Mar 17, 2014

ஏழு திரைப்படங்கள்



இது கதிர்வேலன் காதல் :


                                



’ஒரு கல் ஒரு கண்ணாடி’  திரைப்படத்திற்கு மக்கள் கொடுத்த ஆதரவின் அதீத நம்பிக்கையால் எடுக்கப்பட்ட படம் கதிர்வேலன் காதல். ஹீரோ அறிமுகத்தின்போது கோவிலில் சாமி கும்பிடுகிறார். அவரை இரண்டு பெண்கள் சைட் அடிக்கிறார்கள்…   “ ஆளு சூப்பரா இருக்காண்டி ” என இருவரும் சண்டைபோட்டு சைட் அடிக்கிறார்கள். அப்பவே தியேட்டர்காரன்கிட்ட சண்டைபோட்டு எகிறி குதிச்சி ஓடிடணும்னு நினைச்சேன்.

ஏன் சார் இப்படி? தமிழக மக்கள் பாவம் இல்லையா?

ஹீரோ நல்லவன். அவன் ரொம்ப ரொம்ப நல்லவனாகனும்னா, ஹீரோயின் கூட பழகனவன் ரொம்ப ரொம்ப கெட்டவனா இருக்கணும் எனும் பாக்கியராஜ் காலத்து கதை.
வழக்கம்போல சந்தானம் மட்டுமே ஒரே ஆறுதல். சந்தானத்தின் Continuity பயங்கரமாக மிஸ் ஆகிறது. வீரம் படத்திலும் இதே நிலைதான். கொஞ்சம் கவனியுங்கள் சந்தானம் சார்.

படத்தில் ஏகப்பட்ட ஃப்ளாஷ்பேக் காட்சிகள். அத்தனையும் அறுவை. ஒரு கட்டத்தில் படத்தின் கதை என்ன? இப்போ நாம எங்க இருக்கிறோம்? என மயக்கம் தெளியாத அப்பாவிகளாக பார்வையாளர்கள் அலறுகிறார்கள். உதயநிதியின் அக்கா கணவராக வருபவர் ஆரம்பத்தில் தனது யதார்த்தமான பேச்சினால் கொஞ்சம் கவனம் ஈர்க்கிறார். குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், நடனத்திலும் நடிப்பிலும் (!) முகப்பொலிவிலும் உதயநிதி ஸ்டாலினிடன் நல்லதொரு முன்னேற்றம் தெரிகிறது. ஆனாலும் அடுத்தப் படத்தின் கதையைக் கொஞ்சம் கவனமாக தேர்ந்தெடுங்க பாஸ்…

குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு வரவழைத்ததில் இயக்குனரும், உதயநிதியும் வெற்றிபெறுகிறார்கள்.
ஹாரிஸ் ஜெயராஜ் பெட்டர் லக் (அட்லீஸ்ட்) நெக்ஸ்ட் டைம்.
நயன்தாரா வழக்கம்போல செம்ம!



ஆஹா கல்யாணம் :



                                


இரண்டு பேர் சேர்ந்து ஒரு தொழில் தொடங்குகிறார்கள். வெற்றிபெறுகிறார்கள். பின்னர் ஈகோ காரணமாக இருவரும் பிரிகிறார்கள். தனித்தனியே தொழில் செய்து பெரும் நஷ்டமடைகிறார்கள்.  இருவரும் மீண்டும் இணைந்தே தீர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இறுதியில் வெற்றிபெறுகிறார்கள். ரொம்பப் பழைய கதை. ஆனால் பனிக்கால செர்ரி பழம் போல அவ்வளவு ஃப்ரஷ், யூத் ஃபுல், ரொமாண்டிக், கலர் ஃபுல்.

படத்தில் எல்லாமே பாஸிட்டாவாக நடக்கிறது. விக்ரமன் படம் போல. நமக்கும் சந்தோஷமாக இருக்கிறது. நானி பேசும் தெலுங்குத்தமிழை அவரது நண்பர் கலாய்க்கும்போது தியேட்டர் கலகலக்கிறது. நானியின் டயலாக் டெலிவரியும், பாடி லாங்க்வேஜ்-ம் ரசிக்க வைக்கிறது. “ நான் ஈ ” படத்திலும் இதே லாங்குவேஜ் தான். அதில் கொஞ்ச நேரமே வந்ததால் அந்தப் படத்தில் அலுப்புத் தட்டவில்லை. ஆனால் அடுத்தப் படத்தில் ஓரங்கட்டிவிடுவார்கள் ரசிகர்கள். உஷார் நானி. க்ளைமாக்ஸ் காட்சிகளில் அவர் பேசும் வசனங்களும், பர்ஃபாமன்ஸும் அப்ளாஸ் அள்ளுகிறது.

