Oct 30, 2012

டார்லிங் - தெலுங்கு ( 2010 )



                                              ஒரு திரைப்படத்தை அக்குவேர், ஆணி வேராக விவரித்து விமர்சனம் எழுதுமளவிற்கு நான் அப்பாடக்கர் கிடையாது... எனும் முன்னுரையை கூறிவிட்டு தொடர்கின்றேன். நான் பார்த்து எனக்கு பிடித்த படங்களை மட்டுமே உங்களின் பார்வைக்கு கொண்டுவருவதே எனது எண்ணம். என்னைப்பொறுத்த வரையில், ஒரு திரைப்படத்தை திரையரங்கில் சென்று காணும் ரசிகன் சிறிதளவேனும் ரசித்து, படம் முடிந்ததும் சிறிதளவேனும் திருப்தியடைய வேண்டும். இந்த "திருப்தி" என்ற வார்த்தையில்தான் சூட்சமம் இருக்கின்றது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான படங்கள் பிடிக்கும். ( இங்கே திருப்திபடுத்துதல் என்பது, சினிமாவை ரசிக்கும் ரசிகர்களுக்கான திருப்தி, விமர்சர்களுக்கான திருப்தி என இரு வேறு சூழல் நிலவுகின்றது )


உதாரணத்திற்கு, ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு உணவு பிடிக்கும். ஒருத்தருக்கு பிரியாணி, ஒருத்தருக்கு சாம்பார் சாதம், ஒருத்தருக்கு தயிர் சாதம்.... ஆனால் தனக்கு பிடித்த உணவை உண்ணும்போதும் அதில் ஒரு திருப்தி வேண்டும் அல்லவா?
எனது கணிப்பில் ( நான் அப்பாடக்கர் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும் ) பிரியாணி பிரியரான ஒருவருக்கு, ஒரு உணவத்தில் சாப்பிட்ட பிரியாணி திருப்தியளித்தால்.... நிற்க.... ஆக் ஷன் பட பிரியருக்கு தான் பார்த்த ஆக் ஷன் படம் திருப்தியளித்தால், அது வெற்றிப்படம். இருப்பினும் பிரியாணி பிரியர்கள் சில நேரங்களில் சாம்பார் சாதம் அல்லது தயிர் சாதம் சாப்பிட நேரிடும். எதிர்பாராத விதமாக, அப்போது அதுவும் அவர்களுக்கு பிடிக்கும்பட்சத்தில்.... நிற்க.... ஆக் ஷன் பட ரசிகர்களுக்கும் காதல் படங்களோ அல்லது காமெடி படங்களோ பிடித்திருக்கும்பட்சத்தில், அது சூப்பர் ஹிட் படமாக அமைய வாய்ப்புள்ளது. இந்த உதாரணத்தை மாற்றி மாற்றி போட்டுக்கொள்ளலாம்.

இதுதான் திரைப்பட வெற்றியின் சூட்சமம். என்னைப்பொறுத்தவரையில் நான் ரசிக்கும் படங்களில் காதல், காமெடி, ஆக் ஷன், செண்ட்டிமெண்ட் எல்லாமும் இருக்க வேண்டும்.  ( ஆரண்யகாண்டம், வர்ணம், நாணயம், பாரதி, மோகமுள் போன்ற படங்களும் நான் மிகவும் ரசித்தவைகளே... ஆனால் எல்லா படங்களையும் அதுபோலவே எடுக்க முடியாது ) சராசரி தமிழ் ரசிகனைப் போலவே நானும் மசாலா பட ரசிகன் தான். மசாலா என்பதன் பொருள் இங்கே வேறு மாதிரி கையாளப்படுகின்றது. மூன்றாவது பத்தியில் குறிப்பிட்டதைப்போல, ஒரு திரைப்படத்தில் எல்லாமும் இருக்க வேண்டும்... எல்லாருக்கும் பிடிக்க வேண்டும். அதுதான் சூட்சமம்.



.

