Nov 11, 2012

இரண்டு திரைப்படங்கள்...இரண்டு திரைப்படங்கள்...

( விமர்சனம் அல்ல, எனது அனுபவங்கள் )

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் இரண்டு திரைப்படங்களை இன்று பார்த்தேன்.
( தொழில் நிமித்தமாக ஒரே நாளில் நான்கு படங்களைக் கூட பார்த்துள்ளேன். ஆனால் கமர்ஷியல் திரையரங்கிற்கு சென்று பார்ப்பது தனி அனுபவம்தானே? )

கடைசியாக, 2003-ம் ஆண்டு தீபாவளீயன்று, காலையில் ”ஆஞ்சனேயா “, மாலையில் “ திருமலை “ என இரண்டுத் திரைப்படங்களைப் பார்த்தேன். அதன்பிறகு அதுபோன்ற ரிஸ்க் எடுப்பதை தவிர்த்துவிட்டேன்.

பீட்சா:

காலையில் கமலா திரையரங்கில் “ பீட்சா “ பார்த்தேன். முதல் ஐந்து நிமிடங்களை தவறவிட்டுட்டேன்.... இருந்தாலும் அதன் பாதிப்பு எதுவும் தெரியவில்லை. பொதுவா படம் பார்க்கும் முன்பு அந்த படத்தைப் பற்றின விமர்சங்களை படிச்சிட்டுதான் பார்ப்பேன். ஒரு சில படங்களே விதிவிலக்கு! ( திரை விமர்சனத்திற்காக மட்டுமே பத்து பதினைந்து வலைப் பதிவர்களை ஃபாலோ செய்துக்கொண்டிருக்கின்றேன் )

திகில் படங்கள் மீது எனக்கு பெரிய ஈடுபாடே கிடையாது. அனைத்தும் ஒரே மாதிரியாக பழிவாங்கும் படமாகவே இருக்கும். ஒரே மாதிரி முக பாவனைகளைக் காட்டிக்கொண்டிருப்பார்கள்....

“ அந்த ரூமில் பேய் இருக்கு... அப்டியே பயந்து பார்த்துட்டே
போகணும் “-னு டைரக்டர் சொன்னதும், கதாபாத்திரங்களும் அதற்கேற்ப பயந்து பயந்து செல்வார்கள்!
ஈடுபாட்டுடன் பயந்துகொண்டே பார்த்த படம் ராம்கோபால் வர்மாவின்
“ பூத் “ -தான்! படம் பார்த்துவிட்டு, ஹாஸ்டல் அறையில் தனியாக படுக்க பயந்து, நண்பர்களுடன் சேர்ந்துதான் படுத்தேன். அதன்பிறகு ரசித்துபார்த்த திகில் படம் “ஈரம்”. பீட்சா-வை பொறுத்தமட்டில் இரு வேறு விமர்சனங்களை படித்தேன். தமிழில் நல்ல முயற்சி, அட்டகாசமான படம் என்றும், அடுத்ததாக கடைசி இருபது நிமிடங்கள் தான் மொத்த படத்தையும் தாங்கிப்பிடிக்கிறது. அதுவரை ஒன்றுமேயில்லை என்றும் இருவகையான விமர்சனங்களைப் படித்தேன்.

எனது கருத்து இதுதான்..... இதுவரை உலகத்தில் எடுக்கப்பட்ட எந்தபடமாக இருந்தாலும், க்ளைமாக்ஸை நோக்கியே பயணிக்கும். முடிவை எவ்வாறு கொண்டுசெல்வது என்பதில்தான் இயக்குனர்கள் மண்டையை குடைந்துக்கொண்டிருப்பார்கள். க்ளைமாக்ஸின் பத்து இருபது நிமிடங்களுக்காத்தான் நாம் முழுபடத்தையுமே பார்த்துக்கொண்டிருக்கின்றோம். சில படங்களை முடிவு தெரிந்தபின்னரும் கொடுத்த காசுக்காக பார்த்துத் தொலைப்போம்!

பீட்சாவைப் பொறுத்தவரை எனக்கு எந்த அலுப்புமே தட்டவில்லை. ஒரு கட்டத்திற்கு பின்னர், க்ளைமாக்ஸில் நிச்சயமாக வேறுமாதிரியான ட்விஸ்ட் இருக்குமென எதிர்பார்த்தேன்... அதுபோலவேதான் நடந்தது. சினிமா - டீம் வொர்க் என்பது அனைவரும் அறிந்ததே. ப்ரீ ப்ளான் ( Pre - Plan ) மிகவும் முக்கியம். அந்த வகையில் இந்தப்படம் 100% வெற்றியடைந்துள்ளது. சிற்பத்தைப்போல செதுக்கியுள்ளார்கள். இதுக்கும் மேலாக என்ன சொல்வதென்று தெரியவில்லை.