அடுத்து கதாநாயகி வாணிகபூர். சமந்தாவும், அனுஷ்கா சர்மாவும், காத்ரினா கைஃப்-பும்  சேர்ந்து செய்த கலவையாக ஜொலிக்கிறார். இவரை புதுமுகம் என்றே யாரும் சொல்லமாட்டர்கள். இவர் போட்ட குத்தாட்டத்தைப் போல சமீப கால நடிகை எவருமே போட்டதில்லை. எனர்ஜிட்டிக்காக இருக்கிறார். ஸ்க்ரீனில் இவரை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கலாம் என ஏங்க வைக்கிறார். முக அசைவுகளும், டயலாக் டெலிவரியும், கண்களின் குறுகுறுப்பும்… அடடா… கொள்ளை அழகு!

அம்மணி நடிப்பில் காட்டிய திறமையும் கூட சமீப கால நடிகை எவருமே காட்டாதது. குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகள். ஒரு நாயகி, நாயகனுடன் ஈடுபடும் ரொமான்ஸ் காட்சிகளில் ஒரு ஃபீல் இருக்க வேண்டும். கண்களில் காதல் கொப்பளிக்க வேண்டும். முகத்தில் பூரிப்பு தெறிக்க வேண்டும். உதட்டில் புன்னகை மலர வேண்டும். இதை நம்ம ஆளுங்க கெமிஸ்ட்ரி என்பார்கள். ஜஸ்ட் லைக் தட் வாணிகபூர் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார். ஐ’யெம் இம்ப்ரஸ்ட்…


                                 


அடுத்து, வாணிகபூருக்கு டப்பிங் பேசிய டப்பிங் ஆர்ட்டிஸ்ட்-ஐயும் குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். பெரும்பாலான நடிகைகள் பேசும்போது வாய் ஒரு கோணலாகவும், டயலாக் இன்னொரு கோணலாகவும் இருக்கும். வாணிக்கு டப்பிங் கொடுத்த பெண்மணியும் கலக்கியிருக்கிறார்.

ஃபீல் குட் மூவி பார்க்கவிரும்புகிறவர்கள் ஒருமுறைப் பார்க்கலாம்… வாணிக்கபூருக்காக மட்டுமே! ஒளிப்பதிவு ஜில்ஜில். மழையின் சாரலில் எனும் ஒரு பாடல் போதும் இந்தப் படத்தின் இசையை ரசிப்பதற்கு.
சிம்ரன் சிறிய கதாபாத்திரமொன்றில் வருகிறார். பரிதாபமாக காட்சியளிக்கிறது அவரது தோற்றம். “ சேலையில வீடு கட்டவா? ” என சிலாகிக்க வைத்த சிம்ரன், கரை ஒதுங்கிய கட்டுமரம் போல நிலைகுலைந்து போயிருக்கிறார். ஏன் இத்தனை முதிர்ச்சி? மேரேஜ் ப்ளானிங்கில் சிம்ரன் சூப்பர் ஸ்டாரைப் போன்றவர் என்கிறார்கள். ஆனால் சிம்ரன் பண்ணுவதெல்லாம் ஃப்ராடு வேலை. தொழில் தர்மம் இல்லாதவராக காண்பிக்கப்படுகிறது. இரண்டுக்கும் என்ன லாஜிக் என்று புரியவில்லை :-)





த்ரிஷ்யம் : ( மலையாளம் )



                          