                  இத்தனை நீண்ட முன்னுதாரணம் ஏன் எனில், இந்த படம்
" டார்லிங் " -ன் கதைக்களம், தெலுங்கிற்கோ, தமிழுக்கோ, கன்னடத்திற்கோ, ஹிந்திக்கோ புதுசே அல்ல... காலங்காலமாக சொல்லப்பட்ட சிம்ப்பிள் கதைதான்.... சுவாரஸ்யமான காட்சி அமைப்புகள், வசனங்கள், கதாபாத்திரங்களின் தேர்வு, லோகேஷங்கள், சின்ன சின்ன ட்விஸ்டுகள் என... படம் முடிந்ததும் ரசிகர்களுக்கு முழு திருப்தியையே தந்தது.

இசை ஜி.வி.பிரகாஷ் குமார். குறைசொல்லும் படியாக எதுவும் இல்லை. பிண்ணனி இசையும் அருமை. இந்த கதைக்கு பிரபாஸ் சரியான தேர்வு...ஆறடி உயரம்... அசால்ட்டான லுக்... நிறைய இடங்க்களில் அண்டர் ப்ளே..... தேவையான இடத்தில் மட்டுமே டயலாக் என கலக்கியிருப்பார். அவருக்கு புதுமாதிரியான ட்ரெஸ் கோட் அமைத்திருப்பார்கள்... படம் பார்ப்பவர்கள் அதனை உணரமுடியும். படத்தின் முதல் பாதி சுவிட்ஸர்லாந்தில் ஃப்ளாஷ் பேக் சொல்வதைப் போல அமைக்கப்பட்டிருக்கும். அது அட்டகாசமான ட்விஸ்ட். காஜல் அகர்வால் அறிமுக காட்சியில் ஏஞ்சல் உடையில் இருப்பார். உண்மையில் ஏஞ்சல் போலத்தான் இருந்தார். ( ஹிஹிஹி )

சுவிட்ஸர்லாந்தில் நடைபெற்றதாக சொல்லப்படும் (கட்டுக்)கதை ஃப்ளாஷ் பேக்-ல் வரும் காமெடி கேரக்டர்கள், நிஜத்தில் பிரபாஸின் தந்தை பிரபுவின் நண்பர்களாக காட்டப்படுவது அட்டகாசமான க்ரியெட்டிவிட்டி....

முதல் பாதி சுவிட்ஸர்லாந்தில் காமெடி எனில், இரண்டாம் பாதியில் ஆந்திர கிராமத்தில் பட்டையைக் கிளப்பியிருப்பார்கள். கிட்டத்தட்ட நாமும் அந்த குடும்பத்தினருடன் இணைந்து சுற்றுலா சென்றதைப்போலவே உணர்வு ஏற்படும். அதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம். ஏற்கனவே அனைத்து இந்திய மொழிகளிலும் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம், இயக்குனரின் மிகத்திறமையான கிரியேட்டிவிட்டி மற்றும் கதாபாத்திர தேர்வுதான். திரைப்பட ரசிகர்களாக இந்த படம், பார்த்த அனைவருக்கும் திருப்தியையே தரும் என்பது என் நம்பிக்கை...

இந்தப்படத்தை தமிழில் எடுக்காமல் இருப்பது இன்னும் எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. அதிலும் கதாநாயகனின் ஸ்கிரீன் ப்ரெஸன்ஸ் என்ற வகையில், விஜய் நடித்தால், தமிழிலும் பம்ப்பர் ஹிட் என்பதில் துளியும் ஐய்யமில்லை.

நண்பர்களுள் எத்தனைப் பேர் பார்த்திருக்கிறீர்கள் எனத் தெரியவில்லை... பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கலாம்.
( பொழுதுபோக்கு நோக்கில் படம் பார்ப்பவர்களுக்காக மட்டுமே பரிந்துரை செய்கின்றேன். மாற்று சினிமாவிற்கான தேடலில் இருப்பவர்களுக்காக அல்ல... நீங்கள் தேடிக்கொண்டிருக்கலாம் )






No comments:

Post a Comment