவர் திரும்பியதும் சட்டென சுதாரிக்கும் பாட்டியின் ரியாக்‌ஷன். நக்கலாக மனைவி நடக்க, ஒற்றைக் காலால் நடனமாடியபடி மனைவியை ரசிக்கும் இந்தியன் தாத்தா! இவை ஸ்லோ மோஷனில் படமாக்கப்பட்டிருக்கும்.
* பட்டம் பறக்க விடுவது. அப்பா ஏர் உழும்போது அதில் அமர்ந்து பயணிக்கும் மகள். இது டாப் ஆங்கிள் ஷாட்டில் காட்டப்படும். கரிசல் மண்ணில், வெண்ணிற உடையில் நான்கு பேரும் குடை பிடித்து செல்லும் காட்சி. ஆளுக்கொரு சின்னஞ்சிறு குடையை தலையில் கட்டிக்கொண்டு மழைபெய்யும்போது ஆற்றில் விளையாடுவது. அந்தச் சின்ன குடைக்குள் இந்தியன் தாத்தாவும், அவரது மனைவியும் அடைக்கலமாவது. ஆற்றின் நடுவில் டைனிங் டேபிள் அமைத்து குடும்பத்துடன் அமர்ந்து உணவருந்துவது. அப்போது நிலைத்தடுமாறி மகன் பின்னோக்கி விழுவது. இரண்டு கமல் என்பதால் கீழே விழும் ( டூப் ) கமல் குடை பிடித்து தனது முகத்தை மறைத்துக்கொண்டிருப்பார். அதற்கு முந்தைய காட்சிகளில் அனைவரும் அந்தக் குடையை தலையில் கட்டியிருப்பதால் இந்த ( டூப் ) கமல் முகம் தெரியாவிட்டாலும் பார்வையாளர்கள் அது கமல் என்றே நம்புவார்கள். ( இதெல்லாம் எடிட்டிங் & ஷாட் டிவிஷனில் படிக்க வேண்டிய பாடங்கள்! ) அப்பாவின் நரைமுடிகளை பிடுங்கி, அப்பா போலவே ஓர் ஓவியத்தை உண்டாக்குவது....
முதலாவது சரணத்தின்போது காட்சிப்படுத்திய காட்சிகள் இவை!
* இளநீரில் பீர் கலந்து அம்மாவுக்கு குடிக்க கொடுப்பது. அதைக் குடித்துவிட்டு அம்மா செய்யும் ரகளை... அவர் முத்தம் கொடுக்கும் போது இந்தியன் தாத்தா வெட்கப்படும் தருணம்.
* வேப்பங்குச்சியில் பேஸ்ட்டை வைத்து பல் துலக்கும் யுக்தி.
* தானே தச்சுப்பணி செய்து மகளுக்கு செய்து தரும் மர பொம்மை. எப்போதும் அதனுடன் வலம் வரும் மகள்.
* பெண் பார்க்க வரும் காட்சி. மாப்பிள்ளை வேண்டாம் என்று கார் முழுக்க சாணி தட்டி வைப்பது. இந்த மாப்பிள்ளைக்கு என்னம்மா குறை என்று கேட்கும் அப்பாவிடம் நான் எப்பவும் உங்க கூடவே இருக்கேன் என்று செய்கைகளின் மூலமாகவே உணர்த்தும் காட்சிகள்.
* இந்தியன் தாத்தாவுக்கு போட்ட மேக்-அப் கலையாமல் பயபக்தியுடன் அவருக்கு ஷேவிங் செய்துவிடும் காட்சி.
* மாலை வேளையில் வயதான கணவனும் மனைவியும் வீட்டு வாசலில் அமர்ந்து ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டும் காட்சி.
* காது வரைக்கும் கம்பளி போர்த்தும் காட்சி.
* உன் விழியால் பிறர்க்கழுதால் கண்ணீரும் ஆனந்தம் ஆனந்தம் என்று காட்சிப்படுத்திய விதம்!
* எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டு கமல்களும் ஒன்றாக நடனமாடும் காட்சி. அப்போது பின்னணியில் உள்ள பீரோவில் உள்ள கண்ணாடியில் பிரதிபலிக்கும் இருவரது பிம்பமும்... 1996 -இல் இதன் கிராபிக்ஸ்...
என இந்தப் பாடல் மாண்டேஜ் பாடல்களுக்கு ஓர் பாடம்!

2 comments: