Oct 26, 2011

உப்பு சப்பில்லாத தீபாவளி-2011

                                        டீன் ஏஜ் காலத்தில், தீபாவளி என்றால் பட்டாசு, புதுத்துணி இதையெல்லாம் தாண்டி புது படம் பார்க்க போகிறோம் என்ற சந்தோஷம்தான் அதிகமாக இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில்தான் மாஸ் ஹீரோக்கள் தங்களின் ரசிகர்களுக்கு பரிசாக புது படங்களை வெளியிட விரும்புவார்கள். இது போன்ற பண்டிகை தினங்களில் ஏழெட்டு படங்கள் ரிலீஸ் ஆனால்தான் சினிமா ரசிகர்களுக்கும் செம தீனியாக இருக்கும். காலங்காலமாக இதுதான் நடந்துகொண்டிருந்தன.

                                    இதோ, பத்து வருடங்களுக்கு ( 2001 ) முந்தைய தீபாவளியை பார்ப்போம். இந்த தீபாவளிதான் உண்மையில் சரவெடியான தீபாவளியாக இருந்தது. ரிலீசான அனைத்து படங்களும் வெயிட்டானவை. எதை முதலில் பார்ப்பது என சினிமா ரசிகனை குழம்ப வைத்த தீபாவளி அது.



ஆளவந்தான்

                                     




                      தமிழ் சினிமாவில் அதுவரை ஆளவந்தானுக்கு இருந்ததைப்போல எதிர்பார்ப்பும், விளம்பரமும் எந்த படத்திற்கும் இருந்ததில்லை. இரட்டை வேடத்தில் கமல், அதிலும் ஒரு கேரக்டர் பவர்ஃபுல் வில்லன், ஹாலிவுட்டுக்கு இணையான தொழில் நுட்பம், மிகப்பெரிய பட்ஜெட் என்று எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை உண்டாக்கியிருந்தது இந்த படம். ரொம்ப காலத்துக்கு தமிழ் நாடே "கடவுள் பாதி மிருகம் பாதி" என்றுதான் கர்ஜித்துக்கொண்டிருந்தது.   பத்து வருடங்களுக்கு முன்பு பார்த்தபோது, படத்தில் புரியாத சில விஷயங்கள் இப்பொழுதுதான் புரிகிறது எனக்கு.


 ஷாஜகான்

                                                                   


   
வெற்றிப் படங்களையே தயாரித்துக்கொண்டிருந்த சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மற்றும் விஜய் கூட்டணியில் வெளியான படம். பாடல்கள் ஏற்கனவே ஹிட்டானதால் எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.


 நந்தா

                                             




                                சேது படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பின், இயக்குனர் பாலாவின் இரண்டாவது படம். திருப்பு முனைக்காக காத்திருந்த சூர்யா, இலங்கை அகதிகள் சம்பத்தப்பட்ட கதைக்கரு என்பதால் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாகதான் இருந்தது.




தவசி


                                               




                                     கேப்டன் இரண்டு வேடங்களில் நடித்தாலே செண்டிமெண்டாக ஹிட்டாகும். இந்த படத்திலும் அப்பா-மகன் என இரு வேடம். குடும்பம், செண்ட்டிமெண்ட் என்பதால் பி & சி ஏரியாவில் பெண்கள் மத்தியில் எப்போதுமே கேப்டன் படத்திற்கு எதிர்பார்ப்பு உண்டு.




பார்த்தாலே பரவசம்


                                                




                                        இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் நூறாவது படம் என்ற ஒரே காரணம் போதும், இந்த படத்தின் எதிர்பார்ப்பிற்க்கு. சாக்லெட் ஹீரோவாக வளர்ந்து வந்த மாதவன், ஏ.ஆர்.ரகுமான் இசை போன்ற காரணங்களால் இதுவும் எதிர்பார்பிற்கு உள்ளானது.


மனதை திருடிவிட்டாய்


                                                        


                               சைலண்டாக சந்தடிசாக்கில் ஒரு ஹிட் கொடுப்பது பிரபுதேவா ஸ்டைல்.யுவனின் இசை, விவேக் வடிவேலு இரண்டு காமெடியன்களும் இணைந்து நடித்த படம். இந்த படத்தின் காமெடி, இன்னைக்கு டிவி-யில் பார்த்தாலும் சிரிப்போ சிரிப்புதான்.


                              இவற்றை தவிர, சத்யராஜ் நடித்த ஆண்டான் அடிமை, ராமராஜனின் பொன்னான நேரம், விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா மற்றும் மோனிகா நடித்த லவ் மேரேஜ் போன்ற படங்களும் தீபாவளிக்கு களமிறங்கின... சத்யராஜிக்கும், ராமராஜனுக்கும் பி & சி ஏரியாக்களில் கொஞ்சம் மார்க்கெட் இருந்த காலமது.


                          உண்மையில் அந்த தீபாவளி சினிமா ரசிகனுக்கு சரவெடியான தீபாவளியாகத்தான் இருந்தது. கல்லூரி விடுமுறையில் ஊருக்கு
( திருப்பத்தூர், வேலூர் மாவட்டம் )  சென்றிருந்ததால் முக்கிய படங்களை அங்கேயே பார்த்தாயிற்று. முதல் நாள் முதல் ஷோ மீனாட்சி திரையரங்கில் ஷாஜகான் ( ஸ்கீரினுக்கு முன்னாடி விஜயின் போட்டோவை வத்து மாலையிட்டு, கற்பூரம் கொழுத்திக்கொண்டிருந்தனர் ரத்ததின் ரத்தமான விசய் ரசிகர்கள். ஸ்கிரீன் முன்னாடி கற்பூரம் எரிந்ததால் பதறிப்போய் ஓடி வந்து கற்பூரத்தை அப்புறப்படுத்தினார் தியேட்டர் மேனேஜர்.) 


                       அன்றய தினம் இரவுக்காட்சி நியூசினிமா திரையரங்கில் ஆளவந்தான். அசத்தலான அறிமுகம் இரண்டு கமலுக்கும். நந்துவின் அறிமுகத்தின்போதுதான் தியேட்டரே அல்லோகலப்பட்டது. பத்து நிமிடங்களுக்கு நந்து என்ன பேசினார் என்றே புரியவில்லை, தியேட்டரில் அதகளம். 


                    அடுத்த நாள் முருகன் தியேட்டரில் நந்தா, அதற்கு அடுத்த நாள் கலைமகள் தியேட்டரில் பார்த்தாலே பரவசம். இரண்டு படங்களும் எங்கள் ஊர் மக்களிடம் பெரிதாக எடுபடவில்லை.


                    ராமஜெயம் திரையரங்கில் வெளியான தவசி படத்தை ஊரில் பார்க்கமுடியவில்லை.சென்னை வந்த பின் நானும், ஒளிப்பதிவு துறை சீனியர் உமாசங்கரும் உட்லண்ட்ஸ் தியேட்டரில் பார்த்தோம். எங்கள் ஊரில் மட்டுமல்ல, தமிழ் நாடு முழுவதும் தவசி படம்தான் கமர்ஷியல் ஹிட்டாக அமைந்தது. பொங்கல் விடுமுறைக்கு நான் திரும்ப ஊருக்கு செல்லும்வரை தவசி ஓடிக்கொண்டிருந்தது. 


                               Caption always Rocks at our Tirupattur


              மற்ற படங்களில் ஆண்டான் அடிமை, பொன்னான நேரம், லவ் மேரேஜ் ஆகியவற்றை இன்று வரை பார்க்கவில்லை, மனதை திருடிவிட்டாய் படத்தை தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்.


                       ஆக நண்பர்களே, பண்டிகை நாட்கள் என்றால் நான்கு பெரிய நடிகர்களின் படங்களாவது வந்தால்தான், சினிமா ரசிகர்களுக்கு உற்சாகமானதாக இருக்கும். ஒரு படத்திற்கு டிக்கெட் கிடைக்கவில்லையெனினும், அடுத்த படத்திற்கான ஆப்சன் இருக்கும். இந்த தீபாவளி உப்பு சப்பில்லாத தீபாவளியாக அமைந்துவிட்டது. இரண்டே படங்கள், அதுவும் அந்த இரண்டு படங்கள் மட்டுமே அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமித்துள்ளன. குறைந்தபட்சம் மங்காத்தாவும் சற்று தாமதமாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட்டிருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.


                    இரண்டு தமிழ் படங்களை காட்டிலும், இந்தியில் வெளியான ரா-ஒன் சற்று பரவாயில்லை என்பதே என் எண்ணமாகும். குழந்தைகளுடன் படம் பார்க்க விரும்புகின்றவர்கள் ரா-ஒன் 3D -யில் பார்த்தால் புதிய அனுபவமாக இருக்கும். என்னதான் நம்ம மக்கள் சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் எடுத்தாலும் லாஜிக்-கிலும், திரைக்கதையிலும் ஓவர் கான்ஃபிடண்ட்டாக நடந்துக்கொள்வார்கள். அதேதான் இதிலும், ஆனால் நிச்சயம் புது அனுபவமாக இருக்கும்.




                       அடுத்த தீபாவளியாவது, நான்கைந்து படங்களுடன் சினிமா ரசிகனுக்கு பெருந்தீனியாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம்.
                       

No comments:

Post a Comment