இது காமன்மேன்களின் வெற்றி. கேரளாவில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. வசூலில் ரெக்கார்டுகள் தேய்ந்துக்கொண்டிருக்கின்றன, சென்னையிலும் 10 வாரங்களைக் கடந்து இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் இதுவரை பார்த்த யதார்த்த சினிமாக்களில் திருவாளர் பொதுஜனங்களில் ஒருவனான நாயகனுக்கோ அல்லது அவனது குடும்பத்தில் எவரேனும் ஒருவருக்கோ அநீதி இழைக்கப்பட்டிருக்கும். அதை எதிர்த்துப் போராடுவான் நாயகன். அரசாங்கத்தையும், ஆளும் வர்க்கத்தையும் அவனால் கடைசிவரை எதிர்த்து நிற்க முடியாது. இறுதியில் சட்டத்தை தன் கையில் எடுப்பான். யதார்த்தமாக சண்டையிட்டு எதிரியைக் கொல்வான். இல்லையெனில்  நீதி கிடைக்காமலேயே சோகத்துடன் படம் நிறைவுபெறும்.

ஆனால், த்ரிஷ்யத்தில் இது எதுவுமே இல்லை. மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட திரைக்கதை சாதாரணக் கதையைக் கொண்டாட வைத்திருக்கிறது. அரசாங்கத்தையும், அடக்குமுறைகளையும் சாதாரண குடிமகன் எதிர்கொண்டு, தனது மதி கூர்மையால் எவ்வாறு வெற்றிபெறுகிறான் என்பதே திரைக்கதை. இந்த பாஸிட்டிவ் அப்ரோச் காரணமாகவே படம் பிச்சிட்டு போகுது! அதிலும் அவனது மதிகூர்மைக்கு முக்கிய காரணமாக அவன் பார்த்த திரைப்படங்கள் தான் காரணம் என காண்பிக்கப்படுகிறது. இதை படம் பார்க்கும் காமன் மேனும் தன்னுடன் ஒன்றிப் பார்க்கிறான்.

இதுவரை இந்தப் படத்தைப் பார்க்காதவர்கள் அவசியம் பாருங்கள். இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இந்திய மொழித் திரைப்படம் இது. நேட்டிவிட்டியுடன் கூடிய யதார்த்த நாயகனாக மோகன்லாலுக்கு இணையாக தமிழில் ஒருவரைக் கூட கற்பனைச் செய்ய முடியவில்லை என்பது கொஞ்சம் வருத்தமளிக்கிறது!



வல்லினம் :



                              


கிரிக்கெட்டு… கிரிக்கெட்டு… கிரிக்கெட்டுன்னு எல்லாரும் கெட்டு போறீங்களே… அதைத்தாண்டி இந்தியாவில் நிறைய விளையாட்டுகள் இருக்கு. அதையும்கொஞ்சம் கண்டுகொள்ளுங்கள். கண்டுகொள்ளாவிட்டாலும் கவலையில்லை, ஆனால் ஏளனம் செய்யாதீர்கள் என வலியுறுத்தும் கதைக்களனுக்காகவே இயக்குனரை முதலில் பாராட்டிவிடலாம்.

சில கேள்விகள் இருக்கு. இது எனது தனிப்பட்ட கேள்விகள் மட்டுமே.
முதல் விஷயம், இந்தப் படத்துக்கு காதல் அவசியமா? ஈரம் போன்ற சமரசமில்லாத படத்தைக் கொடுத்த இயக்குனர், ஏன் இந்தப் படத்தில் இவ்வளவு சமரசங்கள் செய்துகொண்டார். என்னைப் பொறுத்தவரையில் ஈரத்தில் ஏறிய கிராஃப், அதே வேகத்தில் இந்த படம் மூலம் இறங்கிவிட்டது. இதே genre –இல் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த லகானில் காதல் இருக்கும். ஆனால் நாயகனும் நாயகியும் புதியதாக சந்தித்து உயிரற்ற காதல் பார்வைகளைப் பரிமாறிக்கொண்டு காதல் வளர்ப்பதைப்போன்ற காட்சிகள் இல்லை. லகானில், காணும் காதலானது   நாயகனை மோட்டிவேட் செய்யும்.

                                  


இன்னொரு படத்தைப் பார்ப்போம். “ரொமாண்டிக்” புகழ் ஷாருக்கானின்      ‘சக்தே இண்டியா’. இதில் நாயகியே கிடையாது. ஷாருக்கானுக்கு ஒரு பாடல் கூட கிடையாது. பட்டி தொட்டியெங்கும் படம் ஹிட்.

                            


அடுத்து,  ‘ பாஹ் மில்க்கா பாஹ் ’ .

