Nov 2, 2012

எனக்குப் பிடித்த ஷாருக் கான்


ஷாருக்கான் படங்களைத் தொடர்ந்து பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரியும்.  பெரும்பாலும், இன்னொருவருக்கு நிச்சயமான பெண்ணைத்தான் காதலிப்பார். அல்லது அவரது காதலி முதலில் வேறு யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார். அதனை அறிந்த, தன்னுடைய இயலாமையை என்ணி வருந்துவார். நல்லவராகவே நடந்து கொள்வார். க்ளைமாக்ஸில் காதலியைக் கட்டிப்பிடிப்பார். அதற்குள் நாலு டூயட் பாடியிருப்பார். பத்து பேர்கிட்ட அடி வாங்கியிருப்பார்....

ரமணா படத்தில் ஒரு வசனம் வரும்,  “ சவுத் இண்டியண்ஸ் எல்லாரும் செண்டிமெண்டல் இடியட்ஸ்” என்று! உண்மையில் வட இந்தியர்கள் செண்டிமெண்ட்டிற்காக உயிரையே கொடுப்பார்கள் என்பது இந்திப் படங்களை பார்த்தாலே தெரியும்.  காதலில் உருகி, பெரியவர்களுக்கு மரியாதைக் கொடுத்து, உறவுகளை விட்டுக் கொடுக்காமல், வசனங்களைப் பேசி பேசியே நம்மை உருக வைப்பார்கள்....சரி.... இப்போ இது இல்லை மேட்டர். இன்னைக்கு ஷாருக்கானின் பிறந்தநாள். நான் ரசித்த ஷாருக்கானைக் குறித்த எனது பார்வைதான் இந்தப் பதிவின் நோக்கம்.அதற்காக ஷாருக்கான் பிறந்த கதை, கஷ்ட்டபட்டு படிச்ச கதை, சினிமா வாய்ப்புக்காக மும்பையில் அலைந்துதிரிந்த கதையெல்லாம் இங்கே கிடையாது. முழுக்க முழுக்க, நான் ரசித்த ஷாருக்கானின் படங்கள், பாடல்கள் பற்றி மட்டுமே சில துளிகள்...

 1980 மற்றும் 90-களில்  தூர்தர்ஷன் மட்டுமே நமக்கு இருந்த ஒரே பொழுதுபோக்கு. சென்னை வாசிகளுக்கு டிடி 2 மெட்ரோ சேனலையும் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நாட்களில் புரியுதோ இல்லையோ, தூர்தர்ஷனில் இந்தி படங்கள், பாடல்கள், நாடகங்கள் என எதையாவது பார்த்துக்கொண்டே இருப்போம். இவற்றுள் சித்ரஹார் மற்றும் ரங்கோலி மறக்கமுடியாதவை. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கும் ரங்கோலிக்காக ஏழு மணிக்கே தாயாராகியிருப்போம்.
 ( இப்போதெல்லாம் ஞாயிறு என்றாலே 12 மணிக்கு முன்பாக எழுவதில்லை )

ஒரு புதன்கிழமை மாலை நேரத்தில் சித்ரஹார் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான பாடலின்போதுதான் முதன் முதலாக ஷாருக்கானின் அறிமுகம் கிடைத்தது. கறுப்பு நிற உடையில் கண்களுக்கு கறுப்பு துணி கட்டிக்கொண்டு குதிரையில் வருவார். அந்தப் பாடல் மற்றும் பாடலின் இசை அட்டகாசமாக இருந்தது. அதுவரை கேட்டுக்கொண்டிருந்த பாடல்களைக் காட்டிலும் அந்த பாடலில் ஏதோ ஒரு பரவச உணர்வு இருந்தது. எங்கள் ஊரில் பல வருடங்களுக்கு அந்த பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.  ( எனது ஊர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் என்றாலும், சிறு வயதில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூரிலும் வசித்துள்ளோம். ஆகையால் நிறைய இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் ஒலித்த இந்தி பாடல்களைக் கேட்டு வளரும் வாய்ப்பு அமைந்தது )

பரவசமூட்டிய அந்த பாடல் இடம் பெற்ற படம்
 “ பாஸிகர் “ என்ற படத்தில் அமைந்த  “ பாஸிகர்... ஓ.... பாஸிகர்...... “ என்ற பாடல்தான்....அதே படத்தில், இன்னொரு பாடலில் ஷாருக்கான் டிஸ்கோ க்ளப்பில் பாடும் பாடலும் கவனத்தை ஈர்த்தது
 “ ஹே காலே காலே ஆங்க்கேன்.... “ என்று துவங்கும் இந்த பாடலில் ஷாருக் கானின் நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. மேலும் ஷாருக்கின் கண்களுக்கு மட்டுமே ஒளி அமைத்து, பார்ப்பதற்கு வித்தியாசமாக அமைந்திருந்தது. இதே படத்தில் இன்னொரு மெலடி பாடலான “ஹே மெரி ஹம் சஃப்ஃபர்....” என்ற பாடலும் இனிமையாக இருக்கும். ஷாருக்கின் அறிமுகபடமான  “ தீவானா “ படத்தில் இடம்பெற்ற, “ ஜானே ஜானா தீவானா...... “ என்ற பாடலும் மிகவும் பிரபலம்.