டெக்னிக்கலாக,

இந்த படம் ரெட் டிஜிட்டல் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக டிஜிட்டல் கேமராக்களில் ஃபிலிமிற்கு இணையான தரம் கிடைக்காது. “ ரெட் “ கேமராவைப் பொறுத்தமட்டில் Outdoor -ஐ விட Indoor ரிஸல்ட் நன்றாக இருக்கும். இந்தப் படம் 90% Indoor -ரிலேயே நிகழ்வதால் ஒளிப்பதிவு அட்டகாசமாக அமைந்துள்ளது. அதற்க்காக மிகவும் மெனக்கெட்டுள்ளனர் என்பது படம் பார்க்கும்போது தெரிகின்றது. டெக்னிக்கல் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

தியேட்டர் டிஸ்கி :

கமலா திரையரங்கம் புத்தம் பொலிவுடன் 2K டிஜிட்டல் புரொஜக்டரில் மிளிர்கின்றது. டிஜிட்டல் புரொஜக்டர்களைப் பொறுத்தவரையில் 2K தரத்தில் இருந்தால்தான் கலர் மற்றும் ப்ரைட்னஸ் ( color & Brightness ) பார்வையாளனுக்கு திருப்தியைத்தரும். “ சத்யம் “
“ எஸ்கேப் “ போன்ற திரையரங்குகளில் படம் பார்த்தவர்களுக்கு அந்த வித்தியாசம் தெரியும். அந்த வகையில் கமலாவில் இனிமேல் தைரியமாக படம் பார்க்கச் செல்லலாம்! ( “ ஃபிலிமிலிருந்து டிஜிட்டல் ” - தனிப் பதிவாக விரைவில் )

ஸ்கைஃபால் :

இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களிலேயே எனக்கு மிகவும் மொக்கையாகத் தோன்றிய படம் இதுதான். இதற்கு பதிலாக ”பீட்சா”-வை ஆங்கிலத்தில் மொழிமாற்றும் செய்து ஹாலிவுட்டில் ரிலீஸ் செய்திருக்கலாம் போல! இல்லைன்னா “ கேப்டன் “ அல்லது “ ஆக்‌ஷன் கிங் “ -ஐ நடிக்க வைத்திருந்தால் குறைந்தபட்சம்
Madam " M "-ஐயாவது காப்பாற்றியிருக்கலாம்...
படத்தைப் பற்றி வேறென்ன சொல்ல?

தியேட்டர் டிஸ்கி :

ஆங்கலப் படங்களை தமிழில் மொழிமாற்றம் செய்த திரையரங்குகளில்தான் நான் பார்ப்பேன். மிகவும் பிடித்திருந்தால் இன்னொரு முறை ஆங்கிலத்தில் சத்யம் அரங்கில் பார்ப்பேன்.( உண்மையான தரத்தைக் காண்பதற்காக ) அந்த வகையில் இந்தப் படம் தமிழில் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டரான “காசி”-யில் பார்த்தேன். காசியில் கடந்த முறை பார்த்த “ பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் - பாகம் 4 “ -ன்போது மிக மோசமான அனுபவமே நேரிட்டது. டி.டி.எஸ் டிஸ்க் வேலை செய்யாததால் மோனோ ஒலியுடனே படமிட்டர்கள். ஒவ்வொரு முறை கார்பன் மாற்றும்பொழுதும், 30 -40 நொடிகள் இருட்டான பின்பே மாற்றினார்கள். ஒரு புரொஜக்டர் நீலமாகவும், இன்னொரு புரொஜக்டர் பச்சையாகவும் வண்ணம் தெரியும். கோடி ரூபாய் கொடுத்தாலும் இனி இந்த தியேட்டருக்கு வரக்கூடாது என முடிவெடுத்துவிட்டேன்.

அதன்பின்பு ” நண்பன் “ படத்தின்போது டிஜிட்டல் புரொஜக்ட்டருக்கு மாறிவிட்டனர் என்று தெரிந்தபின்னரே சென்றேன். அந்த நம்பிக்கையில்... நம்பி..... இந்தப்படத்திற்கும் சென்றுவிட்டேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது :-(

முதல் இரண்டு நிமிடங்களுக்கு சப்தமே வரவில்லை. அதன் பிறகு பயங்கர சப்தத்திடன் ஒலி கேட்டது. சிறிது நேரத்தில் அதுவும் நின்றுவிட்டது. கதாபாத்திரங்கள் பேசுவது கேட்காமல், சர்ரவுண்ட் ஒலி மட்டுமே பத்து நிமிடங்களுக்கு கேட்டது. ரொம்பவே கடுப்பாகி, வெளியே நின்றிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் முறையிட்டேன். அவர் ஆபரேட்டருக்கு ஃபோன் செய்தார். ஆபரேட்டர் ஃபோனை எடுக்கவில்லை. மேனேஜரிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறிவிட்டார். கீழிறங்கி மேனேஜரிடம் சொல்லவே, உடனடியாக கேபினுக்கு ஓடினார். படம் நிறுத்தப்பட்டது. ஐந்து நிமிட பரிசோதனைக்குப் பின்னர், மீண்டும் டி.டி.எஸ் ஒலியுடன் முதலில் இருந்து படம் ஓட்டப்பட்டது. படம் முடிந்ததும் நானும் தலை தெறிக்க ஓடி வந்துட்டேன்....

திருட்டு டிவிடியில் படம் பார்ப்பது எனக்கு பிடிக்காது. இருந்தாலும் சொல்கின்றேன்... 130 ரூபாய் செலவு செய்து இதுபோன்ற திரையரங்குகளில் படம் பார்ப்பதைவிட 30 ரூபாய் திருட்டு டிவிடியில் 5.1 ஒலியுடம் படம் பார்ப்பது எவ்வளவோ மேல்!

No comments:

Post a Comment