                               


                                 
ஃபரான் அக்தருக்கும் சோனம் கபூருக்கும் இடையில் மிக மெல்லிய காதல் படத்தின் இடையில் வந்து செல்லும். கவிதையைப்போல காட்சிப்பட்டிருக்கும். ஒரே ஒரு பாடல்… உள்ளம் கொள்ளைப் போகும் அதன் இசையில்! அந்தப் பத்து நிமிடங்களைத் தவிர படத்தில் காதல் காட்சிகளே கிடையாது. இதெல்லாம் காதல் இன்றி பட்டையைக் கிளப்பிய விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள். ஆனால் வல்லினத்தில் ஏன் சாத்தியப்படவில்லை? காதல் காட்சிகளையும், பாடல்களுக்கான lead காட்சிகளையும் கண்டு ரசிகர்கள் கதறி அழுகிறார்கள்.


                   

அடுத்து கதாநாயகி. உடன் இருக்கும் தோழியே லட்சணமாக இருக்கிறாரே… நாயகி தேர்வில் ஏன் இத்தனை அலட்சியம்? ஒரு தோழிக்கு, வயிற்று வலி மாத்திரை வாங்கிக்கொடுத்தால், அதனைப் பார்க்கும் மற்றொரு தோழிக்கு நாயகன் மீது காதல் வருகிறது. உங்களிடம் இருந்து இதுபோன்றதொரு காட்சியை எதிர்பார்க்கவில்லை அறிவழகன் சார்.

                              



                                                                         

தவிர, விளையாட்டுப்போட்டிகளில் அவர்களில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் முனைப்பை தெளிவாக காண்பிக்கவேயில்லை. வெறும் வசனங்களும், பார்வை மோதல்களும் மட்டுமே! நான் குறிப்பிட்ட மூன்று ஹிந்தி திரைப்படங்களிலும் வெற்றிக்காக காண்பிக்கப்பட்ட முனைப்பு இதில் இல்லை. ரசிகர்களால் வெற்றியை  குதுகளிக்கமுடியவில்லை.

கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய திரைப்படம் . கதாநாயகியாலும், காதல் மற்றும் டூயட் காட்சிகளாலும் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டது.
ஈரம் படத்தில் ரசிக்க வைத்த, சோர்வைடைச் செய்யாத திரைக்கதை மேஜிக் இதில் இல்லை. இயக்குனரின் தடுமாற்றமும், சமரசமும் நன்கு தெரிகிறது.  
நகுல் மட்டும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டார்.



300 Rise of an empire ( 3D ) :


                            


                                                                                                                                                                                                                                                                                                             

300  படத்தின் அடுத்த பாகம். கதைப்படி, முந்தைய பாகத்திற்கு முன்னர் நடக்கும் சில சம்பவங்களும், ஸ்பார்ட்டன்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்த அதே சமயத்தில் பெர்சிய கடற்படையுடன் ஏதென்ஸ் நாட்டினர் போரிட்ட சம்பங்களும் தான் இந்தப் படத்தின் கதை. மேக்கிங் மற்றும் 3D அனுபவத்திற்காக ஒருமுறைப் பார்க்கலாம். முழுப்படமும் ரத்தமும், போர்க்களமும் தான்! க்ரேக்கர்கள் மிகச்சிறந்தப் போர் வீர்ர்கள் என்பதை மீண்டும் ஒரு உணரலாம். அடுத்தபாகம் இன்னும் கொடூரமான போர்க்களமாக இருக்குமென நினைக்கிறேன்.
ட்ரீமர்ஸ் படத்தில் ரொமான்ஸில் கலக்கிய ஈவா க்ரீன், இந்தப் படத்தில் ஆக்‌ஷனில் பின்னி பெடல் எடுக்கிறார். பார்வையாலேயே மிரட்டுகிறார். அவரது கண்கள்..... அடடா...!

                              


க்ரேக்க வரலாற்றை அறிய விரும்புகிறவர்கள் கருந்தேளின் இந்த விமர்சனத்தையும் வாசித்து விடுங்கள்.