பாஸிகர் படத்தின் பாடல் இங்கே
அதற்கு அடுத்து,  “தர்” என்ற படத்தில், ” ஸாது.... தேரி நஸர்.... “ என்ற பாடலை, கைகளில் கிட்டாரை வைத்துக்கொண்டு மரத்துக்கு பின்னால் நின்று பாடிக்கொண்டிருப்பார். ஜுஹி சாவ்லா அவரை தேடிக் கொண்டிருப்பார்..... இதுவும் ஷாருக்கானை ரசிக்க காரணமாக அமைந்த பாடல். அதன்பிறகு   “ கரன் அர்ஜூன் “ என்ற படம் நினைவில் உள்ளது. ஆனால் பாடல்கள் எதுவும் நினைவில் இல்லை.1995-ம் ஆண்டு வெளிவந்த “ தில் வாலே துல் ஹல்னியா லே ஜாயங்கே ” படமும், பாடல்களும் இந்தியா முழுவதும் பிரபலமானது. அந்த படத்தின் எல்லா பாடல்களும் என்னை மிகவும் கவர்ந்தவை. ஆடியோ கேசட்டின், ஏ மற்றும் பி இரண்டு பகுதிகளிலும் அந்த படத்தின் பாடல்களை பதிவு செய்து கேட்டு கொண்டிருப்போம்....

1996-ம் ஆண்டின் பள்ளி விடுமுறையில், சென்னை வந்திருந்தபோதுதான்  “ ஈகா ” திரையரங்கில் ( 13 வயதில் ) தன்னந்தனியாக அந்தப் படத்தினை சென்று பார்த்தேன். அப்போதைய டிக்கெட் விலை ரூ.4.20/-  டிக்கெட் வாங்க கவுண்ட்டரில் நின்றுக்கொண்டிருந்தது முதல், படம் முடித்து வெளியே வந்தது வரை இன்றும் என் நினைவில் உள்ளது. அப்போது படம் வெளிவந்து 200 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. இருப்பினும் கிட்டத்தட்ட தியேட்டர் நிறைந்திருந்தது. பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், ரிப்பீட்டட் ஆடியன்ஸ்....!!! முதன் முதலாக புரியாத மொழியை, கதையுடன் ஒன்றி, பரவசமாக பார்க்க முடிந்தது....அதிலிருந்துதான் ஷாருக்கானை  மிகவும் ரசிக்கத் தொடங்கினேன்...

அதன்பின் வெளிவந்த  “ டிரிமூர்த்தி,  யெஸ் பாஸ், பர்தேஸ்” போன்ற படங்களிலும் பாடல்கள் அருமையாக இருக்கும். “ பர்தேஸ்”  படத்தில்  
“ மேரே மெஹ பூப்ஹா”  பாடல் மிகவும் பிரபலம்.

  “ தில் தோ பாகல் ஹை” - பாடல்கள் அட்டகாசமாக இருந்த இன்னொரு வெற்றிப்படம். யாஷ் சோப்ராவின் இயக்கத்தில், இளைமை துள்ளி விளையாடிய படம்.

 “ குச் குச் ஹோதா ஹை” - இந்தப் படத்தைப்பற்றியே பத்து பக்கங்களுக்கு மேல் எழுதலாம். படமும் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன... அர்த்தம் புரியாதவர்கள் கூட
“ குச் குச் ஹோதா ஹே ”  என்ற இந்தப் படத்தின் பாடலை முணுமுணுப்பார்கள். தனிப்பட்ட முறையில் நான் இந்த படத்தின் அடிமை. இதுவரை 30 முறைகளுக்கும் மேலாக பார்த்திருப்பேன்.
இந்த படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நான்கு காதாபாத்திரங்களில்,
நாமும் ஏதாவதொரு கேரக்டராக இருப்பதைப்போலவே உணர்வு ஏற்படும். இதுதான் இந்தப் படத்தின்  வெற்றிக்கு மிகப்பெரிய காரணம்.
( நான் செண்ட்டிமெண்டாக ஃபீல் பண்ணி பார்த்த படம். செண்ட்டிமெண்ட் இல்லையென்பவபர்கள், இந்தக் கருத்தில் மாறுபடலாம் )

“ தில் சே “ படத்தின் பாடல்களும் அதகளமாக இருக்கும். எங்கள் ஊர் முருகன் திரையரங்கில்,  ‘தைய்யா தைய்யா’ பாடலை மூன்று முறை ஒளிபரப்பினார்கள்.  பாடல்கள் ஹிட்டான அளவிற்கு படம் ஓடாதது சிறிது வருத்தமே!

குச் குச் ஹோதா ஹை - அட்டகாசமான மெலடி

தில் சே பாடல்
அதன் பின் வெளிவந்த, பாட்ஷா, மொஹபத்தின், ஜோஷ் போன்ற படங்களும் கவனம் ஈர்த்தன. பின்னர் வந்த “ அசோகா “ வரலாற்றுப்பிண்ணனியில் எடுக்கப்பட்டிருக்கும். பாடல்களும் நன்றாக இருந்தன. அதன் பின் வந்த “ கபி குஷி கபி கம் “ இன்னொரு செண்டிமெண்ட் படம்...இந்தியாவைக் காட்டிலும் மற்ற நாடுகளில்தான் சக்கைப் போடு போட்டது.   ”தேவதாஸ்” - பிரமாண்டத்தின் உச்சம்! தொடர்ந்து வந்த, “ சல்தே சல்தே, கல் ஹோ நா ஹோ , மெஹ்ன் ஹூன் நா,  வீர் சாரா, ஸ்வதேஷ் “ போன்ற படங்களின் பாடல்களும் அருமையாக இருக்கும். வர்த்தக ரீதியாக இந்த படங்களும் வெற்றி பெற்று, பாலிவுட்டின் முடிசூடா மன்னன் என்ற அந்தஸ்த்திற்கு உயர்ந்தார்.

அடுத்த வந்த “ பெஹலி “ படத்தை சற்று பொறுமையாகத்தான் பார்க்க வேண்டும்! மீண்டும் கரன் ஜோஹருடன் இணைந்த ” கபி அல்விதா நா கெஹனா “ படத்தில், வழக்கம்போலவே பாடல்கள் அருமையாக இருந்தன. படம்தான் குழப்பமாக இருக்கும். படம் முழுவதும் மொத்தமே ஆறு கேரக்டர்கள்... மாறி மாறி பேசிக்கொண்டே இருப்பார்கள். அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனும் இணைந்து நடித்ததால் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. இந்தியாவை விட வெளி நாடுகளில் வசூலை அள்ளியது. நம்ம ஊரு ஆளுங்களுக்கு கொஞ்சம் பிடிக்காமல் போனதற்கு கதைக்களம் ஒரு காரணமாகும்!

அடுத்து வந்த “ டான் “ முழுக்க முழுக்க ஷாருக்கானின் ரசிகளுக்கான படம். பாடல்களும் நன்றாகத்தான் இருந்தன. அதிகப்படியான ட்விஸ்ட், படத்தின் நீளம் போன்றவை சலிப்படைய வைத்தன. ஆனால் ஷாருக்கின் ரசிகனாக எனக்கு பிடித்திருந்தது. பின்னர் வந்த ” சக் தே இந்தியா “ படத்தைப் பற்றி சொல்லத்தேவையில்லை. இந்தியா 20/20  கிரிக்கெட் உலகக்கோப்பையை முதல் முறையாக வென்றபொழுது இந்த படத்தின் பாடல் தான் இந்தியாவின் அனைத்து தொலைகாட்சிகளிலும் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தது. ஜோடி இல்லாத, ஃபாரீன் டூயட் இல்லாத, ரொமாண்டிக் காட்சிகள் இல்லாத ஷாருக்கானை இந்தப் படத்தில் காணமுடிந்தது....
அதன்பின்பு வந்த “ ஓம் ஷந்தி ஓம் “ பகடியின் உச்சம். தீபிகா படுகோனே அறிமுகமான படம். காமெடி, ரொமான்ஸ், செண்ட்டிமெண்ட்... என கலக்கியிருப்பார்கள். அதன் பின்னர் வந்த  “ ரப் நே பணா தி ஜோடி “-யும் காமெடி, ரொமான்ஸ், செண்ட்டிமெண்ட் நிறைந்த படம். படமும் பாடல்களும் ஹிட். ஷாருக்கானின் ஹேர் ஸ்டைல், ஃபன்னி வாக், டயலாக் டெலிவரி-க்காக ரொம்பவே மெனக்கெட்டிருப்பார்கள்.

” மை நேம் ஈஸ் கான் ” இன்னொரு செண்ட்டிமெண்ட் படம். பல வருட இடைவெளிக்கு பிறகு கஜோலுடன் இணைந்த படம். 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால், அமெரிக்கவாழ் முஸ்லீம்கள் என்னமாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றார்கள் என்பதைப் பற்றின படம். கொஞ்சம் பொறுமையாகத்தான் பார்க்க வேண்டும். தலை சாய்த்து, ஒரு பக்கமாக திருப்பி, திருப்பி “ Mr. President, My Name is Khan, but I am not a Terrorist " என்று படம் முழுவதும் இவர் கூறும் வசனம் பிரபலம்....

அதன்பின் வந்த  “ ரா- ஒன் “ வீண் முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். உடனடியாக வெளிவந்த “ டான் 2 “ வழக்கம்போலவே ஷாருக்கின் ரசிகர்களுக்கானது.
அடுத்த வாரம், தீபாளியன்று வெளிவரவிருக்கும் “ ஜப் தக் ஹேய் ஜான் “
படத்தின் பாடல்கள் ஏற்கனே ஹிட் ஆகிவிட்டன. இசை ஏர்.ஆர்.ரகுமான். நீண்ட இடைவெளிக்கு பிறகு யாஷ் சோப்ராவின் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்த படம், வரும் முன்னரே யாஷ் சோப்ர இறக்க நேர்ந்தது மிகவும் வருத்தமான நிகழ்வாகும். ஷாருக்கானின் வெற்றி வரலாற்றில் யாஷ் சோப்ராவிற்கும் மிகப்பெரிய பங்களிப்பு உண்டு!

இந்தி சினிமாவைப் பொறுத்த வரை, ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர் கான் என மூன்று கான்களின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. மற்ற இரண்டு கான்களும் எனக்கு பிடிக்குமென்றாலும், ஷாருக்கான் கொஞ்சம் கூடுதலாக பிடிக்கும்.

 பத்திரிகையாளர் ஒரு முறை ஆமீர் கானை பேட்டி கண்டபோது,
 “ ஷாருக்கிடம் ஒரு கேள்வி கேட்க நேர்ந்தால், என்ன கேட்பீர்கள் “ என கேட்டார். அதற்கு ஆமீர் கான், ” இரண்டாவது இடத்தில் இருப்பதைப் பற்றி உங்களுக்கு கவலையில்லையா “ என கேட்பேன் என்றார். இது குறித்து ஷாருக்கிடம் கருத்து கேட்டபொழுது, “ ஆமீருக்கு என் நன்றிகள்...   அட்லீஸ்ட் எனக்கு இரண்டாவது இடமாவது கொடுத்திருக்கார் “ என்றார் சிரித்தவாரே!ஷாருக்-கஜோல் பாலிவுட்டின் மிகப்பிரபலாமான காம்பினேஷன்! ஷருக்கான் யாருடன் நடித்தாலும் பர்ஃபெக்ட்டாக பொருந்துவது இன்னொரு ப்ளஸ் பாய்ண்ட்....

 பாலிவுட்டின் பாட்ஷா என அமிதாப் பச்சனால் புகழாராம் சூட்டப்பட்ட, ஷாருக்கானுக்கு இன்று 47-வது பிறந்தநாள். வாழ்த்துக்கள் ஷாருக்!
தீபாவளிக்காக வையிட்டிங்!

பின்குறிப்பு :
இன்று காலை, ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் ஷாருக்கானின் பிறந்தநாள் என்று வாழ்த்துக்களை பகிர்ந்திருந்தார். அதன் பின்னரே நான் ரசித்த ஷாருக் பற்றி ஏதாவது சொல்லலாம்ன்னு, எந்தவித ப்ரப்ரேஷனும் இன்றி, ஒவ்வொன்றாக  யோசித்து யோசித்து எழுதியிருக்கேன்...
ஏதாவது முக்கிய படங்கள் விடுபட்டிருக்கலாம், அல்லது வரிசை மாறியிருக்கலாம்!

One of the beautiful romantic scene

DARR SONG

இன்னொரு அட்டகாசமான பாடல்

jab tak hai jaan - trailer

1 comment:

  1. யெஹ் பந்தன் ஹோ..ப்யார் கா பந்தன் ஹை..ஜென்மோ கா சங்கமு ஹை..இது கரன் அர்ஜூன் படத்தில் இடம்பெற்று மிகவும் புகழ் பெற்ற பாடல்..

    ReplyDelete