ஆதியும் அந்தமும் :


                                


நான் கலர் கரெக்‌ஷன் செய்த படம். அதனால் எந்த மாதிரியான டிட் பிட்ஸ் கொடுப்பதென தெரியவில்லை. முதல் பாதி அட்டகாசமான த்ரில்லர். இரண்டாம் பாதி வழக்கமான ஃப்ளாஷ்பேக் காதல், செண்டிமெண்ட். பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமையும், அதன் மூலம் தனிப்பட்ட ஒரு குடும்பம் அடையும் பாதிப்பையும், கருணைக் கொலையையும் வலியுறுத்துகிறது. வல்லினம் போலவே, இந்தப் படத்திலும் இரண்டாம் பாதியில் வரும் காதல் காட்சிகளும், கதாநாயகியும் ரசிகர்களின் பொறுமையைப் பெரிதும் சோதிக்கின்றன. த்ரில்லர் படங்களுக்கு ஒளிப்பதிவும் இசையும் சேர்ந்து கைகொடுக்க வேண்டும். ஒளிப்பதிவு க்ளாஸ். இசை இந்தப் படத்திற்கு பர்ஃபெக்ட். ஆனால் பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். ரெண்டு ஸ்டேட் தள்ளியிருக்கும் மும்பையில் எடுக்கப்படும் எண்ணற்ற இந்திப் படங்களும், மராத்தி படங்களும் பாடல்களே இல்லாமல் பெரும் கவனம் பெறுகின்றன. இந்த நிலை தமிழுக்கும் வர வேண்டும். தமிழ் ரசிகர்கள் நிச்சம் ஆதரவு கொடுப்பார்கள்.




ஆயிரத்தில் ஒருவன் :


                              


புரட்சித்தலைவரும்
புரட்சித்தலைவியும் முதன்முதலாக இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன்

சாந்தம் அரங்கம் நிரம்பி வழிந்தது. எம்.ஜி.ஆர் பக்தர்கள் அறக்கட்டளையை சேர்ந்த பலர் நின்றுக்கொண்டே படம் பார்த்தனர். ஐம்பதைக் கடந்த நிறைய பேர் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர்.
படம் துவங்கிய சிறிது நேரத்தில் ஒரு கும்பல் உள்ளே நுழைந்து அனைவருக்கும் ‘5 ஸ்டார்சாக்லேட் கொடுத்தனர். ஏனெனெ விசாரித்தால்,

இது சந்தோஷமான மூமெண்ட் சார்... நீங்க எல்லாரும் தலைவர் படம் பார்க்க வந்திருக்கீங்க... சந்தோஷத்தைக் கொண்டாடத்தான் இந்த ஸ்வீட்என சந்தோஷமாக கொடுத்துச் சென்றனர்.

படத்தின் வசனங்களும், பாடல்களும் தாறுமாறு...
ஒவ்வொரு பாடலையும் ஒன்ஸ்மோர் கேட்டு அரங்கை அதிரச்செய்தனர் 50+ ரசிகர்கள்.  புரட்சித்தலைவியின் காதல் சொட்டும் பார்வைக்கும், வசனங்களுக்கும் கூடுதல் பூரிப்பில் ஆரவாரப்படுத்தினர்.

எம்.ஜி.ஆர் படமொன்றை திரையில் பார்ப்பது இதுதான் முதல்முறை. அவர் ஏன் கடவுளாக இன்றளவும் கொண்டாடப்படுகிறார் என்பதை உணர முடிந்தது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒளி/ஒலி இரண்டும் புதுப்பிக்கப்பட்டு மிளிர்ந்து வீறுநடை போடுகிறார் ஆயிரத்தில் ஒருவன்.

டிஜிட்டல் என்பதை சுருங்கக்கூறின், பழைய நெகட்டிவை ஸ்கேன் செய்து அதிலுள்ள scratch, dust , pinholes போன்றவற்றை ஒவ்வொரு ஃப்ரேமாக துல்லியமாக நீக்குவதாகும். பின்னர் நவீன தொழில்நுட்பத்துடன் அதற்குண்டான வண்ணங்களைக் கொடுக்கவேண்டும்.
இது ஒரு நல்ல முயற்சி. படத்தை வெளியீடு செய்த நிறுவனமும், டெக்னிக்கல் பங்களிப்பை அளித்த பிரசாத் நிறுவனமும் நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்!

சினிமாப் பிரியர்கள் அனைவரும் அவசியம் காணவேண்டிய சித்திரம் இந்த லேட்ட்ஸ்ட்ஆயிரத்தில் ஒருவன்

2 comments: